காந்தி,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

தங்களுடைய “காந்தியும் நோபல் பரிசும்” கட்டுரை படித்தேன்.

அதென்ன சார் காந்தி என்றாலே இந்த நாட்டில் எல்லோருக்கும் புல்லரிக்கிறது?!
காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காத வரைக்கும் நோபல் பரிசு தப்பித்தது. மூன்றாம்தர அரசியல்வாதி!. தான் ஒருவரே இந்தியாவை காக்க வந்த கடவுள் என்றும், மற்ற போராளிகள் எல்லாம் இவர் சொல்வதையே வேதமாக கருத வேண்டும் என்ற பிடிவாதம் கொண்ட மனிதர்தானே அவர்?! அதற்கு அவர் மொழியில் அஹிம்சை என்ற ஏமாற்று பேர் வேறு!

பகத்சிங்கை தூக்கில் போட பிரிட்டிஷ் அரசு நாள் குறித்து கொண்டு இருந்தவேளையில், அவருக்கு அந்த நாட்களில் சனியன் பிடித்த அஹிம்சை கூட்டம் இருக்கிறது என்றும், அதனால் மூன்று நாட்கள் முன்னதாகவே தூக்கிலிட்டால் வசதியாக இருக்கும் என்றும் பன்னாடைதனமாக கடிதம் எழுதினார் என்று வரலாறு காரி உமிழ்கிறது, இவருக்கு நோபல் பரிசு ஒரு கேடு!!!

வட்டமேசை மாநாட்டில் பெரிய புடிங்கி மாதிரி, ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் இவர்தான் ரட்சகன் என்றும்,
அதிலும் தலிதுகளுக்கும் சேர்த்து இவரே கடவுள் என்று உளறியதையும், அதை அம்பேத்கர் மறுத்து அவர் முகத்தில் கரியை பூசியதையும் உலகறியும். இந்துத்துவத்தின் பேரால் தலித்துகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இரட்டை வாக்குறுதியில் மண்ணை வாரி போட்டதை தவிர இந்த புடிங்கி எந்த புல்லை புடிங்கினார்? முடிந்தால் போராட வேண்டும். இல்லாவிட்டால் மூடிகொண்டு இருக்க வேண்டும். ஒரு இனமே பல நூற்றாண்டுகளாக அடிமையாக இருந்து, போராடி, உரிமையை பெரும் வேளையில் பொட்டைதனமாய் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று மதத்தின் பேரால் அதற்கு ஆப்பு அடித்த மனிதகுல முட்டாளுக்கு நோபல் பரிசு ஒரு கேடு!!
நேதாஜி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட போதும் இந்த மாதிரி ஆப்பை சொருகி தனது மனவியாதியை உலகுக்கு பறை சாற்றிய மகாத்மா அல்லவா?!!

சார், மொத்தத்தில் இவர்தான் நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்று நீங்களும் சொல்லாதீர்கள்..வரலாறு பல உன்னதமான தலைவர்களை இருட்டடிப்பு செய்து இருக்கிறது. முக்கியமாக போராளிகளை!!இந்த சனியன் பிடித்த காங்கிரஸ் கிழவர் ஆரம்பித்து வைத்த மொக்கை ‘சாடிசம்’ தான் இன்று அன்னை சோனியாவாள் நமக்கு கிடைத்திருக்கும் “ஈழத்தில் சிங்கள தேசம்”….

மன்னிக்கவும்,
ஜெயபாண்டியன் கருப்பன்

அன்புள்ள ஜெயபாண்டியன் கருப்பன்,

காந்திமேல் அவநம்பிக்கை இருந்தாலும் என்மேல் நம்பிக்கை வைத்து எனக்கு கடிதம் எழுதியமைக்கு நன்றி

நீங்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுக்கள் காந்திமேல் அவர் வாழ்ந்தபோதும் இறந்தபோதும் அவரது எதிரிகளாலும் அவரை புரிந்துகொள்ளாதவர்களாலும் முன்வைக்கப்பட்டவை. அவற்றில் பல [உதாரணம் பகத்சிங்கை தூக்கிலிடுவதை ஆதரித்தார் என்பது] முழுமையான அவதூறுகள் என்பது இன்று மிம விரிவான ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது முழு எதிரிகளில்கூட படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவற்றைச் சொல்வதில்லை. தமிழிலேயே அ.மார்க்ஸ் போன்ற காந்திய எதிர்ப்பாளர்களே அவற்றை விரிவாக பதிவு செய்துள்ளனர். அவர் நேதாஜியை எதிர்த்தது, அம்பேத்காரை நிர்ப்பந்தம் செய்தது போன்ற செயல்களை வரலாற்றுப் புலத்தில் வைத்து பார்க்காமல் திரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். இவற்றைப்பற்றி மிகவிரிவாக நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இந்த இணைய தளத்திலேயே காந்தி என்று தேடினால் கட்டுரைகள் கிடைக்கும். அல்லது தமிழினி வெளியீடாக வந்த என் ‘இன்றைய காந்தி’ நூலை வாசியுங்கள்.

ஒன்றை மட்டும் எண்ணிப்பார்க்கவும். நீங்கள் மதிக்கும் ஒரு தலைவரைப்பற்றி இன்னொருவர் இந்த மாதிரி வசைகளை எழுதினால் என்ன செய்வீர்கள்? கொதித்து எழுவீர்கள். ஆனால் காந்தியர்கள் எவரும் அப்படிச் செய்வதில்லை. அதுவே காந்திக்கும் நீங்கல் மதிக்கும் தலைவர்களுக்குமான அடிப்ப்டை வேறுபாட்டைச் சுட்டிக்காட்டும். காந்தி வசைபாடப்படுகிறார் என்பதற்கான முதல் காரணம் அவருக்காக எவரும் வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதே

கடைசியாக, ஈழத்தில் வன்முறை தோற்றது. ஆனால் அதற்கும் காந்தியமே காரணம்! சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் பல கட்டுரைகளின் தொனி இது

வேடிக்கைதான்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த இணைப்பை பாருங்கள்.

http://in.yfittopostblog.com/2010/10/08/was-mahatma-gandhi-a-racist/

Sanfrasisco வில் காந்தி சிலையை அகற்ற சொல்லி போராடுகிறார்கள். அவர்கள் வைத்துள்ள தட்டி ஒன்று pedophile என்று திட்டுகிறது. விமர்சிப்பதில் எவ்வளவு தரம் தாழ்கிறது என்று நினைத்தால் வேதனை ஏற்படுகிறது.
தங்கள் எழுதிய கட்டுரைகளில் யூதர்களின் நாய் பற்றிய செய்திதான் ஞாபகம் வந்தது. எல்லா பிரச்சினைகளுக்கும் காந்திதான் கரணம் என்று சுலபான முடிவுக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

சென்ற சில வருடங்களாகவே வெளிநாட்டு இந்தியர்களில் ஒரு சாரார் காந்திக்கு எதிராக அவதூறுப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு தலித்தியம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுக்குப் பின்னால் கிறித்தவ அமைப்புகள் இருப்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இவை இந்திய எதிர்ப்பு நோக்கம் கொண்டவை. புலம்பெயர்ந்து வாழும் இந்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் [சீக்கியர்கள், காஷ்மீரிகள், மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்] இதற்கு ஆதரவளிக்கிறார்கள்.

இந்த தாக்குதல் உண்மையில் இந்தியாவை கட்டிக்காத்துவரும் அடிப்படையான விழுமியங்களுக்கு எதிரானது. காந்தி உடைந்தால் இந்தியா அழியும் என நம்பி செய்யப்படும் முயற்சி இது.

சென்ற கால்நூற்றாண்டாக காந்திக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சிந்தனைத்தளத்தில் முக்கியத்துவம் உருவாகி வருகிறது. சூழியல்வாதிகளிடமும் அரசியல்கோட்பாட்டாளர்களிடமும் அவர் மிக விரிவாக விவாதிக்கப்படுகிறார். அந்த முக்கியத்துவமே இவர்களைச் சீண்டுகிறது

காந்திக்கு அவதூறுகள் புதியனவா என்ன?

ஜெ

பார்க்க http://www.jeyamohan.in/?page_id=5392

முந்தைய கட்டுரைபுதுக்கோட்டை கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3