உறவு பற்றி…

அன்புள்ள தனா

கதை நன்றாக வந்துள்ளது.

தாம்பத்தியம் என்பதன் இரு எல்லைகளை அவை ஒன்றுடன் ஒன்று பெரிதாக உரசாமலேயே கதையில் சொல்லியிருக்கிறீர்கள். கதைமாந்தரை விவரிக்காமலேயே காட்டிவிடவும் முடிந்திருக்கிறது. சிறுகதையின் இலக்கணம் அதுதான். அது மெல்லிய தீற்றல்களாக மட்டுமே கதையைச் சொல்ல வற்புறுத்தும் கதைவடிவம். அந்த இலக்கணத்தை மீறவேண்டுமென்றால் ஆழமான ஆன்மீக அலைக்கழிப்புகள் அல்லது அபூர்வமான உணர்வெழுச்சிகள் தேவை. இக்கதை உறவுகளின் பின்னலில் ஓர் ஊடும் பாவும் சந்திக்கும் தருணம் மட்டுமே. ஆகவே ஜப்பானிய மூங்கில் ஓவியங்கள் போல மெல்லிய மங்கலுடன் இருக்கிறது கதை. அதுவே அதன் கலையமைதி.

அத்துடன் உறவுகளைப்பற்றிய கதையை முழுக்க விளக்கிவிடக்கூடாதென்ற அடக்கம் உங்களிடமிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மனிதஉறவுகளைப்பற்றி தேற்றத்தையோ கொள்கையையோ அல்லது தீர்ப்பையோ சொல்லக்கூடிய கதைகள் அதனாலேயே வீழ்ச்சி அடைந்துவிடுகின்றன. உறவுகளின் கடைசிச் சொல்லை முடிவிலிக்கு விட்டுவிடும் கதைகளே நம்மில் ஆழ்ந்த ஆமோதிப்பைப் பெறுகின்றன. அவ்வகையிலும் முக்கியமான கதை.

கதையின் பிசிறு என்றால் உரையாடல் மொழியும் கதையின் சித்தரிப்பு மொழியும் ஒரேபோல இருப்பதுதான். உரையாடல் மொழியை ஆரம்பகால ஆசிரியர்கள் இயல்பாக அமைத்துவிடமுடிகிறது. காரணம், அது காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆசிரியர்கூற்று மொழியைத்தான் இயல்பாக அமைக்கமுடிவதில்லை. அதிலிருந்து தப்ப பேச்சுமொழியாக அதையும் அமைப்பது ஒரு குறுக்குவழி. அதை எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கக்கூடாது. ஆசிரியர் மொழி இயல்பாக உங்களுக்குள் ஓடும் மொழியாக இருக்கவேண்டும். அதேசமயம் அந்தக்கதையின் இயல்புக்கு ஏற்க உணர்ச்சியற்ற சித்தரிப்பாகவோ உணர்ச்சிகரமான அகமொழியாகவோ அமையவும் வேண்டும். அதை அடைவதே எழுத்தாளனின் பெரிய சவால்

அதைச் சந்தியுங்கள். வாழ்த்துக்கள்

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் sivendran@gmail.com

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் drsuneelkrishnan@gmail.com

10. வேஷம் பிரகாஷ் சங்கரன் drsuneelkrishnan@gmail.com>

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் rajagopalan.janakriraman@iciciprulife.com

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் rajagopalan.janakriraman@iciciprulife.com

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா haranprasanna@gmail.com

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் suren83@gmail.com

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி essexsiva@gmail.com

1. உறவு தனசேகர் vedhaa@gmail.com

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைநடன இசை- பைலா
அடுத்த கட்டுரைபடைப்பில் காலம்