சாக்தம், ஊட்டி குருகுலம்

1

அன்பிற்கினிய திரு ஜெ

ஊட்டி சந்திப்பில் இருந்து திரும்பியதிலிருந்து என்னை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை தங்களிடம் பகிர விரும்புகிறேன். வேண்டாம் என்றுதான் நானும் இத்தனை நாள் தயங்கினேன். ஒரு மாதமாக மனம் உருட்டி, உருட்டி விடை புரியாததால் இன்று எழுதுகிறேன்.

நம் ஊட்டி சந்திப்பின் போது முதல் நாள் மாலை எல்லோரும் வெளியே தேநீர் அருந்தி கொண்டிருக்கும் போது நூலகத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் தத்துவ ஞானிகளின் படங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். நூலகத்தின் உள்ளறைக்கு செல்லும் வாயிலின் கதவுக்கு மேலே இருந்த ஒரு படத்தை பார்த்து திகைத்து திரும்பி பார்த்தால் நூலகத்துக்குள் நான் மட்டும்தான் இருந்தேன். ஒரு கனத்த பெண்ணின் நிர்வாண படம் அது. திறந்த யோனியிலிருந்து வெண்மையாக ஏதோ வழிந்தது போல இருந்தது. கிட்டத்தட்ட பனிலிங்கம் போல. நிர்வாணமாக கிடந்த அந்த கனத்த பெண் சற்றே இடது புறம் முகம்சாய்ந்து ஆகாயம் நோக்குவது போல இருந்தது. இன்னும் சில பெண்கள் அந்த கனத்த பெண்ணின் முகத்தை பார்த்தபடி இருந்தார்கள். உண்மையில் அந்த படத்தை பார்த்து நடுங்கி வெளியில் வந்து விட்டேன்.

ஆனாலும் நான் அன்றிலிருந்து இந்த மின்னஞ்சலை தட்டச்சு செய்யும் இந்நேரம் கூட என் மனமும், மயிர்க்கால்களும் நடுங்குவதை உணர முடிகிறது.

அன்று இரவு கூட எல்லோருக்கும் தலையணைகளையும், போர்வைகளையும் எடுத்து கொடுத்து விட்டு பார்த்தால் நான் படுக்க இடம் இல்லாமல் வேறிடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அன்றிரவு அங்கேயே தூங்கியிருந்தால் ஒருவேளை உறக்கம் வராமல் உழன்றிருப்பேன் என்று இப்போதும் தோன்றுகிறது. நள்ளிரவில் விழித்து அந்த படத்தை பார்த்து கொண்டிருந்திருப்பேன். இரண்டாம் நாள் கூட என் கவனம் காரணமில்லாமல் அந்த படத்தை பார்த்துக் கொண்டேயிருந்தது.

இந்துமத தத்துவ மையமான பரப்பிரம்மத்தை சக்தி (தாய்) வழிபாடாக கொண்டது சாக்தம். தாய்மை தனித்து வாய்ப்பதில்லை. தாய்மை பெற விதை தேவை. தாய் உயிரை, உடலை விளைய வைப்பவள். வெண்முரசில் குந்தியின் பாங்கியான அனகை மிக அற்புதமாக குந்தியிடம் பேசுகிறாள். “பெண் என்பவள் நிலம் போன்றவள். எந்த விதையை யாரிடமிருந்து ஏற்கவேண்டும் என்ற வரையறை யாதவ குல பெண்களுக்கு இல்லை. நிலம் எப்படி எந்த பேதமும் இல்லாமல் தன்னுள் விழுந்த சத்தான விதைகள் எல்லாவற்றையும் முளைக்க செய்து உயிர்களால் இவ்வுலகை நிறைக்கிறதோ அதுபோல் யாதவ குல பெண்கள் தன்னுள் விழுந்த விதைகளை முளைக்க வைக்கவேண்டும். அதுவே யாதவ குல பெண்களின் பணி” என்கிறாள் அனகை.

தாயை பிரம்மமாக பார்க்கும் போது அந்த தாய்மையை எய்த உதவும் விதை என்ன என்ற கேள்வி என்னுள் எழுகிறது. சாக்தம் தாயை வழிபடுகிறதா? அல்லது தாய்மையை வழிபடுகிறதா? தாய்மையை பெண் மட்டும்தான் கொண்டிருக்கிறாளா?

இப்படி யோசிக்கும் போதுதான் சிவலிங்கம் பிரம்மத்தின் மிக அற்புதமான எளிமையான குறியீடாக நிற்கிறது. உண்மையில் இதுதான் சாக்தம் சைவத்துடன் இணைந்ததற்கு காரணமா என்பது என் ஐயம்

எனது இந்த ஐயத்திற்கும் நான் மேற்சொன்ன அந்த குருகுல படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று புரியவில்லை.

ஆனாலும் ஊட்டி சந்திப்பின் பலனாக நடை செல்லும் போதெல்லாம்  நான் காண நேரும் அம்மன் கோயில்கள் குருகுல நூலகத்தில் பார்த்த அந்த படத்தையே நினைவூட்டுகிறது

நான் விலையுர்ந்த கைப்பேசிகளை உபயோகிப்பதில்லை. ஆகவே அந்த படத்தை நான் படம் பிடிக்கவில்லை. தங்களுக்கு கண்டிப்பாக அந்த படம் ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன்.

எனது ஐயம் அசட்டுத்தனமானதாக இருந்தால் ஊட்டி சந்திப்பில் நீங்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகள் கேட்டவர்களை, (நான் உள்பட)வார்த்தைகள் தவிர்த்து மெல்லிய புன்னகையால் மன்னித்ததுபோல் இப்போதும் மன்னிக்க வேண்டுமாய் சிஷ்யத்தனத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்பன்

அ மலைச்சாமி

***

அன்புள்ள மலைச்சாமி,

நித்யா ஒருமுறை சொன்னார், குருகுலத்தில் இருவகை மனிதர்களே இருக்கமுடியும். கிறுக்கர்கள், கிறுக்காகச் சாத்தியமானவர்கள்.

நித்யா காலத்திலிருந்தே குருகுலம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், உளவியலாளர்கள் ஆகியோருக்கான இடமாகவே இருந்துள்ளது. அது அவரது ஆளுமையுடன் தொடர்பானது. அவரது மாணவர்களும் அத்தகையவர்கள்

நீங்கள் சொன்ன ஓவியத்தை நான் நினைவுறவில்லை. ஆனால் குருகுலத்தில் அதைப்போன்ற பலவகையான ஓவியங்களை, சிலைகளைக் காணமுடியும். கணிசமானவை அமெரிக்க, ஐரோப்பியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை

அவற்றை உருவாக்கியவர்களைக் கொண்டுதான் அப்படைப்புகளைப் புரிந்துகொள்ளமுடியும். அதிகமில்லை என்றாலும் போதையடிமைகளும் மனநிலைபிறழ்ந்தவர்களும் குருகுலத்தில் எப்போதும் இருந்திருக்கிறார்கள். குருகுலம் என்பது சகல அன்னியர்களுக்கும் புகலிடமாக இருக்கவேண்டும் என்பது நித்யாவின் கூற்று

ஆகவேதான் நிலையான நெறிகளோ விதிகளோ இல்லாமல் ஒருவகையான கம்யூன் ஆக ஊட்டி குருகுலம் இருக்கிறது. அது நித்யாவுக்குப்பின் நீடிக்காமல் போனதும் அதற்கு நெறிகளோ அமைப்போ நிதியோ இல்லை என்பதனால்தான்.

சாக்தம் முதல்பெருந்தெய்வமாக சக்தியையே கொண்டுள்ளது. அவள் சிவத்தின் பகுதி அல்ல. மும்மூர்த்திகளுக்கும் தாயான பராசக்தி. அவளுக்கு தோற்றம் இல்லை, ஆகவே அவள் முதலன்னை. அவள் மும்மூர்த்திகளையும் தன் மாயையால் படைத்தாள். ஆகவே அதற்கு விந்துவும் – அதாவது தூண்டுகைக்காரணமும் – தேவையில்லை

சக்தியை ஆக்கும் வல்லமையாகவும் சிவத்தை அதன் கருத்துமையமாகவும் அல்லது தூண்டுகைக் காரணமகாவும் கொள்வது சைவசித்தாந்தம். அது சாக்தத்தை தன்னுள் இழுத்துக்கொண்டது

ஜெ

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14
அடுத்த கட்டுரைஅந்த மாபெரும் வெள்ளம் – குறித்து…