இரவு 14

இரவெனும் கடலின் அடித்தளம்

கோடானுகோடி

மீன்களின் எலும்புகளும்

மரக்கலங்களின் சிதைவுகளும்

நிறைந்தது.

அவற்றின் மீது பறக்கின்றன

ஒளிரும் இமையா விழிகள்.

 

நான் என் அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தபோது மொத்தக் குருதியையும் இழந்தவன்போல் உணர்ந்தேன். என் கைகளும் கால்களும் தலையும் இதயமும் தனித்தனியாகக் கிடக்க, பிரக்ஞை அவற்றுக்குமேலே சூடான காப்பிக்குமேல் ஆவி போல  நெளிந்தாடியது. கண்களை மூடிக்கொண்டபோது ஒளிப்புள்ளிகள் சிவப்பும் நீலமுமாக பறந்து சுழன்றன. பின்பு அவை ஒன்று மீது ஒன்று என படிந்து அமைதிகொண்டன.

அதிகம்போனால் இரண்டுமணிநேரம் தூங்கியிருப்பேன். திடுக்கிட்டவன் போல விழித்துக்கொண்ட சில நிமிடங்களுக்கு எங்கிருக்கிறேன் என்ற உணர்ச்சியே இல்லை.கடலுக்கு அடியில் உக்கிரமான அழுத்தம் கொண்ட நீல நீருக்குள்  மூச்சுக்குழாய்கள் புடைக்க நுரையீரல்கள் விம்ம துழாவிக்கொண்டிருந்தேன். எழுந்தமர்ந்தேன். உடல் மிகவும் வியர்த்திருந்தது.

சற்று நேரம் கழிந்துதான் ஏஸியை போடாமல் தூங்கியிருக்கிறேன் என்று உணர்ந்து சென்று சன்னல் கதவுகளை திறந்தேன். புத்தம்புதிய காயல்காற்று அறைக்குள் நுழைந்தது. கடும் தாகத்தில் குளிர் நீர் அருவி ஒன்றைக் கண்டதுபோல என் நுரையீரல்கள் ஆக்சிஜனை அள்ளி அள்ளி உண்டன.

தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக்கொண்டேன். விடிந்துகொண்டிருந்த நேரம்போலும். பறவைச்சத்தங்கள் கலைந்து ஒலித்தன. எழுந்து காயலுக்குள் செல்லவேண்டுமென விரும்பினேன், ஆனால் எழுந்திருக்க முடியுமென தோன்றவில்லை. சிறிய தலைச்சுற்றல் இருந்தது.  மேகம் போல பிசிறிப் பிசிறி அலையும் சிந்தனைகளை அர்த்தமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தது என் இருப்பு. ஒரு இனிமையான தனிமை. தித்திக்கும் கைவிடப்பட்ட தன்மை.

நான் நீலிமாவை அவள் வீட்டுக்குக் கொண்டு சேர்த்தபோது  இரண்டுமணி தாண்டியிருக்கும்.  கார் அவள் வீட்டுமுன் நின்றபோது அவள் திடுக்கிட்டு எழுந்து வாயைத்துடைத்தபின் ”எங்க வந்திருக்கோம்?” என்றாள். ”உன்னோட வீடு” என்றேன். ”ஓ” என்று முந்தானையின் மடிப்புகளை சரிசெய்து எடுத்துப் போட்டுக்கொண்டாள். கொட்டாவி விட்டபடி கதவைத் திறந்து வெளியே சென்று ”ஆர் யூ கமிங்?” என்றாள்.

”நோ…போய் கொஞ்சம் வேலை இருக்கு” என்றேன். ”தட் இஸ் ஓக்கே” என்றாள். நான் அவளுக்கு அவள் சொன்னதெல்லாம் நினைவிருக்குமா என்று எண்ணினேன். ஆனால் அவள் முற்றிலும் வேறு ஒருத்தியாக இருந்தாள். ”நீ கொஞ்சம் ஓவரா போயிட்டே” என்றேன். ”ஐ நோ” என்று சுருக்கமாகச் சொல்லி ”ஸீ யூ” என்று திரும்பி வீட்டுப்படி ஏறினாள். வீட்டின் சாவியை அவள் திறந்து கதவை திறந்து உள்ளே செல்வது வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வாசலில் நின்று தூக்கம் கலந்த சிரிப்புடன் ”ஓக்கே, பை” என்று  சொல்லி கையை மெல்ல அசைத்தபின்பு கதவைச் சாத்திக்கொண்டாள். பளீரிட்ட செம்மஞ்சள் நிற உடையும் அவள் சருமமும் ஒன்றுபோலவே இருந்தன. ஒரு பெரிய மலர் போலிருந்தாள். சிலவகை கற்றாழைகள் அதேபோல செங்குத்தாக ஆறடி உயரத்தில் தழல்போல நிற்கும் பூங்கொத்துகளை மலர்த்துக்கொள்வதுண்டு. நான் காரைக்கிளப்பிய பின்புதான் என்ன யோசித்துக்கொண்டிருந்தேன் என்று உணர்ந்தேன்

 

”எத்தனைபேரழகு!” என்று. ஆம், அது தான் நான் நினைத்துக் கொண்டது. அவளை நான் கண்ட  கணம் முதல் கணம்தோறும் அவள் அழகு அதிகரித்தது. பார்க்கும்தோறும் அவள் அழகு கொண்டாள் .என் இமைகளால் விசிறி விசிறி அவளை நான் மேலும் சுடரச் செய்கிறேன் போல! ஆனால் இந்தக் கணத்தில் அவள் அழகு அதிஉச்சத்தில் இருப்பதாகப் பட்டது. மேலும் அழகாக ஆக முடியாமையால் இன்றிரவே அவள் இறந்து விடுவாள் என்பதுபோல. நாளை அவள் இருக்கமாட்டாள். இந்தக் காட்சிதான் நான் என்றென்றும் என் நினைவில் வைத்திருக்கப்போகும் கடைசிப் பிம்பம்.

முட்டாள்தனம். இதைத்தான் ரொமாண்டிசிசம் என்கிறார்கள். அகங்காரமும் பலவீனமும் சரிசமமாக கலந்து உருவாவது இது. இது மிகச் சர்வசாதாரணமான ஒரு தருணம். நான் இது எனக்கு மட்டுமே நிகழக்கூடிய ஒரு பிரபஞ்ச தருணம் என்று கற்பனைசெய்துகொள்கிறேன். ”நீ ஒரு ரொமாண்டிக் ·பூல்” என்று சொன்னாள். ஆமாம், உண்மைதான். அவள் சொன்னவை எல்லாம் உண்மை. முழுக்க முழுக்க உண்மை என்பதுதான் அவற்றை அத்தனை குரூரமானவையாக ஆக்கியது.

ஆனால் அவள் சட்டென்று திரைச்சீலைகளைப் பற்றிக்கொண்டு எழுந்து கூரைமேல் படர்ந்தேறும் நெருப்பாக மாறிய அக்கணங்களிலும் நான் அவள் அழகையே ரசித்துக்கொண்டிருந்தேன். அவள் முகம் சிவந்து விரிவதை மேலுதடுகளின் மீது வியர்வை பனித்திருப்பதை இதழ்கள் குவிந்தும் விரிந்தும்  கணம்தோறும் கொள்ளும் மலர் வடிவங்களை நெற்றியில் பறந்து விழுந்து நிழலுடன் ஆடிய கருங்குழல் கற்றையை….அவளை நான் என் கன்ணாலேயே அறிகிறேன். பிற புலன்கள் அனைத்தும் கண்ணுக்கு துணையாக வருபவை மட்டுமே.

கார் சாலையில் சென்றபோது என்னால் ஸ்டீரிங்கையே பிடித்துக்கொள்ள முடியவில்லை. என் உடல் எல்லா ஆற்றலையும் இழந்துகொண்டிருந்தது. குருதி வடிந்து என் கால்கீழே தேங்குகிறதா? கால் விரல்கள் சில்லிடுகின்றனவா? உதடுகள் நீருக்காக தவித்தன. காருக்குள் தன்ணீர் இல்லை. ஒரு கட்டத்தில் கார் அதுவே நின்றுவிட்டது. ஏன் நின்றது என்று பார்தபோதுதான் நான் பிரேக்கை அழுத்தியிருப்பது தெரிந்தது. மீண்டும் காரை கிளம்ப்பினேன். என் எஞ்சிய உயிராற்றலால் நானே காரைக் கிளப்புவதுபோலிருந்தது. எப்போது வீட்டை அடைந்தேன் என்று தெரியவில்லை.

நான் கண்விழித்தபோது சற்றே புத்துணர்வுடன் இருந்தேன். அறைமுழுக்க சாயும் வெளிச்சம். மாலையை நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். எழுந்து சன்னல்களை மூடி வெளிச்சத்தைக் குறைத்தபின் பல் தேய்த்து சரவம் செய்து குளித்தேன். டி ஷர்ட் லுங்கி அணிந்து கண்களுக்கு கறுப்புக்கண்ணாடி மாட்டி கீழே வந்தேன். பங்கஜம் உணவு எடுத்து வைத்துக்கொண்டு சென்றுவிட்டிருந்தாள். நான் மௌனமாக சாப்பிட்டேன். வெகுதூரத்தில் யாரோ எதையோ முணுமுணுப்பது போலிருந்தாலும் மனம் சற்று அமைதியாகவே இருந்தது.

கூடத்திற்கு வந்து செய்தித்தாள்களை வாசித்தேன். பின்பு எழுந்து மேலே சென்று என் மேஜையில் அமர்ந்து குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு பென்சிலால் ‘திங்க்’ என்று கிறுக்கிவிட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். நேற்று இரவில் அவளை வீட்டுக்குக் கொண்டு விடும்போது நான் என்ன எதிர்பார்த்தேன்? அவள் ”ஸாரி, ஐ வாஸ் டிரங்க்” என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும். எனக்குத்தேவையாக இருந்தது அப்படிப்பட்ட  ஒரு எளிய சமாளிப்பு மட்டும்தான். ஆனால் அவள் அதையும் தருவதற்கு தயாராக இல்லை. சமரசமே இல்லாமல் நின்றிருந்தாள். தீ எப்படி குளிர முடியும் என்று தோன்றியது.

நான் ‘·பயர்’ என்று கிறுக்கியிருப்பதைக் கண்டு அதை பென்சிலால் அடித்தேன். அதன்மேல் கருமையாக பென்சிலால் பூசினேன். ”நோ” என்று எழுதிவிட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின்பு மளமளவென எழுத ஆரம்பித்தேன்.’இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த உலகில் இருந்து மீண்டுவிடவேண்டுமென்றுதான் என் அகம் துடித்துக்கொண்டே இருக்கிறது. இங்கே ஏதோ ஒரு தப்பை நான் பார்க்கிறேன். அதை என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் இங்கே எனக்கு அமைதியில்லை. ஆகவே நான் தப்ப வேண்டும். அதற்கான ஒரு சிறந்த வழி இப்போது திறந்திருக்கிறது. இதுபோல இன்னொரு வாய்ப்பு வரப்போவதில்லை. இந்தச் சாக்கையே பயன்படுத்திக்கொண்டு வெளியேறிவிடவேண்டியதுதான். முழுமையாக என்னை துண்டித்துக்கொள்ளவேண்டியதுதான்’

மீண்டும் மீண்டும் அந்த பக்கம் முழுக்க எழுதியிருந்தேன். காகிதத்தை சூட்டி குப்பைக்கூடையில் வீசிவிட்டு மடிக்கணினியை எடுத்து விரித்து இயக்கினேன். திரவத்திரை ஒளி கொண்டது. என் மின்னஞ்சல் பெட்டியை திறந்தேன். இப்போதுகூட நான் திரும்பிவிட முடியும். என்னுடைய  பழைய வாடிக்கையாளர்களுக்கு நான் மின்னஞ்சல் செய்தாலேபோதும் , எல்லாமே ஆரம்பித்துவிடும். நான் அப்படி எளிதாக நிராகரிக்கப்படக்கூடியவன் அல்ல. சடசடவென விசைப்பலகை அதிர கடிதத்தை எழுதினேன். ஆனால் கடைசி வரிகளுக்கு வரும் தோறும் என் வேகம் குறைந்தது. கடிதத்தை முடிக்க என்னை நான் உந்த வேண்டியிருந்தது.

முடித்தபின் கடிதத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அனுப்பும் ஆணையை அழுத்தினால் போதும். எத்தனை மென்மையான செயல். கண்ணைஒருமுறை  இமைப்பதுபோல. ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. அதை நோக்கி என் மனம் நகரவில்லை. மேகத்தை பிடித்து முன்னால் உந்த முயல்வதுபோலிருந்தது அந்த முயற்சி. களைப்புடன் கண்களை மூடிக்கொண்டேன். சிலகணங்களுக்குப் பின்னர் எழுந்து விரைந்து உடைகளை மாற்றி செல்பேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

இரவு வானிலிருந்து கசிந்து மரத்தடிகளில் வட்டமாக படிந்திருந்தது. இலைகளுக்கு அடியில் சிந்திக்கிடந்தது. இரவை இறக்கிக்கொள்ளும் கவனத்தில் மரங்கள் கவனம் குவித்து நின்றன. நான் செல்பேசியில் நாயரை அழைத்தேன். ”ஆ, மிஸ்டர் சரவணன்.” என்றார் அவரே ”நீலிமா இஸ் நாட் வெல். ஒரு தலைவலி அவளுக்கு. படுத்திருக்கா. இன்னைக்கு மேனன் வீட்டுக்கு வரமாட்டான்னு நினைக்கிறேன்” என்றார்.

”ஓகே. நான் கொஞ்சம் வெளியே போகணும். உங்க காரை நான் மேனன் கிட்ட ஒப்படைச்சிட்டு போறேன்” ”நோ, யூ கென் யூஸ் இட்..நோ பிராப்ளம்” ”இல்லை…நான் வேற கார் சொல்லியிருக்கேன்…” ”ஓகே…நான் கொஞ்சம் லேட்டா மேனனைப் பார்க்க வருவேன்…அப்ப எடுத்துக்கிறேன்..”

காரை மேனன் வீட்டுமுன் நிறுத்தினேன். மேனன் வீட்டுக்குள் கனல் எரியும்  அடுப்புக்குள் இருப்பதுபோல இளம் செம்மை.  நான் படிகளை ஏறியபோது அவர் எதிரே வந்தார். டிராக் சூட் போட்டிருந்தார். ”ஹாய்..” என்றார். ”அட்மிரல் ஸர், இந்த சாவி உங்க கிட்டே இருக்கட்டும்…” என்றேன் ”நாயர் வருவார்” அவர் ஒன்றுமே கேட்காமல் ”·பைன்” என்று வாங்கிக்கொண்டார்.

சாலைக்கு வரும்போதே டிராவல்ஸ¤க்கு அழைத்து ஒரு காருக்குச் சொன்னேன். மண்சாலையில் கொஞ்சம் நடந்து தார்ச்சாலையை அடைந்தபோது டாக்ஸி கிடைத்தது. நகருக்குள் நுழைந்து காரை பெற்றுக்கொண்டேன். காரில் ஏரி ·போர்ட் கொச்சினை நோக்கிச் சென்றபோதுதான் நான் எங்கே செல்ல உத்தேசிக்கிறேன் என்ற எண்ணம் எனக்கே தெளிவாகியது. செயிண்ட் ஆன்ஸ் செமினாரி. காரை வேகம் குறைத்து எதிரேவந்தவரிடம் விசாரித்தேன். அது நகருக்கு வெளியே அரூர் அருகே இருப்பதாகச் சொன்னார்.

தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தேழில் ஏறி இடக்கொச்சிக்குச் சென்று தெற்கு நோக்கிச் சென்றேன். நகரம் முழுக்க விளக்குகள் எரிந்தணைந்துகொண்டிருந்தன. வானில் நிலா மேலும் கரைந்து வெள்ளி அரிவாள் போலிருந்தது. விண்மீன்கள் அதிகமாக இல்லை. நகரத்தின் ஒளியை மீறி விண்மீன்கள் தெரிவதில்லை.

கும்பளங்கி படகுத்துறையில் மீன்பிடிப்படகுகள்  ஒளிக்குவியல்களாக நீர்மேல் ஆடி நின்றன. ஒளிரும் கண்கள் கொண்ட பிரம்மாண்டமான் கடலுயிரிகள். ஜெட்டியில் சுமை ஏற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. லாரிகளின் முகவெளிச்சங்கள் சாலை வரை நிழல்களை நீட்டின. ஒளியில் மனிதர்கள் அசைய கூச்சல்கள் போனற குரல்கள் இருண்ட வானில் பட்டு எதிரொலித்து திரும்பப் பெய்துகொண்டிருந்தன.

பயிற்சிப்பள்ளி ஒன்றைத்தாண்டி மறுபக்கம் சென்றபோது செயிண்ட் ஆன்ஸ் செமினாரியின் பெயர்ப்பலகை கண்ணுக்குப் பட்டது. தனியார்ச் சாலை அகலமாக இருந்தது இருபக்கமும் சிறிய ஓட்டுக் கட்டிடங்கள் முகப்பில் வெளிச்சம் பரவிய வராந்தாக்கள் மற்றும் முற்றங்களுடன் வந்துகொண்டிருந்தன. அதன் பின் ஓங்கிய கல்கூம்பு கோபுரம் தெரிந்தது. சிலுவைமீது கீழிருந்து பீய்ச்சப்பட்ட ஒளியில் அது அந்தரத்தில் மிதந்து நிற்பது போலிருந்தது. கீழிருந்து பெய்த சாய்வான ஒளியில் கல்பரப்பின் கரடுமுரடு புடைப்புகளின் நிழல்கள் பரவி வித்தியாசமான ஒரு நெசவை உருவாக்கியிருந்தன. தேவாலயத்தின் வாசல் விரியத்திறந்திருந்தது. உள்ளே வெளிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை.

காரை நிறுத்திவிட்டு மெல்ல நடந்து வாசலை அடைந்தேன். உள்ளே ஆட்கள் இருப்பது தெரிந்தது. வாசலில் செருப்புகளை கழட்டவேண்டுமா என்று பார்த்தேன். தேவையில்லை. உள்ளே செக்கச்சிவப்பான தரைமெத்தை விரிந்த நடைபாதைக்கு இருபக்கமும் ஈட்டிமரத்தாலான பழைமையான  பெஞ்சுகளும் டெஸ்குகளும் இருபக்கமும் குவளைமலர்க்கொத்துகள் போல ஏந்தி நின்ற  பித்தளை நிலைகளில்  எரிந்த மாபெரும் மெழுகுவத்திகளின் கூட்டுச்சுடரொளியில் மெழுகாலானவை போல மின்னின. அவற்றில் ஐம்பதுபேருக்குக் குறையாமல் அமர்ந்திருந்தார்கள். அனைவருமே அசையாமல் மௌனத்தில் முழுமையாக மூழ்கி அமர்ந்திருந்தார்கள்.

ஆல்டரில் தாமஸ் சிரியன் பாதிரிகளுக்குரிய ஆடம்பரமான சடங்காடையுடன் கையில் ஒரு பித்தளைச் சிலுவை ஏந்தி கண்மூடி நின்றிருந்தார். சிவந்த பட்டைகள் நெடுக்காக தொங்கிய மாபெரும் சரிகை அங்கியில் தொன்மையான ஓவியம் ஒன்று போல தோன்றினார். அவருக்குப் பின்னால், அந்த ஊரளவுக்கே பெரிய ஒரு முகத்திற்கான காதணி போல பொன்னாலான மையம்.

அலங்கார வளைவுகள் முழுக்க  தேவதைகள் பறந்தன. அவற்றின் குட்டிக்கைகளில் மலர்களும் கிரேக்க யாழ்களும்  இருந்தன. குண்டுக்கன்னங்கள், குண்டுத்தொடைகள், குண்டுப்பிருஷ்டங்கள், விதவிதமான நெளிவுகள் மூலம் அவை எடையின்மையை காட்டிக்கொண்டிருந்தன. மலர்கள் பின்னிய வளைவுகள் ஒன்றுக்குள் ஒன்றாகச் சென்ற அல்லிவட்டத்தின் மையத்துப் புல்லிவட்டத்தின் நடுவே மேரியும் மைந்தனும் பொன்னொளிரும் சிலைகளாக நின்றனர்.

கிறிஸ்து தாயின் இடையில் இருந்து எம்பி நம்மை நோக்கி தூக்கு என்று கை நீட்டுபவர் போலிருந்தார். விரல்களை செண்பக மலரிதழ்கள்  போல லேசாக முறுக்கவிழும்படித்  திருப்பி ஆசியளிப்பது போலவும் இருந்தார். கன்னங்களிலும் திறந்த மழலைத்தோள்களிலும் பொன்னில் சுடரொளியின் பிரதிபலிப்புப் புள்ளிகள். மேரி ஏதோ கனவில் விழிசெருகி நின்றிருப்பதுபோலிருந்தது.  ஆல்டரின் இருபக்கமும் இருந்த மெழுகுவத்தி நிலை இரு குட்டி தேவாலயங்கள் போல பல அடுக்குகளுடன் நிற்க அவற்றில் எல்லாம் வெண்மெழுகுவத்திகள் சுடர் மலர்ந்து நின்றன.

நாலைந்துபேர் என்னை திரும்பிப் பார்த்தனர். ஒரு பெண் முக்காடை இழுத்து விட்டுக்கொண்டாள். நான் ஒரு காலியான பெஞ்சில் மெல்ல அமர்ந்துகொண்டேன். ஆல்டருக்கு வலப்பக்கம் நான்கு சிறுவயது பயிற்சிப்பாதிரியார்கள் கைகளில் பித்தளைச் சிலுவையுடன் நின்றிருந்தார்கள். அது வழக்கமான பிரார்த்தனை போல தெரியவில்லை. தாமஸ் அவரே  ஏதோ புதிய சடங்கை உருவாக்கியிருந்தார் என்று தோன்றியது.

வெளியே தம்ம்ம் என்று மணி ஒலித்தது. ஒரு பிரம்மாண்டமான கித்தாரின் கம்பியை மெல்ல தொட்டது போன்ற ஒலி அது. தாமஸ் சிலுவையை இறக்கினார்.  பயிற்சிப்பாதிரியார்களும் அதேபோலவே செய்தார்கள். எனக்குப் பின்பக்கம் மாபெரும் ஆர்கன் மெல்ல முனக ஆரம்பித்தது. ஒரு யானை வண்டாக மாறி  ரீங்கரிப்பதுபோல. அந்த ரீங்காரம் மெழுகுவத்திகளை ஈர்த்து ஒரே சுடராக ஆக்கியதா? ஆல்டரின் பொன்னிறம்  அந்த ஒலியில் கரையாமல் உருகிக்கொண்டே இருந்தது. மேரியும் மகனும் திரவவடிவம் கொண்டவர்கள் போலத்தோன்றினர்.

பின்பு ஆர்கன் ஓங்கியும் சரிந்தும் இசைக்க ஆரம்பித்தது. அந்த மாபெரும் கூடமே ஓர் இசைவாத்தியமாக ஆக அதற்குமேலே இருந்து அருவமான மாபெரும் கரங்கள் இரண்டு அதை மீட்டுவது போல.  தாமஸ் அந்தச் சிலுவையை நீட்டிக்கொண்டிருக்க ஒவ்வொருவராக எழுந்து சென்று அவர்முன் மண்டியிட்டார்கள். அவர் சிலுவையை ஒவ்வொருவர் தலைமீதும் வைத்து மௌனமாக பிரார்த்தனை செய்தார்.  அதன் பின் ஒவ்வொருவரையும் பயிற்சிப்பாதிரியார்கள் தனித்தனியாக ஆசீர்வாதம் செய்தார்கள்.

ஐம்பதுபேரும் செய்து முடிப்பது வரை ஆர்கனின் இசை ஒரு அருவி போல கொட்டி அந்த மாபெரும் கூடத்தினுள் சுழன்று வந்தது. நான் அந்த பொன்னிற இசையில் என் நினைவுகள் மிதந்தலைய சித்தம் பிரமித்தவன் போல அமர்ந்திருந்தேன். வேறெந்த ஒலியும் இல்லை. சொற்பொழிவுகள் ஏற்கனவே முடிந்திருக்குமா, இல்லை சொற்களே இல்லையா? கடைசிப்பெண்ணும் மண்டியிட்டபின்பு நான் ஒரு பெருமூச்சுடன் என் இயல்பான எண்ணங்களுக்கு மீண்டேன்.

தாமஸ் சிலுவையை கிறிஸ்துவின் பாதத்தில் வைத்தபின் மெல்ல பின்னகர்ந்து மறைந்தார். நான்கு இளம் பாதிரிகளும் மேடைக்கு வந்து கையில் சிலுவைகளுடன் நின்று பாட ஆரம்பித்தார்கள். சொற்கள் புரியாத சேர்குரல் இசை ஆர்கனுடன் இணைந்து மாபெரும் மணல்வெளிபோல எழுந்து சரிந்து மீண்டும் பொங்கி விழுந்தது. மீண்டும் தம்ம்ம் என்ற மணியோசை ஒலித்து முடிந்ததும் அனைவரும் எழும் கலைசல் ஒலி. ஒரு சொல்கூட பேசாமல் அவர்கள் பிரிந்து சென்றார்கள்.

நான் எழுந்து என் சட்டையை உள்ளே இழுத்துவிட்டுக்கொண்டேன். ஓர் இளம் பாதிரி என்னை நோக்கி வந்து ”நமஸ்காரம் சார்…சரவணனாக்குமா?” என்றார். ”ஆமா”என்றேன். ”·பாதர் கூட்டி வரான் சொன்னார்” என்றார். நான் அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். இருண்ட வராந்தாக்களில் கண்ணாடிக்குடுவைகளுக்குள் மெழுகுவத்திச் சுடர்கள் எரிந்துகொண்டிருந்தன. வராந்தாக்களில் மெழுகுவத்திகளுக்கு இருந்த கண்ணாடிக்காப்பு தேவாலயக் கூடத்திற்குள் இல்லை என்பதை எண்ணிக்கொண்டேன். அங்கே வரும் காற்றை கவனித்து கட்டுப்படுத்தியிருக்கிறார்கள்.

அறைக்குள் தாமஸ் தன் சாதாரண அங்கியுடன் இருந்தார். சிவப்புப் பட்டைகளும் பளபளக்கும் சரிகையும் கொண்ட அவரது மேலங்கியும் கிரீடம்போன்ற தொப்பியும் சுவரில் ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருந்தன. மேஜைமேல் அவரது வெண்பட்டுக் கையுறைகள் கிடந்தன. அவர் ஓய்வாகச் சாய்ந்து கறுப்பு டீ குடித்துக்கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் ஆங்கிலத்தில் ”வருக..” என்று சொல்லி அமரும்படி நாற்காலியைக் காட்டினார். சிறிய அறை. கூரையில் பெரிய தேக்குமர உத்தரங்கள் மிக உயரத்தில் இருந்தன. ஒரு மின்விசிறி மெல்லச் சுழன்றுகொண்டிருந்தது. பீங்கான் ஜாடிபோன்ற மையக்குமிழும் வளைந்த இறகுகளும் கொண்ட பழைய மின்விசிறி.

நான் அமர்ந்ததும் ”நீங்கள் வந்ததைப் பார்த்தேன்” என்றார். ”சும்மா பார்க்கவேண்டும் என்று தோன்றியது” என்று சொல்லிவிட்டு ”நான் வருவதற்குள் நீங்கள் பேசி முடித்துவிட்டீர்களா?” என்றேன். ”இல்லை இங்கே பேச்சே கிடையாது. பேச்சு தர்க்க மனதை நோக்கிச் செய்யப்படுவதல்லவா? இரவில் எந்த தர்க்கத்துக்கும் இடமில்லை. இங்கே குறியீடுகள் மட்டும்தான். அவற்றை சில சடங்குகளாக நாங்கள் அளிக்கிறோம். துணைக்கு சங்கீதம். கூடவே சில சொற்கள். அந்தச் சொற்களை திரும்பத் திரும்பச் சொல்வதுதான் இங்கே உள்ள வழி” என்றார் ”டீ?”

”சரி” என்றேன். அவர் ஒரு பெல்லை அழுத்த இளம் பணியாள் வந்து நின்றான்.”ஒரு கடுஞ்சாய, பிலிப்போஸே” என்றார். ”டீ இரவு என்றால் பால் பகல். பால், சீனி, அரிசி என்று வெள்ளையாக இருக்கும் எல்லாவற்றையும் நான் பகலுடன் தான் தொடர்புபடுத்திக்கொள்கிறேன்.  அவை எல்லாமே சாத்தானின் அம்சங்கள்” சிரித்து ”பைத்தியக்காரத்தனமாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் தனக்கென ஒரு சிந்தனைமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது அவனுக்கு நன்மை செய்தால் போதுமானது”

நான்  கால்களை நீட்டிக்கொண்டு ”அழகான சடங்கு” என்றேன். ”ஆமாம், இரவில் அழகில்லாதவை என ஏதுமில்லை” என்றார். ”இவர்கள் எங்கே போகிறார்கள்? தூங்குவார்களா?” ”இல்லை இவர்கள் பதினொருநாள் விரதம் எடுத்தவர்கள். நாற்பத்தொருநாள் இரவில் தூங்கமாட்டார்கள். பகலில் விழித்திருக்கவும் மாட்டார்கள். நாற்பத்தொருநாள் விரதம் எடுத்தவர்களும் உண்டு. இதற்கு கும்பஸார விரதம் என்று பெயர்…  ஒரு மறுபிறப்புக்கான வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது” நான் தலையசைத்தேன்.

டீ வந்தது. மிக அருமையான டீ. அப்போது எனக்கு எந்த அளவுக்கு டீ வேண்டியிருந்தது என அப்போதுதான் உணர்ந்தேன். கோப்பையை வைத்தேன். ”வெல்” என்றார் தாமஸ். ”·பாதர் நானும் உங்களிடம் ஒரு ஆட்டுக்குட்டியாக உபதேசம் தேடி வந்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்” தாமஸ் புன்னகை செய்தார். நான் நேரடியாக, ”நான் இதையெல்லாம் விட்டுவிட்டு ஓடலாமென்று நினைக்கிறேன் ·பாதர். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் நரம்புகள் அதிர்ந்துகொண்டே இருக்கின்றன. தாக்குபிடிக்க முடியாமல் நான் பைத்தியமாகிவிடுவேன்”

·பாதர் ”என்ன ஆயிற்று? அந்தப் பெண்ணிடம் சண்டையா?” என்றார். நான் நிமிர்ந்தபோது ”விஜயன் சொன்னார். அதை நானும்  ஊகித்திருந்தேன். நீ உள்ளே வந்ததும் அவள் எழப்போனதைப் பார்த்ததுமே எனக்கு தெரிந்துவிட்டது” நான் பேசாமல் இருந்தேன். ”கமான்” என்றார். ”அவள் மிக அப்பட்டமாக இருக்கிறாள் ·பாதர். அப்பட்டமாக என்றால் …அதாவது மிகமிக உண்மையாக. உண்மையான ஒன்றுக்கு என் மனம் இன்னமும் பழகவில்லை. அது என்னை அதிர்ச்சி கொள்ள வைக்கிறது.”’

நான் தடுமாறினேன் ”இதை எப்படிச் சொல்வேன்… அதாவது..இப்போது நான் ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறேன். உண்மை எனக்குத்தெரியும் அவள் உடலுக்குள் குருதியும் சதையும் நிணமும் சளியும் கோழையும் எல்லாம் இருக்கின்றன . ஆனால் நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவையும் கூடவே தெரிந்தால் என்ன செய்வது? எப்படி நான் அவளை காதலிப்பேன், காமம் கொள்வேன்?  என்னால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை”

”ஆகவே?” என்றார் ·பாதர். ”நான் தப்பி ஓடிவிடலாம் என்று நினைக்கிறேன். திரும்ப சென்னைக்குப் போகலாமென்று நினைக்கிறேன்” ”போகவேண்டியதுதானே?” நான் தயங்கி ”திரும்பி வருவதாக கடிதமெல்லாம் எழுதினேன்” ”ஓ” என்றார், சுத்தமான மலையாள ஓ. ”ஆனால் அனுப்பவில்லை. அதற்கு முன் உங்களைப் பார்க்கவேண்டுமென்று தோன்றியது…” ”ஐ ஸீ” என்றார் தாமஸ். ”அதாவது நான் உன்னை தடுத்து இதிலேயே நிறுத்தி வைக்கவேண்டிய தர்க்கங்களைச் சொல்லவேண்டுமென்று ஆசைப்படுகிறாய்”

நான் சற்றே கோபத்துடன் ”ஏன் நீங்கள் என்னை அனுப்பி வைக்கும் தர்க்கங்களைச் சொல்லவேண்டுமென நான் ஆசைப்பட்டிருக்கக் கூடாது?” ”அந்த தர்க்கங்கள் உன்னிடம் ஏற்கனவே இருக்கின்றன…எதற்காக குறிப்பாக என்னை தேடி வந்தாய்?” ”தெரியவில்லை…” நான் யோசித்தேன். ”ஒருவேளை நான் நீலிமா சொன்ன ஒரு விஷயத்தை அறிய விரும்பியிருக்கலாம். அது ஒரு சிறிய நெருடலாக என்னுள் இருக்கிறது” ”ஓ” என்றார் தாமஸ். அவரது முகம் நுட்பமாக மாறிவிட்டது.

நான் நேற்றைய நிகழ்ச்சியைச் சொன்னேன். ”அவள் அந்த வெள்ளையனிடம் சொன்னதுதான். ஒரு பெண்ணைப்பார்த்து சாதாரணமாக அவள் அழகாக இருப்பதாகச் சொல்பவனுக்கு அவள் அழகு ஒரு பொருட்டே இல்லை…” நான் இன்னும் கொஞ்சம் தயங்கி ”நீங்கள் நாம் முதலில் சந்தித்த நாளில் நீலிமாவிடமும் சொன்னீர்கள். அதன்பின் கமலாவிடமும் சொன்னீர்கள்” தாமஸின் உதடுகள் மெல்ல கோணலாக சிரிப்பைக் காட்டி இணைந்துகொண்டன. ”உனக்கு என்ன தெரிய வேண்டும்? நான் ஒரு பெண்வெறுப்பாளனா என்றுதானே?”

”அதில் எனக்குச் சந்தேகமே இல்லை” என்றேன் ”ஏனென்றால் யட்சி பொய் சொல்வதில்லை” தாமஸ் உரக்கச் சிரித்தார். ”உண்மை” என்றார். ”சொல்லுங்கள் ·பாதர் இந்தக் கற்பனாவாதம் இல்லாமல் இருந்தால் ஒருவன் இரவில் வாழமுடியுமா?” ”கற்பனாவாதமா? நல்ல கதை, நீ சொல்லிக்கொண்டிருப்பது அப்பட்டமான உண்மையைப்பற்றி அல்லவா?” என்றார் தாமஸ். ”அப்பட்டமான உண்மையில் திளைத்து வாழலாம் என்று நினைக்கும் கற்பனாவாதம் என்று சொல்லுங்கள். அந்தக் கற்பனாவாதம் இல்லாமல் நான் இரவில் வாழ முடியுமா? இது ஒரு உக்கிரமான பாவனையாகத்தானே இருக்கிறது? இதில் நடைமுறைத்தன்மையே இல்லை. என்றாவது ஒருநாள் இந்த கெட்ட கனவு கலையும் அல்லவா?”

தாமஸ் மேஜைமேல் தாளமிட்டபடியே என்னைப் பார்த்தார். ”உன் குழப்பம் என்ன என்று எனக்கு தெரியவில்லை” என்றார். ”நீ அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாக விஜயன் சொன்னார். நல்ல விஷயம் என்று எனக்கும் பட்டது. இப்போது நீ அவளைப் பயப்படுகிறாய். ஒரு பெண் ஆணுக்கு முன் போடக்கூடிய வழக்கமான வேஷங்களை எல்லாம் அவளும் போடுவாளா என்று சந்தேகப்படுகிறாய். அந்தமாதிரி வேடம்போடாத பெண்ணுடன் எப்படி ஒரு ஆண் குடும்பத்தில் வாழமுடியும் என்று நினைக்கிறாய். அந்த வாழ்க்கை சாத்தியமல்ல என்பதனால் திருப்பி பகலுக்கே ஓடிவிடலாம் என்று திட்டமிடுகிறாய்…அதுதானே?”

அவர் மிக எளிமைப்படுத்துகிறார் என்று எனக்குப் பட்டது. ஆனால் அங்கிருந்தே அவர் பேச ஆரம்பிக்கலாமே என்று நினைத்து தலையசைத்தேன். ”அவள் ஒன்றும் அசாதாரணமான பெண் அல்ல. மிக சர்வசாதாரணமான பெண் மட்டும்தான். வெளியே பகலில் வாழும் எந்த ஒருபெண்ணையும் இரவில் கொண்டுவந்து வைத்தால் இப்படித்தான் இருப்பாள். ..” ”யட்சியாகவா?” ”ஆமாம். யட்சியை பகலில் கொண்டுவந்து வைத்தால் வீட்டுவேலை செய்ய வைக்கலாம்…” நான் தலையசைத்தேன்.

”இதோபார் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவீதம் ஆண்கள் பெண்களை கவனிப்பதே இல்லை. இளமையில் அவர்களின் அழகு அவர்களின் பார்வையை திசை திருப்புகிறது. முதுமையில் அவர்களின் அழகின்மை திசை திருப்புகிறது. கவனித்துப் பார்த்த எந்த ஒரு ஆணும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் யட்சியைக் கண்டிருப்பான். தப்பவே முடியாது…” ”அவள் என்னை அருவருப்பதாகச் சொன்னாள்…” ”ஆமாம். ஆண்கள் வேறு பாலினம் என்பதற்காகவே பெண்கள் அவர்களை வெறுக்கிறார்கள். ஆண்கள் வேறு பாலினம் என்பதனாலேயே பெண்கள் அவர்களை விரும்பவும் செய்கிறார்கள்..”

நான் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். ”ஐ ஹேட் விமன்” என்றார் அவர். ”நான் ஒரு பெண்வெறுப்பாளன். ஆனால் தினமும் ஐந்துநிமிடங்களுக்கு எனக்கு அந்த நிலையில் இருந்து ஒரு இடைவெளி தேவையாகிறது. நான் சுயஇன்பம் செய்யும்போது…” நான் மெல்லிய அதிர்ச்சி ஒன்றை அடைந்தேன். ”அது கடவுள் எளிய மனித உடலை வைத்துக்கொண்டு செய்யும் விளையாட்டு. அந்த சிறுமையை எதிர்த்து அடக்கி அதை பெரிதாக ஆக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. அதேபோன்றதுதான் இதுவும். நீ ஒரு பெண்விரும்பி. பெண்வெறுப்பு உன் நாளின் ஐந்து நிமிடங்களை எடுத்துக்கொள்ளட்டுமே. அது அந்த விருப்பத்தை இன்னமும் உண்மையானதாகவும் தீவிரமானதாகவும்தான் ஆக்கும்.” தாமஸ் மெல்ல புன்னகைசெய்து, ”அந்த உரிமையை நீலிமாவுக்கும் கொடுத்தாலென்ன”

”ஒட்டுமொத்தமாக பார்த்தால் நான் போகக்கூடாது என்று சொல்கிறீர்கள்…இவளை திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறீர்கள்” ”நான் அப்படிச் சொல்லவில்லை. இவள் ஒன்றும் ஒரு அபூர்வ யட்சி இல்லை,  எல்லா பெண்களையும் போல ஒருத்தி என்கிறேன். இந்த இரவில் நீ யட்சியில் இருக்கும் பெண்ணைப் பார்க்கிறாய். பகலுக்குப்போனால் பெண்ணில் இருக்கும் யட்சியைப் பார்ப்பாய். நீ விரும்புவதை தேர்வுசெய்துகொள்ளலாம் ”

தாமஸ் அதே கசப்புபடர்ந்த புன்னகையை விரித்தார் ”இருபது வருடங்களாக நான் பாவமன்னிப்புக் கூண்டில் இருக்கிறேன். தினமும் பத்து மனிதர்கள் என்னிடம் முறையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு சாதாரணமான ஆண் திருமணமாகி ஆறுமாதத்திற்குள் பெண்ணின் மென்மையான தோற்றத்திற்குள் இருக்கும் அந்த உலோகத்தை காண்பான். குரூரம், பிடிவாதம், கூர்மை. அவன் பூரணமாக அவளிடம் தோற்பான். அனேகமாக அப்போதுதான் அவன் முதல்முதலாக அவளை அடிப்பான்…. பெண்களை அடிக்கும் ஆண்கள் பரிதாபமாக பெண்களிடம் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள்தான்”

”எங்கோ ஒருபுள்ளியில் அந்த உண்மையுடன் அவன் சமரசம் செய்துகொள்ள ஆரம்பிக்கிறான். தோல்வியை ஒத்துக்கொள்கிறான். ஆனாலும் அவ்வப்போது உக்கிரமான கழிவிரக்கமாக ஆங்காரமாக ஆணிலிருந்து அந்த தோல்வியின் தாபம் வந்துகொண்டுதான் இருக்கிறது” என்றார் தாமஸ் ”இந்தக் கூண்டில் தலையை முட்டி எத்தனைபேர் குமுறி அழுதிருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் அவனுக்குக் கொஞ்சம் கண் இருந்தால் தன் ஐந்துவயதுப் பெண்குழந்தைக்குள்ளேயே அவன் அந்த உலோகத்தைக் காண்பான். ஒன்று அவளைக் கொல்லவேண்டும் அல்லது சரணடைய வேண்டும், ஒருபோதும் அவனால் அவளை வெல்ல முடியாது”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே எழுந்து சென்றுவிடவேண்டும் என்று எனக்கு தோன்றிவிட்டிருந்தது. உண்மையில் சரியான சொற்கள் அமையாமல் நாங்கள் இருவருமே சுற்றிவருவதாகத் தோன்றியது. இந்தியமனதுக்கு ஆங்கிலம்  பலவகைகளிலும் வசதியானது. அதன் அன்னியத்தன்மை காரணமாகவே உணர்ச்சிகரமான விஷயங்களை ஒட்டாமல்  திட்டவட்டமாகச் சொல்ல முடிகிறது. ஆனால் சிலசமயம் உணர்ச்சிகளை அது வெறும் கோட்பாடுகள் போல ஆக்கிவிடுகிறது. பட்டாம்பூச்சிகளை எலக்ட்ரானிக் பறவைகளாக ஆக்குவது போல.

ஒருவேளை மலையாளத்தில் பேசியிருந்தால் இன்னமும் துல்லியமாகப் பேசியிருக்க முடியுமோ என்னவொ. அந்தமொழிக்கே உரிய நக்கல்களும் இடக்கரடக்கல்களும் தொனிமாறுபாடுகளுமாக இன்னமும் அந்தரங்கமாக நினைப்பவற்றை பரிமாறியிருக்க முடியுமோ? தமிழில் நான் பேசியிருந்தால்  இந்த அறிவுஜீவிச் சொற்களை எல்லாம் சிதறடித்துவிட்டு அழுதிருப்பேன் என்று தோன்றியது.

”நான் கிளம்புகிறேன்” என்றேன். ”நான் உன்னைக் குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன்” என்றார் தாமஸ். ”யட்சியிடமிருந்து நீ தப்பமுடியாது. பகலின் பல்லாயிரம்பாவனைகளால் அவளை மறைத்து வைக்கலாம். அந்தப்பொய்தான் உனக்குத்தேவை என்றால் போ. ஆனால் போனால் அங்கேதான் நீ இன்னும்பெரிய ஏமாற்றத்தைச் சந்திப்பாய்.” எழுந்து கையை நீட்டியபடி ”நான் எங்களூரில் மலைவெள்ளம் புரளும் ஆற்றில் நீந்தி வளர்ந்தேன். செமினாரிக்கு வந்தபோது இங்கே நீச்சல்குளம் இருந்தது. என்னால் அதில் நீந்தவே முடியவில்லை. தேங்கிய நீர்வட்டம் என் தோள்களுடன் உரையாடவில்லை. எனக்கு காட்டாறுதான் தேவைப்பட்டது”

நான் அவரது மென்மையான ஈரமான கையைப் பிடித்து குலுக்கிவிட்டு திரும்பி நடந்தேன். வராந்தா மெழுகுவத்தி ஒளியில் பட்டாம்பூச்சி இறகுபோல அதிர்ந்துகொண்டிருந்தது. என் காரை நோக்கிச் சென்று கதவைத்திறந்து அதனுள் அமர்ந்த போது நான் ஒன்றை உணர்ந்தேன், என் அகம் முடிவெடுத்துவிட்டிருந்தது. நான் இன்று அதிகாலையிலேயே கிளம்பபோகிறேன். இனிமேல் எனக்கு இரவு இல்லை. தாமஸ் சொன்ன சொற்கள் வழியாகவே அந்த உறுதியான முடிவுக்கு  நான் வந்திருந்தேன் என்று நினைத்தபோது புன்னகை வந்தது

[மேலும் ]

முந்தைய கட்டுரைகேணி கூட்டத்தில் நாஞ்சில்நாடன்
அடுத்த கட்டுரைமலை ஆசியா – 4