மோதல்-நிலைப்பாடு – கடிதம்

ஆசிரியருக்கு ,

வகுப்பறையில் பாடம் நடக்கிறது. ஆசிரியர் சிக்கலான விஷயங்களை விளக்குகின்றார்.  எனக்கு விளங்கிக் கொள்வதில் சந்தேகம் வருகிறது.  “சார். இப்படியா சொல்றீங்க?” என்பது போன்ற கேள்விதான் என்று நினைத்துக் கேட்டேன். தவறாக ஆகிவிட்டது.  மன்னியுங்கள்.

இது பரபரப்பான சம்பவம் என்றோ, உடனுக்குடன் செய்தியென்றோ நினைத்துக் கேட்கவில்லை. நெடுநாளாகவே ஒரு உயரிய மக்கள் ஆட்சி விழுமியம் கொண்ட குடிமை சமூகம் குறித்த பல கேள்விகள் மனதில் உண்டு.  அதன் இயங்கு முறை, குறைபாடுகள், செயல்பாட்டாளர்கள் மற்றும் அதன் மனசாட்சி எனப் பலவடிவங்கள் குறித்து யோசித்துப் பார்ப்பேன். தங்களது கட்டுரைகள் மிகப் பெரிய வழியில் உதவுகின்றன. அந்த வகையில் காவலமைப்பும், அதன் சமூகத் தாக்கமும் என்பது குறித்த கட்டுரையாகத்தான் தங்களது கட்டுரையை நினைத்துப் படித்தேன்.

எந்த சமூகப் பிரச்சினையும் ஆம் இல்லை என்ற இருமை சிந்தையில் அடங்காது எனப் பலமுறை சொல்லி இருக்கிறீர்கள். எல்லா விஷங்களுக்கும் ஒரு முரணியக்கம் உண்டு, அது ஒரு புள்ளியில் சமரசமயப்படுவதில்தான்அந்தப் பிரச்சனை தீர்வை நெருங்க முடியும் என்பதும் நீங்கள் பல கட்டுரைகளில் சொன்னதுதான். குடிமை சமூகப் பிரச்சனைகளான சாதி,ஊழல் குறித்த உங்கள் கட்டுரைகள் இந்த வகை இருமை தாண்டிய முரணியக்கம் விளக்கும் கருத்துக்களை மிக அழகாய்ச் சொல்லி இருந்தன.

காவல் அமைப்பு, அதன் வலிமை, அதில் நேரும் சிக்கல்கள், உயிர்ச் சேதங்கள் குறித்து முன்பிருந்தே ஒரு சிக்கலான குழப்பம் உண்டு. இந்த வகை என்கவுண்டர் செயல்படும் முறை குறித்து பாலா உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கருத்துக் கூறியிருந்தார். இவை மெல்ல மெல்ல ஒரு கதாநாயக குணத்திலிருந்து எதிர்அமைப்புக்குச் செல்லக் கூடியவை எனக் குறிப்பிட்டு இருந்தார். அவர் அருகிலிருந்து இந்தச் செயல்பாடுகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லி இருந்தார். இந்தக் கட்டுரை இந்த வகைச் செயல்பாடுகளின் இயங்கு தன்மையின் ஒரு பகுதியை மட்டும் அதிக அளவில் முன்வைத்து அது அவ்வாறு தொடர்ந்து இயங்கும்போது அதில் உருவாகும் வடிவ மாற்றம் குறித்து அதிகமாய் சொல்லவில்லையோ எனத் தோன்றவும் உங்களிடம் கேள்வி கேட்டேன். இதில் உயிர்ச்சேதங்கள் அதிகம் என்பது எனது குழப்பத்தை அதிகரித்தது. அது எனதுபுரிதலின் குழப்பமே. நன்றி.

-நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

தயவுசெய்து இதை தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மனம் புண்படுவது, மன்னிப்புக் கோருவது எதிலும் பொருள் இல்லை. இது மிகச்சாதாரணமான விஷயம்.

சிந்தனையில் நாம் செய்யும் பிழைகளைப் பொதுவாக நம்மால் காண முடியாது. அதை இன்னொருவர் கறாராகச் சுட்டிக்காட்டும்போதே அது நம்மை அறையும். அப்படி நம் அகங்காரம் அறைபட்டாலொழிய நம்மை நாம் நகர்த்திக் கொள்ளமுடியாது.

நான் இத்தகைய அறைகளைத் தொடர்ந்து பெற்றபடித்தான் என்னை முன்னகர்த்திக் கொண்டிருக்கிறேன். ஆகவே சிந்திக்கக்கூடியவர் என எனக்குத் தோன்றும் ஒருவரை உடைக்கத் தயங்கவே மாட்டேன்.

நீங்கள் சொன்ன அதே கோணத்தில் இன்னும் ஆவேசமாக எதிர்வினையாற்றிய சிலரை என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள். அவர்களின் அசட்டுத் தன்னம்பிக்கையைக் கண்டு சிரித்துக்கொள்வதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை.

எந்த ஒரு கருத்துநிலையையும் புரிந்துகொள்ளத் திராணியற்றவர்கள், சம்பிரதாயமான அரசியல் விவகாரங்களை மட்டுமே சிந்தனை என எண்ணிக்கொள்பவர்கள் அவர்கள். சென்ற பத்து வருடத்தில் அடிப்படைப் புத்திசாலித்தனத்தின் ஒரு கீற்றைக்கூட ஒருவரியைக்கூட வெளிப்படுத்தாதவர்கள். அந்த அறியாமையின் மேல் நின்று எவரையும் விமர்சிக்கவும் கிண்டல்செய்யவும் துணிபவர்கள்.அந்த அறியாமையின் தன்னம்பிக்கையை எவராலும் உடைக்கமுடியாது.

நான் உடைக்க முயல்பவர்கள் எல்லாருமே உண்மையாகவே சிந்திக்க முயல்பவர்கள். சொல்வது சரிதானா என்ற ஐயம் கொண்டவர்கள். சிந்தனைகளின் பல சாத்தியங்களைப்பற்றிய நம்பிக்கை கொண்டவர்கள். அந்த நிலையில்தான் உங்களைப்பற்றிச் சொன்னேன்.

அரசுசார் படுகொலைகளை எந்த வகையிலும் எப்போதும் ஆதரித்ததில்லை. மானுட அறத்துக்கே இழுக்கான செயல் என்றே அவற்றை நினைக்கிறேன். ஒரு பழங்குடிச்சமூகம் கூட விசாரிக்காமல் கொலைசெய்யாது.

ஆனால் அவற்றைப்பற்றி ஒரு உக்கிரநிலையில் பேசுபவர்கள் அந்த எதிர்ப்பின் நடைமுறைப் பயனைப்பற்றி யோசிக்கிறார்களா என்பதே என் எண்ணம். அந்தத் தரப்பைப்பற்றி சிந்திக்காமல், அதை முற்றிலும் எதிர்மறையாக முத்திரைகுத்திப் பேசுவது செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

சரி, அதை விடுங்கள். நான் சொல்ல வருவது இதுதான். தமிழில் பொதுவாகவே நமக்கு இப்படி முரணியக்க ரீதியாகச் சிந்தித்துப் பழக்கமில்லை. ஒற்றைவரிகளே நமக்குத் தேவை. அதிலிருந்து வெளிவருவதற்கு ஒரு அதிர்ச்சி தேவைப்படுகிறது. அதைத் தொடர்ந்து வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது.

நான் சுட்டிக்காட்டியது அதைத்தான். நட்புடனும் நல்லெண்ணத்துடனும். தொடர்ந்து பேசுவோம்.

ஜெ

ஏன் பொதுப்பிரச்சினைகளைப்பேசுவதில்லை?

பொதுப்பிரச்சினையும் புரிதலும்..

முந்தைய கட்டுரைகாந்தியின் சனாதனம்-2
அடுத்த கட்டுரைகாந்தியின் சனாதனம்-3