‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 31

[ 14 ]

வங்கத்தின் வடமேற்கே கங்கையை கந்தகி ஆறு சந்திக்கும் இடத்தில் பரந்து அமைந்திருந்த நூற்றியிருபது சிற்றூர்கள் கொண்ட குறுநாடு அங்குள்ள வெண்நாணல்பரப்பின் பொருட்டு புண்டரம் என்று அழைக்கப்பட்டது. முன்பு கிரிவிரஜத்தை ஆண்ட நிஷாதகுலத்தரசன் வாலியின் ஐந்து மனைவியரில் மாமுனிவராகிய தீர்க்கதமஸுக்குப் பிறந்த நான்கு மைந்தர்களால் அங்கம் வங்கம் கலிங்கம் சுங்கம் புண்டரம் என்னும் நாடுகள் அமைந்தன. கோரைப்புல் கொய்து மீன்பிடிக்கும் கூடைசெய்து வாழும் மச்சர்குலத்தில் பிறந்து வாலியின் அரசியாக ஆன பானுப்பிரபையில் பிறந்த மைந்தனுக்கு மீனவக் குடிகளன்றி பிறர் வாழா சதுப்பு நாடு பிற நால்வராலும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அவன் புண்டரன் என்று அழைக்கப்பட்டான்.

கந்தகி சேற்றுமணம் சுமந்து ஒழுகும் பெருநதி. அதன் படுகையில் கோரைப்புல்வெளிகளுக்கு நடுவே மூங்கில்கழிகளை சதுப்பில் ஆழ ஊன்றி முனைபிணைத்துக் கட்டி உருவாக்கப்பட்ட கூம்புக் குடில்களில் வாழ்ந்த மீனவர்கள் நாணல்களைப் பின்னி உருவாக்கிய படகுகளில் சென்று சிற்றோடைகளில் மீன்பிடித்தனர். சதுப்பில் துஞ்சிய முதலைகளை வேட்டையாடி அவ்வூனை உண்டனர். அவர்கள் கொண்டு விற்கும் முதலைத்தோலிற்கு சந்தைகளில் மதிப்பு உருவாகத்தொடங்கியபோது காலப்போக்கில் புண்டரம் ஒரு சிறுநாடென ஆயிற்று. வங்கத்திற்கு திறை கொடுத்து பணிந்து அது வாழ்ந்தது.

எண்பத்தேழாவது புண்டர மன்னன் வசுவின் எட்டாவது மைந்தனாகப் பிறந்தவன் கன்னங்கரிய நிறமுடையவன் என்பதால் கிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டான். வசுவின் இறப்புக்குப்பின் அவர் முதல் மைந்தன் வஜ்ரபாகு வங்கத்தைப் பணிந்து ஆணைபெற்று முடிசூடி புண்டரத்தை ஆண்டான். அவன் அமைத்த நகரம் புண்டரிகவர்த்தனம் என்றழைக்கப்பட்டது. நகரைச்சூழ்ந்து சதுப்புமரங்களாலான கோட்டை ஒன்றை அமைத்து நடுவே மூன்றடுக்கு அரண்மனை ஒன்றை கட்டினான். பொன்னில் பன்னிரு இலைகளைக்கொண்ட முடி ஒன்றைச்செய்து அணிந்தான். அவையில் புலவரும் சூதரும் வந்து பாடி பரிசில் பெற்றுச்சென்றனர். கந்தகிக்குள் நான்கு படகுத்துறைகளையும் கங்கைக்குள் நடுத்தரக் கலங்கள் அணையும் துறைமுகம் ஒன்றையும் அவன் அமைத்தான்.

கடல்வணிகம் உருவாகி தாம்ரலிப்தி பெருநகராக ஆனபோது அதன் உரிமையின்பொருட்டு கலிங்கத்திற்கும் வங்கத்திற்கும் நடந்த போரில் வங்கத்தின் சார்பாக மச்சர்படை ஒன்றுடன் சென்று பொருதினான் வஜ்ரபாகு. அப்போரில் வங்கம் தோற்கடிக்கப்பட்டபோது களத்தில் வில்லுடன் விழுந்து மடிந்தான். வங்கத்தை வென்று எரிபரந்தெடுத்த கலிங்கப்படைகள் கங்கையினூடாக வந்து புண்டரநாட்டில் பரவின. நகரம் எரியூட்டப்பட்டது. பொருதி மடிந்தனர் ஆண்கள். கலிங்கர் மச்சர்குலத்துப் பெண்டிரையும் குழந்தைகளையும் பிடித்து அடிமைகளாக கொண்டு சென்றனர்.

மூங்கில் கழிகளின்மேல் மரப்பட்டைகளால் கட்டப்பட்ட இல்லங்கள் கொண்ட புண்டரிகவர்த்தனம் கலிங்கர்களால் எரித்து சாம்பலாக்கப்பட்டது. தன் உடன்பிறந்தார் கலிங்கத்துடனான போரில் வெட்டி வீழ்த்தப்படுவதை ஆறுவயதுச் சிறுவனாகிய கிருஷ்ணன் கோரைப்புதர் மறைவுக்குள் அமர்ந்து கண்டான். அவன் உடல் நடுங்கி சிறுநீர் ஒழுகியது. பின்பு நீந்தி மேலெழுந்து நோக்கியபோது தன் ஊர் பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டான். மேலே வந்தபோது கோரைப்புற்களில் ஒளிந்தும் சதுப்பில் மூழ்கியும் உயிர்பிழைத்த அவனது குடிகள் நெஞ்சிலும் தலையிலும் அறைந்து கதறி அழுது கொண்டிருந்தனர். அவனைக் கண்டு எவரோ கைசுட்டி அணுகுவதைக் கண்டதும் அலறியபடி அவன் அவரை நோக்கி ஓடினான். செல்லும் வழியிலேயே கீழே விழுந்து வலிப்பு கொண்டான்.

கலிங்கம் வங்கத்தை முற்றாக அடக்கி ஆண்டபோது காட்டுக்குள் புண்டரீகர் மீண்டும் மெல்ல ஒருங்குதிரண்டனர். அதன் தலைவனாக அவர்கள் கிருஷ்ணனை தேர்வுசெய்தனர். அவன் தொடர்ந்து துயிலில் அஞ்சி சிறுநீர் கழித்தபடி எழுந்து கூச்சலிடுபவனாகவும் சினமோ உளஎழுச்சியோ ஏற்பட்டால் வலிப்பு கொள்பவனாகவும் வளர்ந்தான். வங்கமன்னன் சுபூதன் மறைந்து அவன் மைந்தன் சுகீர்த்தி அரசமைத்தபோது கலிங்கத்தை வங்கம் வென்று விடுதலைகொண்டது. அப்போது பதினெட்டு வயதடைந்திருந்த கிருஷ்ணன் எழுபதுபேர் கொண்ட சிறிய படை ஒன்றை நாணல்படகில் ஏற்றிக்கொண்டு சென்று புண்டரிகவர்த்தனத்தில் கலிங்கர் அமைத்திருந்த காவல்தளத்தை சூழ்ந்துகொண்டான். சதுப்பிலிருந்து அவ்வீரர்கள் வெளியேறும் வழியை எரித்தபின் உள்ளே சென்று கலிங்கப்படைநிலையை கைப்பற்றினான்.

அடிபணிந்து படைக்கலம் தாழ்த்தியபின்னரும் கலிங்கர்களை அவன் படைகள் வெட்டிக்குவித்தன. எரிந்தழிந்த மூங்கில் கழிகளால் ஆன தன் நகரை கைப்பற்றி மீண்டும் அங்கு இல்லங்களை எழுப்பினான். அதன்பின்னர் பல ஆண்டுகாலம் அவன் கலிங்கர்களை கொன்றபடியே இருந்தான். இருளுக்குள் ஓசையின்றி சிறியபடைகளாக நாணல்படகுகளில் ஏறிச்சென்று கங்கையில்செல்லும் கலிங்கப்படகுகளை அடைந்து அப்படகுக்குள் நச்சுப்புகை விடும் கலங்களை எறிந்துவிட்டு மீண்டன புண்டரப்படைகள். கலிங்க நகர்களில் ஒற்றர்களை அனுப்பி சதுப்பிலிருந்து சேர்க்கப்பட்ட நச்சை குடிநீர் ஊருணிகளில் கலந்தான். அவன் பெயரை ஐந்துநாடுகளும் அச்சத்துடன் சொல்லத் தொடங்கின.

வங்கனின் ஆதரவு அவனுக்கிருந்தமையால் விரைவிலேயே அவன் அஞ்சத்தக்கவனாக ஆனான். கங்கைப்படகுகள் அவனுக்கு சுங்கம் கொடுக்கத் தொடங்கின. கருவூலம் பெருகவே அவன் நகர் வளர்ந்தது. அங்கே துறைமுகம் மீண்டும் எழுந்து சந்தை உருவாகியது. கிருஷ்ணன் மீண்டும் மணிமுடி செய்து சூட்டிக்கொண்டான். கவிஞரும் சூதரும் கொண்ட அவை ஒன்றை அமைத்தான். வங்கம் அவனை அஞ்சத்தொடங்கியது. அவனிடம் அவர்கள் கோரிய கப்பம் ஒவ்வொருநாளும் கூடிவந்தது. ஒருநாள் கங்கைவழியாகச் சென்ற வங்கத்தின் கலங்களை கிருஷ்ணன் சூறையாடினான். அன்றே காணிக்கை பொருட்களுடன் படகிலேறி மகதத்திற்குச் சென்று மகத மன்னன் விருகத்ரதனைக் கண்டு அடிபணிந்து தன்னை சிற்றரசனாக ஏற்கவேண்டுமென்று கோரினான்.

கங்கை மேல் படைபரப்பி வந்த மகதம் கோரைப்புல்சதுப்பை ஆளும் புண்டரர்களின் ஆதரவை விரும்பியது. மகதத்தின் துணைப்படையுடன் திரும்பி வந்த கிருஷ்ணன் தாம்ரலிப்தியை தாக்கி அதன் வணிகக்கலங்களை கைப்பற்றினான். வங்கம் மகதத்திற்கு பணிந்தது. வங்கத்தின் கடல்முகம் வரை புண்டரத்தின் கொடிகொண்ட காவல்படகுகள் தடையின்றிச் சென்று சுங்கம் கொள்ளத்தொடங்கின. கிருஷ்ணன் புண்டரிகவர்த்தனத்தை முழுதெழுப்பி சுற்றிலும் நீர் மரங்களாலான வலுவான கோட்டை ஒன்றை அமைத்தான். அங்கு வாசுதேவன் என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டான். மகதத்தின் வணிகம் வாசுதேவனை நாளுமென வளரச்செய்தது. மகதப்படகுகள் புண்டரநாட்டின் எல்லையைக் கடந்து வங்கத்திற்கும் கலிங்கத்திற்கும் செல்லும்போது படைத்துணையாக விரைவு மிக்க விற்களுடன் புண்டரர் சென்றனர்.

வாசுதேவன் என்ற பெயர் வணிகர் நாவில் திகழவேண்டும் என்பதற்காக புண்டரம் அப்பெயருடன் கூடிய பொன்நாணயங்களை வெளியிட்டது. அப்போதுதான் யவன வணிகர் ஒருவரிடமிருந்து துவாரகை எனும் நகரம் மேற்கே எழுந்திருப்பதை அவன் அறிந்தான். அங்கிருக்கும் இளையோனை அவர்கள் வாசுதேவ கிருஷ்ணன் என்று அழைப்பதாகச் சொன்ன வணிகன் அவனை வணிகர்கள் பௌண்டரிக வாசுதேவன் என்று குறிப்பிடுவதாக சொன்னதைக் கேட்டு சினம் கொண்டு எழுந்து கையிலிருந்த ஓலையை நிலத்தில் வீசி சொல்லெழாமல் நா திணற நடுங்கினான். “வடமேற்குப்புலம் முழுக்க அவ்விளையோனை பாரதவர்ஷத்தை முழுதாளவிருப்பவன் என்கிறார்கள் அரசே” என்று அயல்சூதன் சொன்னதைக் கேட்டபோது கழுத்துத்தசைகள் இழுத்துக்கொள்ள வலிப்பு கொண்டு மண்ணில் விழுந்தான்.

“பாரதவர்ஷத்தின் வாசுதேவன் என்பான் ஒருவனே. என் பெயர் கொண்டு நடிக்கும் அவ்வீண்சிறுக்கனை ஒரு நாள் களத்தில் காண்பேன்” என்று அவன் தன் அவையில் வஞ்சினம் உரைத்தான். அவனுடைய தூதர்கள் துவாரகைக்குச் சென்று இளைய யாதவன் தன் பெயரை வாசுதேவன் என்று வைத்துக் கொள்ளலாகாது என்று ஆணையிட்டனர். “என் தந்தை பெயர் வசுதேவர் என்பதனால் என்னால் அப்பெயரை மாற்ற முடியாது தூதர்களே” என்று மெல்லிய இளிவரலுடன் துவாரகைத் தலைவன் மறுமொழி சொன்னான். “தந்தைக்கு மைந்தர் பெயரிடும் வழக்கம் துவாரகையில் இல்லை.”

பௌண்டரிக வாசுதேவன் ஒவ்வொரு நாளும் துவாரகையின் வாசுதேவனின் புகழ் வளர்வதை தன்னைச்சுற்றி கண்டான். எப்படியோ எவரோ அவனைப்பற்றி சொல்ல அவன் பெயர் நாளும் காதில் விழுந்தது. வணிகர் அவன் நகரைப் புகழ்ந்தனர். சந்தைகளில் துவாரகையின் சங்காழி பொறித்த நாணயம் பெருமதிப்புடன் பெறப்பட்டது. கடற் சூதர்களின் மொழியில் ஒவ்வொருநாளும் அவன் வளர்ந்துகொண்டே இருந்தான். தன் அவையமர்ந்து துவாரகையிலிருந்து வந்த சூதனொருவனின் சொல்லில் இளைய யாதவனின் வெற்றியையும் புகழையும் கேட்டுக்கொண்டிருந்த பௌண்டரிக வாசுதேவன் அரியணையில் ஓங்கி அறைந்தபடி சினத்துடன் எழுந்து நின்றான். அவன் ஒரு கண் கலங்கி கன்னத்தில் வழிய இதழ்கோணலாகி முகம் இழுபட்டது. அவன் விழக்கூடும் என்றுணர்ந்த அமைச்சர் விழிகாட்ட ஏவலர் அவனை பிடித்து கொண்டுசென்றனர்.

அவனைத் தொடர்ந்து வந்த அமைச்சர் சரபர் “அரசே, இறுதி வெற்றி எவருக்கென்பதே வரலாற்றில் எவர் என்பதை முடிவுசெய்கிறது. மகதம் பாரதவர்ஷத்தை வெல்லும் என்பதில் ஐயமில்லை. அது இளைய யாதவனின் குருதியின் மீதுதான் நிகழும். மகதத்தின் எளிய நிஷாதகுலப் படைத்தலைவன் ஒருவனுக்கு அஞ்சி அரும்பாலையைக் கடந்து அப்பால் தன் அரசை அமைத்துக் கொண்டவன் எவ்வகையிலும் வீரனல்ல. என்றேனும் ஒருநாள் அவன் நகரில் சேர்த்து வைத்திருக்கும் பெரும்செல்வம் மகதத்தின் காலடியில் குவியும். அங்கு நாமும் வெற்றித்துணையாக இருப்போம். அப்போது அவ்விளையோன் சேர்த்து வைத்துள்ள அத்தனை புகழ்கதைகளும் நம் காலடியில் குவியட்டும்” என்றார்.

பௌண்டரிக வாசுதேவன் மஞ்சத்தில் எழுந்தமர்ந்து “அது எப்படி?” என்றான். “தாங்களும் அவனே ஆகுக! தங்கள் பெயர் கிருஷ்ணன், தாங்கள் வாசுதேவனும்கூட. பீலிமுடியும் ஆழிவெண்சங்கும் அவன் மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. அப்புகழ்மொழிகள் அனைத்தும் உங்களுக்கும் பொருந்துவன ஆகுக! நாளை அவன் இல்லாமல் ஆகும்போது முறிக்கப்பட்ட மரம் தேடி அலையும் பறவைகள் போல் தவிக்கும் அவன் புகழ்மேவிய பாடல்கள் அனைத்தும் உங்களையே வந்தடையும்” என்றார். முகம் மலர்ந்து “ஆம், அதுவே உகந்தது. நன்று” என்று பௌண்டரிக வாசுதேவன் சொன்னான். “நீங்கள் அவன் ஆடிப்பாவை ஆகவேண்டும் அரசே. ஆடியின் எப்பக்கம் உள்ளது மெய் என்று எவ்விழி சொல்லலாகும்?” என்றார் சரபர்.

பௌண்டரீக வாசுதேவன் தானும் முடியில் பீலியணிந்தான். இடையில் வேய்குழல் வைத்துக்கொண்டான். அவன் செல்லுமிடமெங்கும் ஆழியும் பணிலமுமாக ஏவலர் உடன் வந்தனர். மன்றுகள் அனைத்திலும் தன்னை ஆழிவெண்பணிலம் அமைந்த கிருஷ்ண வாசுதேவன் என்று நிமித்திகர் அறிவிக்கச்செய்தான். யாதவனின் ஓவியங்களை வரவழைத்தான். சூதர்களை அவனைப்போல் தோற்றம்புனைந்து நடிக்கச்செய்து நோக்கினான். ஒவ்வொருநாளும் ஆடிமுன் நின்று தன்னை அவன் என்றே எண்ணி நடித்தான். ஆடிக்குள் இருந்து எழுந்துவந்த ஒருவனால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டான்.

பின்பு அவன் தன்னை துவாரகையில் எட்டுதேவியருடன் அமர்ந்து அரசாளும் யாதவனாகவே உணர்ந்தான். சூதர் அவனைப்பற்றி பாடும் வரிகளெல்லாம் பௌண்டரிகனையும் உவகை கொள்ளச்செய்தன. விழிப்பும் கனவும் இளைய யாதவனைச் சூழ்ந்தே அமைந்தன. அவனைப் பற்றிய ஒரு மறுசொல்லும் உளம்பொறுக்காதவனாக அவன் ஆனான். தன் அறைக்குள் தனித்திருக்கும் நேரமெல்லாம் ஆடிமுன் அமர்ந்திருந்தான். அவை கூட அமைச்சர் வந்து அழைக்கையில் ஆடிக்குள் இருந்து பௌண்டரிக வாசுதேவன் எழுந்து செல்வதை புன்னகையுடன் நோக்கிக்கொண்டிருந்தான்.

திரௌபதியின் மணத்தன்னேற்பில் பௌண்டரிக வாசுதேவன் முதல் முறையாக இளைய யாதவனை நேரில் கண்டான். தன் சமையர்களிடம் அவன் அரசணி புனைந்து கொண்டிருக்கையில் விரைந்து வந்த அமைச்சர் சரபர் “அரசே, விரைக! அங்கு யாதவ வாசுதேவன் இன்னும் அவை நுழையவில்லை. கிருஷ்ண வாசுதேவன் என்று நிமித்திகனின் குரல் எழுந்து அவை முழுக்க ஆவலுடன் திரும்பிப்பார்க்கையில் தாங்கள் பணிலமும் படையாழியுமாக அங்கு நின்றிருக்க வேண்டும்” என்றார். “ஆம், இதோ” என்று பௌண்டரிகன் தன் ஆடைகளை அள்ளி அணிந்து ஏவலரை கூட்டிக்கொண்டு அரசவைக்கு விரைந்தான்.

சரபர் முன்னால் விரைந்து சென்று அரசுமுறை அறிவித்த பாஞ்சாலனின் நிமித்திகனிடம் அவை அணைபவர் வாசுதேவ கிருஷ்ணன் என்று கூறியதும் அவன் ஐயம்கொண்ட விழிகளுடன் ஒருகணம் தயங்கி பின்பு தலைவணங்கி “அறிவிக்கிறேன் அமைச்சரே” என்றான். மேடை நின்று கோல் சுழற்றி அவன் அதை அறிவித்ததும் அரைவட்டமாக ஓசை அடங்க அவையமர்ந்திருந்த ஷத்ரியர் அனைவரும் திரும்பினர். இருபுறமும் ஏவலர் சங்கும் ஆழியும் சுமந்து வர தலையில் மயிற்பீலி சூடி கையில் வேய்குழலுடன் அவை புகுந்த பௌண்டரிகனின் தளர்ந்த தோற்றத்தைக் கண்டு ஒருகணம் திகைத்தனர். பின்பு அவை வெடித்து நகைத்தது.

தன்னைச் சூழ்ந்து ஒலித்த நகைப்பொலிகள் நடுவே பௌண்டரிகன் திகைத்து முன் செல்வதா பின் நகர்வதா என்று தெரியாமல் நின்றான். “அரசே, தொழுதபடி தங்கள் பீடம் நோக்கி செல்லுங்கள். இச்சிரிப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை. இவர்களின் மைந்தர்களை நாம் எண்ணினால் போதும்” என்று சரபர் அவன் காதில் சொன்னார். விடைத்த தலையுடன் கூப்பிய கைகளுடன் சீர் நடையிட்டு அரசர்களின் நிரை நோக்கி அவன் சென்றபோது எதிரே வந்த பாஞ்சாலச் சிற்றமைச்சர் “தாங்கள் தீர்க்கதமஸின் கொடிவழி வந்த புண்டரிக அரசைச் சார்ந்தவர் என்றால் தங்களுக்குரிய பீடம் அங்கு அமைந்துள்ளது” என்று கை காட்டினார். குருதிச்சிறப்பில்லா சிறுகுடி அரசர்களுக்குரிய நிரை என்பதைக் கண்டதும் கால் தளர்ந்து பௌண்டரிகன் நின்றான். “அரசே, தயங்க வேண்டியதில்லை. நாம் வெல்லும் வரை இவ்வஞ்சம் நம்முள் இருக்கட்டும்” என்றார் சரபர்.

ஒவ்வொரு அடியிலும் உடல் சுமந்து சென்று, பீடத்தில் விழுவது போல் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான். அவையில் நிகழ்ந்ததெதையும் அவன் அறியவில்லை. கிருஷ்ண வாசுதேவன் பெயர் மறுபடியும் அறிவிக்கப்பட்டபோது அவையில் எழுந்த பெருங்குரலையும் நகைப்பையும் பின் வாழ்த்து முழக்கங்களையும் மூடிய கண்களால் கேட்டான். அவை நிகழ்வுகள் அனைத்தும் வேறெங்கோ ஒலிக்க தன்னுள் ஓடிய எண்ணங்களை திகைப்புடன் நோக்கி செயலற்று அமர்ந்திருந்தான்.

அவை கலைந்து அவன் வெளியே சென்றபோது அமைச்சர் “அரசே, நேர் எதிரில் இளைய யாதவர் வருகிறார்” என்றார். அவன் உடல் நடுங்க கண்கள் ஒருகணம் இருட்டிவந்தன. வலிப்புகொண்டு விழுந்துவிடுவோம் என்று அஞ்சி ஏவலன் தோளை பற்றிக்கொண்டான். விழிகளை திருப்பிக்கொண்டு “செல்வோம்” என்றான். “அரசே, அவர் அருகணைகிறார். உங்களை பார்த்துவிட்டார்” என்றார் அமைச்சர். “நான் அவனை பார்க்கப்போவதில்லை” என்று பௌண்டரிகன் விழிகளை மூடிக்கொண்டான். “இருவரும் ஒருவரே போலிருக்கிறீர்கள் அரசே” என்றார் அமைச்சர். அவன் தலைதூக்காமல் படிகளில் இறங்கி தேர்நோக்கி சென்றான்.

 

[ 15 ]

பாஞ்சாலி மணநிகழ்வுக்குப் பின்னர் பௌண்டரிக வாசுதேவன் யாதவன் என்னும் பெயரையே வெறுக்கலானான். அவன் செவிபட யாதவனைக் குறித்து ஒரு சொல்லும் உரைக்கலாகாதென்று ஆணையிருந்தது. அவன் பொருள்பெற்றுச் சென்ற இசைச்சூதர் நகர்மன்றுகளில் நின்று இளைய யாதவனைப் பற்றிய பொய்க்கதைகளையும் இழிவுரைகளையும் பரப்பினர். பௌண்டரிகன் பிறகு ஒருபோதும் ஆடியை நோக்காதவனாக ஆனான்.

மகதத்தின் ஜராசந்தனுக்கு முதன்மையான அணுக்கர்களில் ஒருவனாக பௌண்டரிகன் மாறினான். அவையில் அவனை “சங்குசக்கரம் சூடிய கிருஷ்ண வாசுதேவன்” என்றே அழைக்கவேண்டும் என்றும் அனைத்து திருமுகங்களும் அப்பெயரிலேயே அனுப்பப்படவேண்டும் என்றும் ஆணையிருந்தது. இளைய யாதவன் துவாரகை அரசன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டான். ஜராசந்தன் மட்டுமே விழிகளுக்குள் எங்கும் ஒருதுளி விலக்கமோ நகைப்போ இல்லாமல் “கிருஷ்ணவாசுதேவரே” என்று பௌண்டரீகனை அழைத்தான். அதனால் பிற எங்குமிருப்பதைவிட மகதத்தின் அவையிலமர்ந்திருப்பதையே பௌண்டரீகன் விரும்பினான்.

மகதத்தில் இருந்து திரும்பி வங்க எல்லையில் அமைந்த தன் காவல்மாடத்தை பார்வையிட பௌண்டரீகன் சென்றிருந்தபோதுதான் புண்டரநாட்டுக்குள் இளைய பாண்டவன் பார்த்தன் ஆநிரை கவரும்பொருட்டு நுழைந்திருப்பதை ஒற்றர்கள் சொன்னார்கள். ராஜசூயத்திற்கான கொடி இந்திரப்பிரஸ்தத்தில் எழுந்திருப்பதையும், அது எவ்வண்ணம் நிகழுமென்றும் முன்னரே அவன் அறிந்திருந்தான். இந்திரப்பிரஸ்தம் அது அமைந்துள்ள உத்தரகாங்கேய நிலத்தின் அரசர்களிடம் மட்டுமே ஆநிரைகொள்ளும் என்றும், ராஜசூயத்திற்கு குலமும், நிலமும் வெல்லப்பட்டால்போதும் என்றும் சரபர் சொல்லியிருந்தார்.

“நம் எல்லைக்குள்ளா?” என்று அவன் நம்பாமல் கேட்டான். “இளைய பாண்டவரே வந்துள்ளாரா? ஒற்றர்கள் பார்த்தார்களா?” என்று அவன் திகைப்புடன் கேட்டான். “அரசே, அவர்கள் கமுக்கமாக வரவில்லை. போர்முரசு கொட்டியபடி தங்கள் அரசுக்கொடிகளுடன் படகுகளில் வந்து நம் எல்லைக்குள் இறங்கினர். காடுவழியாக ஆயர்குடிகளின் மன்றை அடைந்து அவர்களிடம் இந்திரப்பிரஸ்தம் ராஜசூயவேள்வியின் பொருட்டு அவர்களின் ஆநிரைகளை கொள்கிறது என்று அறிவித்தனர். ஆநிரைகளை மீட்க நம் படைகள் எழவேண்டும் என்பதற்காகவே அருகே தங்கி உண்டாட்டும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஒற்றன்.

“அரசே, இத்தருணத்தில் அஞ்சலாகாது. மகதத்தின் படையொன்று நமக்காக வந்துகொண்டிருக்கிறது. நமது படைகளை முழுக்கத்திரட்டி அவர்களை எதிர்ப்போம். பெருந்திறல்கொண்ட பாண்டவனை நம்மால் வெல்லமுடியாது போகலாம். ஆனால் எல்லைவரைக்கும் அவனை நம்மால் துரத்திச்செல்ல முடியும். அவன் கவர்ந்துசெல்லும் ஆநிரைகளில் சிலவற்றை மீட்டாலே போதும், ஆநிரைகளை விட்டுவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர் என்பதை நாம் சூதர்சொல்லாக ஆக்கமுடியும்” என்றார் சரபர். ஆயர்பாடி நோக்கி புண்டரத்தின் எட்டு படைப்பிரிவுகளையும் இரண்டு கலநிரைகளையும் எழும்படி ஆணையிட்டுவிட்டு பௌண்டரீகன் விரைந்தான். அவன் செல்வதற்குள்ளாகவே மகதத்தின் படைகள் பன்னிருபெருங்கலங்களில் வந்து இறங்கியிருந்தன.

தன்னைச்சூழ்ந்த படைவிரிவைக் கண்டதும் பௌண்டரீகன் உளம் மலர்ந்து வாளை தூக்கினான். “இது நம் குடிப்புகழுக்காக நாம் காணும் களம். நாம் வேதமறிந்த பிரஜாபதியாகிய தீர்க்கதமஸின் குடியினர். பாரதவர்ஷத்தின் தொன்மையான அரசகுடியினர். நம்மை மச்சர்கள் என்று சிறுமைசெய்யும் ஷத்ரியர்களுக்கு உரிய மறுமொழியை அளிப்போம். வீரர்களே, நாளை எழப்போகும் நூறு தலைமுறைகளுக்காக இதோ நாம் படைக்கலம் கொண்டு எழுகிறோம்!” என்று வஞ்சினம் உரைத்தான். போர்க்கூச்சலுடன் அவன் படைகள் எழுந்து அவனை தொடர்ந்தன.

தேரிலேறி களம்நோக்கி செல்கையில் முதுமையின் களைப்பும் இளைப்பும் மெல்ல அவனிடமிருந்து அகலத்தொடங்குவதை உணர்ந்தான். முன்பெப்போதும் அறியாத களியொன்று நெஞ்சை நிறைத்திருந்தது. முதல் காமத்தை, முதல் போர்வெற்றியை, முதல் மணிமுடியை, முதல் மைந்தனை அடைவதற்கு முந்தைய கணம்போல. ஆனால் அணுகும்தோறும் அத்தருணங்கள் சிறுத்தன. அடைந்ததுமே அணைந்தன. போர்முனைப் பயணமோ ஒவ்வொரு புரவிக்காலடிக்கும் பெருகியது. தன் விழிகள் அத்தனை ஒளியுடன் முன்பிருக்கவில்லை என்றும் செவிகள் அத்தனை கூர்கொண்டிருந்ததே இல்லை என்றும் தோன்றியது. ஒவ்வொரு இலைநுனியையும் கண்டான். ஒவ்வொரு பறவையோசையையும் அறிந்தான்.

இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க்கொடியை தொலைவிலேயே கண்டான். நெஞ்சு பறைமுழக்கமிட முழுதுடலிலும் குருதி நுரைகொப்பளித்தெழுந்தது. கைவிரல் நுனிகளில் உடலின் உள்விசை வந்து முட்டி தினவெடுத்தது. கண்களில் குருதிவெம்மை எழுந்தது. “போர்! வெற்றிவேல்! வீரவேல்!” என்று கூவியபடி அவன் தன் வாளை ஆட்ட மகதத்தின் படைகளும் புண்டரத்தின் படைகளும் வில்லேந்தி அம்புதொடுத்தன. படைத்தலைவனின் கொடி எழுந்து தொலைவிலசைய பறவைக்குலமென அம்புகள் எழுந்து விண்ணில் வளைந்து இறங்கின.

மரக்கூட்டங்களுக்கு அப்பால் போர்முரசுகள் முழங்க பசுமைப்பரப்பை ஊடுருவியபடி பாண்டவர்களின் படைகள் தோன்றின. அம்புகள் வந்து அவனைச் சூழ்ந்திருந்த புண்டரிகப்படைகள் மேல் விழ இறப்போலங்களுடன் அக்கணமே போர் தொடங்கியது. அவன் தன் கைகளுக்கு அத்தனை ஆற்றலுண்டு என்று அன்று அறிந்தான். தன் இலக்குகள் ஒவ்வொன்றும் பிழைக்காது எய்தி உயிருண்பதைக் கண்டு அகம் திகைத்தான். மெய்யான பெருஞ்செயலென்பது அகம் விலகி நின்றிருக்க பிறிதொருவன் என்று உடல்நின்று ஆற்றுவதே என்று அறிந்தான்.

அகலே நின்று அணுகுகையில் ஆடியிலிருந்து எழுந்துவரும் பாவை போல இளைய யாதவன் புரவியூர்ந்து படைமுகப்பில் தோன்றுவதை பௌண்டரீகன் கண்டான். அக்கணமே அதுவே தருணமென அவன் முழுதுள்ளமும் உணர்ந்தது. வில்குலைத்து நாணொலி எழுப்பியபடி அவன் இளைய யாதவனை நோக்கி சென்றான். அவனுடைய புன்னகை நிறைந்த முகம் கடுகி அணுகி வந்தது. வலக்கையிலேந்தியிருந்த படையாழியின் கூர்முனை சுடர்விட்டது. பௌண்டரீகன் “என் எதிர்நில் இளையோனே. இன்றறிவோம் எவர் ஆடிப்பாவை என” என்று கூவியபடி அம்புகளை அவன் மேல் தொடுத்தான்.

காற்றிலெழுந்த படையாழியே அந்த அம்புகளை சிதறடித்தது. வெள்ளிப்பறவைக்கூட்டம் ஒன்று இளையோனைச் சூழ்ந்து பறப்பதுபோல் அது ஒளிவிட்டுச் சுழன்றது. பின்பு ஒளிவிடும் முகிலொன்றுக்குள் அவனும் புரவியில் அசையாமல் நின்றபடி ஆடிப்பாவைஎன விரிந்து அணுகிக்கொண்டிருப்பதாக பௌண்டரீகன் கண்டான். கைகள் அம்பெடுத்து வில்நிறைத்துத் தொடுக்க, அவன் விழிகள் கரியவனின் ஒளிவிடும் நகங்கள் கொண்ட கால்களை நோக்கின. மஞ்சளாடை அணிந்த தொடையை, கச்சையில் வேய்குழல்சூடிய இடையை, மென்மயிர்ச்சுருளணிந்த மார்பை, அணித்தோள்களை, குண்டலங்களாடிய காதை, இளநகை மலர்ந்த இதழ்களை. அவ்விழிகளை அவன் மிக அருகிலென கண்டான். அவன் ஆடியில் நாளும் கண்ட அதே விழிகள்.

அவன் தன்னைமறந்த கணத்தில் பாண்டவப் படைகளின் முகப்பில் புரவிமேல் வில்லுடனெழுந்த நிஷாதப்படைவீரன் ஒருவன் வில்வளைத்துத் தொடுத்த அம்பு அவன் வலதுகாலில் பாய்ந்தது. அவன் அலறியபடி குனிந்தபோது படையாழி வந்து அவன் தலையை கொய்து சென்றது. கூப்பியகைகளுடன் அவன் தேர்த்தட்டில் விழுந்தான். படையாழியைப் பற்றி தோளிலணிந்தபடி கூப்பிய கைகளுடன் இளைய யாதவர் அவனை நோக்கி வந்தார். அவனை நோக்கி புரவியில் வந்த அர்ஜுனன் “பொய்யுருவன் வீழ்ந்தான்!” என்றான். “இன்று ஒருமுறை இறந்தேன் பார்த்தா” என்றார் இளைய யாதவர்.

முந்தைய கட்டுரைதினமலர், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகனவுகளின் அழிவின்மை: விஷ்ணுபுரம் நான்காம் பதிப்பின் முன்னுரை