கொஞ்சம் அறபியில், மிச்சம் தமிழில் – ஆக மொத்தம் உலக இலக்கியம்- கொள்ளு நதீம்

கார்த்திகை பாண்டியன் தமிழ் விக்கி

இந்தப் பனிரெண்டு கதைகள் உயிர்மை இதழில் நவம்பர் 2021-இல் ஆரம்பித்து 2022 நவம்பரில் முடிந்தன. ஒவ்வொரு சிறுகதையையும் படித்துவிட்டு, உடனுக்குடன் மாதந்தவறாமல் கார்த்திகைப் பாண்டியனிடம் போனில், வாட்ஸப்ல், முகநூலில் என் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தேன். அதற்கு முன் அவர் மொழிபெயர்த்த தொகுப்புக்கள் என்னிடமிருந்த போதிலும் அறபு என்பதால் இதில் சற்று கூடவே ஆர்வம் காட்டத் தொடங்கினேன்.

அதற்கு இரண்டு காரணங்கள், என் இருப்புச் சார்ந்துபிறந்தது முதலே (இஸ்லாமிய) மதம் வழியாக எனக்கு அறபுக் கதைகள் அறிமுகமாகி வந்தன. பிறகு வேலைவாய்ப்புக் காரணமாக முழு வனவாச காலம் (1997 – 2011 வரை) என பதினான்கு ஆண்டுகள் (மத்தியக் கிழக்கு நாட்டின் எண்ணெய் வயலில் மனிதவள மேம்பாட்டு அலுவலராக)  பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்தேன்.

அங்கு மேலதிகமாக அறபு இலக்கியம்என் வாசிப்புப்பழக்கத்தில் பாரிய செல்வாக்கைச் செலுத்தின. கணக்கு வழக்கின்றி அறபுச் சிறுகதைகள், நாவல்களை வாசித்திருக்கிறேன். ஆல்பர் காம்யு தமிழில் மொழிபெயர்க்கப்படாத காலத்திலேயே அறபு மொழிபெயர்ப்பு வந்துள்ளதை அங்குள்ள புத்தகக்கடைகளில் பார்த்துள்ளேன். அறபு மொழி நேரிடையாக தெரியாத போதும், ஆங்கிலம் வழியாக அறபு இலக்கியத்தை கடந்த கால் நூற்றாண்டுகளாக பின்தொடர்ந்து வருபவன் என்கிற முறையில்எனக்கு இதைக் குறித்து எழுத, பேச  அடிப்படைத் தகுதி இருப்பதாகவே உணர்கிறேன்.

வளைகுடா நாட்டில் பணிபுரியச் சென்றதும் (1997-ல்) அங்குள்ள சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், இலக்கிய, மதம் சார்ந்த விமர்சன நூல்களை (ஆங்கிலத்திலும், ஓரளவு தெரிந்த உருதுவிலும்) படிக்கத் துவங்கினேன். அறபியும், பாரசீகமும் அறிந்து கொண்டால் அனுகூலம், இல்லையென்றாலும் குறையொன்றுமில்லை. மொராக்கோவின் ரபாத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் இடையில் ஏறக்குறைய 12,000 கி.மீ தூரம்.  இங்கு பரவி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஏதோவொரு வகையில் அறபு மொழி செல்வாக்கின் கீழேதான் உள்ளனர். ஆயிரமாண்டுகாலம் அங்கு முகிழ்த்த பல்வேறு சிந்தனைப் போக்குகள், வெவ்வேறு பண்பாடுகள், உணவு, உடை பழக்கவழக்கம் குறித்து கூர்ந்து கவனித்து வந்துள்ளேன்.

அப்பொழுதுஎனக்கும் முன்பாக அனேகமாக 80-களின் ஆரம்பத்தில் சௌதி அரேபியா, அமீரகம் துபாய் போன்ற நாடுகளிலிருந்து நாகூர் ஆபிதீன், சீர்காழி தாஜ் தமிழ் வலைப்பூக்களில் எழுதி வந்தனர். சற்று பிந்தி தமிழ்மணம், திண்ணை போன்றவற்றில் (‘உடல் வடித்தான்புகழ் அபுல் கலாம்) ஆசாத், எச். பீர்முஹம்மத் ஆகியோரும் ஈராயிமாவது ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வப்போது புனைவு, அபுனைவுகளை எழுதிக் கொண்டிருந்தனர். இன்னும் நிறைய பேர்களுடன் நேரடி அறிமுகம் இல்லையென்பதால் பெயர்களைக் குறிப்பிடவில்லை, மற்றபடி அறபு இலக்கியத்தை பயிலத் தொடங்கியிருந்த காலமது. இவற்றில் அதாகப்பட்டது, அறபு இலக்கியத்தில் யார் யாரையெல்லாம் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்றெல்லாம் யோசிப்பேன். 

ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன் அமெரிக்க, ருஷ்ய இலக்கியம் இங்கு தெரிந்த அளவுக்கு ஏன் அறபு உலகம் பணமாக, பெட்ரோலிய வளமாக மட்டும் இங்கு தெரிகிறது? அறபு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதற்கான ஒரு சலனம், ஓர் அசைவு எதுவும் தமிழில் இல்லாத நிலை ஏங்க வைத்தது. இத்தனைக்கும் மலையாளத்தில் பென்யாமின் எழுதியஆடுஜீவிதம்” (2008-ல்) வந்துவிட்டிருந்தது. 

நம்மிடம் இங்கு இராமாயணம், மகாபாரதம் இருப்பதைப் போல எல்லா தொல்நாகரிகங்களிலும் கதைகள் உள்ளன, ஆயிரத்தோரு இரவு அறபுக் கதைகள், முல்லா (நஸ்ருத்தீன்) கதைகளின் தோற்றமும் ஆயிரமாண்டு பழமை கொண்டது. கி.பி. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் பக்தி இலக்கியம் தோன்றி வளர்ந்ததாக கணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் அறபு மொழி படிப்படியாக பாரசீகம், துருக்கி, ஆப்கான் பிறகு இந்திய மொழிகளின் மீதும் தமது செல்வாக்கை செலுத்தத் தொடங்கியது. நபிகள் நாயகத்தின் மருமகன் அலியை மூலப்பிதாகவாக கொண்டு சூஃபிய மரபு கிளைத்ததை ஏற்றுக் கொண்டு பார்த்தால்இந்த இரண்டின் தோற்றப்பாடும் ஒரே கட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக நம் தமிழிலுள்ள சங்க இலக்கியம் எழுதப்பட்டது / தொகுக்கப்பட்டது கி.மு. 5 முதல் கி.பி. 2 என எழுநூறு ஆண்டுகளைக் கூறுவர். அதேபோல்சற்று பிந்தி வந்த அறபு செவ்விலக்கியம் இஸ்லாமிய தோற்றத்துக்கும் முந்தையது, இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் திருக்குர்ஆனுக்கும் முந்தைய வரலாற்றைக் கொண்டது. 

அறபு என்று சொன்னவுடனேயே அதை முஸ்லிம்களுடனும், இஸ்லாமிய மதத்தோடும் இணைத்துப் பார்க்கும் போக்கு வலுவாக உள்ளது. Foreign Notices of South India நீலகண்ட சாஸ்திரியும்,  Arab Geographers Knowledge of  Southern India ஹுசைன் முஹம்மத் நைனாரும் எழுதிய இரண்டு நூல்கள் 1942-ல் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. உள்ளபடியே சொன்னால் Megesthenes (கி.மு. 3 / 4 ஆம் நூற்றாண்டு) யுவான் சுவாங் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டு) என இன்றிலிருந்து 1400 – 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலக்கிய பதிவுகளில் பல்வேறு வெளிநாட்டினர் இங்கு இந்தியா வந்துள்ளனர். நமது தென்னிந்தியர்களும் ரோமாபுரி வரை சென்ற வணிகர்களைப் பற்றியும் ஓரளவு தமிழில் பரவலாக பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்தளவு பழைய வியாபார தொடர்புகள் (அறபு நாட்டில் முஹம்மத் நபிகள் இஸ்லாம் என்கிற மதத்தை தோற்றுவிப்பதற்கு) பல நூறு ஆண்டுகள் முன்பிருந்தே இருந்து வந்தது.

கதை சொல்வதும், கேட்பதும் மனிதர்களின் ஆதிப் பழக்கம்.  மாவீரர்கள், அதிமனிதர்களின் கதைகளே முன்பு இவ்வளவு காலமாக கதைகளாக சொல்லப்பட்டன, (பிறகுதான்) அவை எழுத்து வடிவத்துக்கு வந்தன.  அவை அடிப்படைக் கேள்விகள், அனுபவங்கள், கனவுகள், ஆசைகளை சேமித்து வைத்துள்ளன. இதுவே இன்றைய புனைவிலும் நாம் காணக்கூடிய அம்சம். “கிஸ்ஸாஎன்பது கதைகள், “ரிவாயாஎன்பது விவரணைகள், “ஹிகாயாஎன்பது நீதிபோதனைகள் / ஞானமொழிகள். புராணங்களிலுள்ள கதைகளிலிருந்து சிறுகதைகள் வேறுபடுவதால்தான் அதை  எல்லா மொழிகளிலும் தனித்து காட்டுவதைப் போல, அறபு மொழியிலும்கஸீராஎன்கிற வகைப்பாட்டில் சிறுகதைகள் வருகின்றன. 

.வே.சு.ஐயர் (1881- 1925) ‘குளத்தங்கரை அரச மரம்தமிழின் முதல் சிறுகதையை எழுதினார். அதே காலகட்டத்தில் இங்கு இப்பொழுது தமிழ் இலக்கியத்தில் நன்கு அறிமுகமான கலீல்  ஜிப்ரான் (1882 – 1931), மிகெய்ல் நைமி (1889 – 1988);  இன்னுமொரு எகிப்தியரான  முஸ்தபா லுத்ஃபி அல்மன்பலூட்டி (1876 – 1924) அவ்வளவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததால் இங்கு தமிழில் அவரை யாருக்கும் அதிகம் தெரியாது. முஹம்மத் ஹுசைன் ஹைகல் (1888 – 1956) “ஜைனப்என்கிற  நெடுங்கதை 1914-ங்கில் வெளியானது. கலீல் ஜிப்ரானின்முறிந்த சிறகுகள்’ 1912-ஆம் ஆண்டு முதல் பதிப்பைக் கண்டது என்பதோடு சேர்த்து இதைப் புரிந்துகொள்ள வேண்டும். 90 நூல்களை எழுதியவர் கலீல் ஜிப்ரான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. இங்கு அவரின்,  தீர்க்கதரிசிமட்டுமே கிட்டத்தட்ட எல்லா தரப்பு தமிழ் இலக்கிய வாசகர்களாலும் படிக்கப்பட்ட நூலாகும். மிகெய்ல் நைமிமிர்தாதின் புத்தகம்என்கிற ஒரே ஒரு நூலை மட்டுமே எழுதியவர்.  கலீல் ஜிப்ரான் மிகக் குறைவான ஆயுட்காலம் (வெறும் 48 வயது) மட்டுமே வாழ்ந்த நிலையில் மிகெய்ல் நைமி தன் நண்பரைவிட இரண்டு மடங்கு அதிகமான வாழ்நாளைக் கொண்டிருந்தவர். அறபுச் சிறுகதையின் முன்னோடி ஆளுமை இவர்களே .

எல்லா மொழிகளிலும் சிறுகதை என்பது புதிய வடிவம், ஆனால் அதன் வேர்கள் நீதிக்கதைகளின் காலம் வரை பின்னோக்கிப் போகக் கூடியது. “கஸஸ்என்று (அறபுச்) சிறுகதைகளுக்கென்றே தனி மாத இதழ்கள் தொடங்கி நூறாண்டுகளாகப் போகின்றன. அறபு சிறுகதைகளில் உலகளாவிய நோக்கை கொண்டு வந்த Maupassant (1850 – 1893) என்று நினைவுக் கூரப்படும் கஸ்ஸான் கனஃபானி (1936 – 1972) முக்கியமானவர். அறபு கவிஞர்களென்று இங்கு தமிழில் அறிமுகமான பலரைப் போலவே மஹ்மூத் தர்வேஷ் (1941 – 2008) எழுதிய நனவோடைக் குறிப்புக்கள் சிறுகதை போன்ற புனைவு மொழியில் எழுதப்பட்டவை. அறபு மொழியில் இஸ்லாம், மதநோக்கு என்பதற்கு முன்பே கலை, இலக்கிய படைப்பாற்றல்  பெரும் உச்சத்தை தொட்டு இருந்தது. நவீன அறபு இலக்கியம் என்பது எல்லா வகையிலும் அதன் ஆரம்பகால வேர்களில்அதாவது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையில் வேர்கொண்டுள்ளது. 

பழங்குடி சமூகப் பண்புகளின் பிரதான அம்சம் என்பது கூட்டுறவு. பெரிய கூட்டுக் குடும்பங்கள்ஒரு குட்டி கிராமம் போல ஊர் மையத்திலுள்ள பொதுப் பூங்காவில், கடற்கரைப் பகுதியாக இருந்தால் அந்த மணல் பரப்பில் ஐம்பது பேர்கள் கொண்ட மூன்று தலைமுறையின் வெவ்வேறு வயதிலான ஆணும் / பெண்ணும் கலந்த சிறு குழுவை சர்வ சாதாரணமாக ஒவ்வொரு வார இறுதி நாட்களில் அவ்வாறு நான் இவர்களை கண்டிருக்கிறேன்.

இந்தத் தொகுப்பின் முதல் கதையாக நாற்பத்தியோரு ஸ்தூபிகள். அறபு வாழ்க்கையில் பள்ளிவாசல் என்பவை வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல. கூட்டு வாழ்க்கையின் (சந்திப்பு) மையங்கள்.  தாராளமயமாக்கல், எண்ணெய் வளம் மக்களை பெரு நகரில் குடியேறச் செய்துள்ளது. அங்கு எழுந்து வரும் பிரமாண்டமான மசூதிகள் ஒருவகையில் பண்பாட்டு வெளியாகவும் திகழ்கின்றன.

கிரிக்கெட் மீது நமக்கிருக்கும் மோகத்தைப் போல அறபு (இளைஞர்களின்) வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம், கால்பந்தாட்டம். அங்குமிங்குமாக அது பதிவாகியுள்ளது. படித்த கதாபாத்திரங்களின் உரையாடல் அறிவார்ந்து வைக்கப்பட்டுள்ளது, அதேநேரம் பாமரர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும்போதும் பரிமாறிக் கொள்ளும் மொழி பேச்சுவழக்காக தனித்து தெரிகிறது. மொழியாக்கம் கவனமாக செய்ததை காட்டுகிறது.

நகரம், கிராமம் எல்லா இடங்களிலுமுள்ள பெண்கள் இதில் சிறுகதையில் இருந்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அறபுகள் பழமைவாதிகள் என இங்கொரு பேச்சு நிலவி வருகிறது. அதற்கு மாற்றமாக, முற்போக்கு / புரட்சிப் பெண்கள் இந்தச் சிறுகதைகளில் இல்லாவிட்டாலும்கூட கதையில் அவர்கள் விளிம்புநிலையில் இல்லை, வாழ்க்கையின் மையத்தில் உள்ளனர். 

ஓரளவுக்கேனும் நாம் ஜனநாயக முறைக்கு பழகிக் கொண்டிருந்தாலும்அறபு நாடுகளில் சரிபாதி இன்னும் மன்னராட்சி அல்லது காலக்கெடுவோ / இத்தனை முறை / இத்தனை ஆண்டுகள் என வரைமுறை எதுவுமின்றி அதிபர்களைக் கொண்ட அரசியல் அமைப்பில் நீடித்து வருகின்றன. முஹம்மத் அல்ஷாரிக் எழுதியவிசாரணைஎன்கிற சிறுகதை மன்னராட்சியும், வளம் கொழிக்கும் நிலவும் வளைகுடா நாட்டின் நிலவரம் வரிக்கு வரி உயிர்ப்புடன் இருக்கிறது. பொருளியல் அசமத்துவத்தை  சற்று நுட்பமாக பார்த்த பேராசிரியர், எங்கும் போல  மாணவப் பருவத்தில் கிளர்ச்சி மனப்பான்மையுள்ள இளைஞர், மேற்கத்திய வாழ்க்கை என்கிற கான்வாஸில் அருமையாக நெய்யப்பட்டுள்ளது.

இங்கு திரைப்படங்கள் அரசாங்கத்தின் தணிக்கைக்கு உட்பட்ட பிறகே பொதுவெளியில் வைக்கப்படும் நடைமுறை இருக்கிறதல்லவா, அதே நேரம் நம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுதுவதை (இலக்கிய) பத்திரிகையாசிரியர்கள் பொதுவாக தணிக்கை எதையும் செய்வதில்லை. பெரும்பாலும் நேரடியாக அச்சேற்றிவிடுவார்கள். ஆனால் அறபு நாடுகளில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுதி அனுப்புவதை (இதழாசிரியர்) அங்குள்ள பண்பாட்டு அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே சிறுகதைகளும், நாவல்களும் பிரசுரமாகும், நூல்களாகவும் தொகுக்கப்படும்.

சுதந்திரம், ஜனநாயகம் குறித்த எந்தவொரு மாற்றுக் கருத்துகள் முன்வைக்காத அறபுகளின் வாழ்வியலை நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் அளிக்கும் புறச்சூழல் சுயதணிக்கையை மீறி உணர்த்தப்படுகிறது. பணம் ஒரு நாட்டை நவீனமாக்கி விடுமா, நவீனத்தை கடந்த பிறகுதானே பின்நவீனம் (எங்கும்) வர இயலும்? அந்த வகையில் பார்த்தால் இவ்வளவு (எண்ணெய்) செல்வசெழிப்பு கொட்டிக் கிடக்கும் அறபு நாடுகள், சமூகம் நவீனமானதா என கேட்டுக் கொள்ளலாம். அதனால் மறைபொருளாக பிரதிக்குள் இயங்கும் பூடகமாகன இலக்கிய போக்கை நுண்வாசிப்பால் மட்டுமே வாசகர்களால் கடக்க இயலும்.

அறபு நவீன இலக்கியத்தின் சிறுகதைத் திருமூலர் தாஹா ஹுசைன் (1889 – 1973) ஆவார். அவருக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் Naguib Mahfouz (1911 – 2006). நாகிப்ன் முக்கியமான ஆக்கங்கள் தமிழுக்கு வந்துவிட்டன. அதுவும் நோபல் பரிசு பெற்றநம் சேரிப் பிள்ளைகள்நாவலை பஷீர் ஜமாலி செய்திருந்தார். அதற்கு சற்று முன்பு 1001 அறேபிய இரவுகளின் மறு ஆக்கம் எனப்பட்டஅரேபிய இரவுகளும் பகல்களும்சா.தேவதாஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணமோ, தமிழ் வாசகப் பரப்பில் உரிய கவன ஈர்ப்பை பெறவில்லை என்பதே என் புரிதல். இந்தத் தொகுப்பில் அவருடைய “The Seventh Heaven” என்கிற தொகுப்பிலுள்ளஅறை எண் 12” என்கிற சிறுகதை இடம்பெற்றுள்ளது. ஓர் இளம்பெண் அங்குள்ள பெரிய ஊரின் தங்கும் விடுதி அறை எண் 12-ல் தங்க வருகிறாள். அவள் பதிவு செய்து தங்கியிருப்பதென்னமோ ஒரேஒற்றை அறை. அவளைக் காண கடுகடுத்த, குட்டையான, குண்டு மனிதன் என ஒப்பந்தக்காரர் யூசுப் காபில், பிணங்களைக் கழுவும் அகலமான மனிதன் சையத் எனவும் பெயர் சுட்டி காட்டப்படுகிறார். மகப்பேறு மருத்துவர், அங்காடி முதலாளி, தரகன், அலங்காரப் பொருள் விற்பவன், வாசனைத் திரவிய வணிகன், முகவர், மளிகைக்கடைக்காரர், வருவாய்த் துறை அதிகாரி, மீன் வியாபாரி, செய்தித்தாள் பதிப்பாளர், பேராசிரியர், மதத் தலைவர் என பலரும் அவளைச் சந்திக்க விரும்புகின்றனர். ஒருவர் பின் ஒருவராக வரும் இவர்கள் அனைவரும் தனித்தனியாக அறைக்குள் செல்கின்றனர். 

விடுதி ஆரம்பித்த கடந்த ஐம்பதாண்டுகளாக அங்கு பணிபுரிந்துவரும் விடுதி மேலாளர் அந்த பெண்மணியை போனில் அனுமதி கேட்டு உள்ளே அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார். பிணங்களைக் கழுவும் ஆள் வராண்டாவில் காத்திருக்கிறார். வெளியே பயங்கர மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அனேகமாக ஒரே நாளுக்குள் நடந்துவிடக் கூடிய கதை என்றே தோன்றினாலும் இந்த கதையில் ஏதோ அமானுடத் தன்மை இருப்பதை உணர முடிகிறது. யதார்த்த, மாய யதார்த்தத்துக்குமான இடைவெளி என்பது அவ்வளவு குறுகியதும், விரிந்ததுமான ஒன்று. யோசித்துப் பார்த்தால் விடுதி அறை, விருந்தினர், மேலாளர், ரூம் பாய், விருந்தினரைப் பார்க்க வரும் பார்வையாளர்கள்அவ்வளவுதான். அறபு, எகிப்திய பண்பாடு என்பது சுமேரிய பண்பாட்டின் நீட்சி. சற்றேறக்குறைய சிந்து சமவெளி நாகரிகத்துக்கு அடுத்து வந்த ஒன்று. இங்கு நாம்நீலி / அரக்கிஎனப்படும் பெண் மையக் கதாபாத்திரமே அந்த பண்பாட்டிலும் மர்மமானவளாக வெளிப்படுகிறாள். “ஜின்எனப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட மாய இருப்பு அது. விவரணையில் அந்த விடுதி அறையிலுள்ள உணர்வை, பதற்றத்தை, மர்மத்தை ஆசிரியர் நாகிப் மஹ்ஃபூஸ் சிறுகதைக்குள் நிரவியுள்ளார். கி.ரா. வின் கதைகளில் வரும் மங்கத்தாயாரம்மாள் நினைவுக்கு வருகிறார். 

அறபுகளின் வாழ்க்கையில் கூடுகைக்கு பெரிய முக்கியத்துவம் உள்ளது. இசை, ஓவியம், நாடகம், ஆடல், பாடல் என அத்தனை கலை வடிவங்களின் ஏதோ ஒரு கூறு இதிலுள்ள சிறுகதைகளில் வெளியாகியுள்ளன. அறபுகள் என்பதே தொல்குடி, இனக்குழுச் சமூகம்இன்று நாம் காணக்கூடிய பணக்காரத்தன்மைக்கு அடிநாதமாக நாட்டார் மரபு ஒன்றின் மீதே இது நிற்கிறது. மங்கல நிகழ்வுகளில் குலவை ஓசை எழுப்பும் பெண்களைப் பற்றி அறிய மகிழ்ச்சி உண்டாகிறது. அறபு நிலப்பரப்பை, அங்குள்ள மக்களின் மனவியல்பை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள இந்தச் சிறுகதைகள் உதவுகின்றன. இது ஒட்டுமொத்தமான அறபு இலக்கியமா என்றால் இல்லை, இந்தக் கதைகளில் அறபு இலக்கியத்தின் பிரதிபலிப்பை பார்க்கிறேன்இதன் மூலம் மேலதிகம் வளைகுடா எழுத்துக்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தச் சிறுகதைகளின் வழியாக அறபுகளின் சமூகம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், மத நம்பிக்கைகள், மரபு மீதான பிடிப்பு, நவீனத்தை எதிர்கொள்ளும் போக்கு ஆகியவற்றை அறியக் கூடும். கெய்ரோ, பாக்தாத், மெக்கா போன்ற நகரங்களைப் பற்றிய (நேரடி, மறைமுக) குறிப்புகள் அறபுகளின்  நனவிலியில் உள்ளவை. அதனால் அவை இங்கு வெளிப்பட்டிருப்பது இயல்பானதே. 

இந்த சிறுகதைகளினூடாக மதம், மெய்யியல் ஆகியவை அறபு வாழ்வோடு எப்படி இயைந்து போயிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. இந்த தொகுப்பில் ஒன்று போல் அல்லாத அழகான கதாபாத்திரங்கள் உள்ளன. பழங்குடி மனநிலை எப்பொழுதும் உணர்வுகளால் ஆனது. ஆனால் அங்கு பிற்பாடு வந்த பிரதான (இஸ்லாமிய) மதம் நகரவாசிகள், வியாபாரச் சமூகத்திலிருந்து எழுந்த ஒன்று. இந்த இரண்டு எதிர்நிலைகள் ஒன்றையொன்று உட்செறித்த முரணியக்கமாகும். 

பாலஸ்தீனஇஸ்ரேல் முரண், ஈரான் ஈராக் போர், குவைத் மீதான ஆக்ரமிப்பு, அதன் பிறகு அமெரிக்க ஆப்கன், ஈராக் மீதான படையெடுப்பு, பின்லாடனின் பயங்கரவாதம் என அங்கிருந்த அரசியல் சூழ்நிலையால் சமூக வாழ்க்கையில் பாரிய விளைவுகள் உண்டாயின. இந்த நிலையில் 1938-இல் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதும் அதனால் கிடைத்த பெருஞ்செல்வமும் சாதகமாகவும், பாதகமாகவும் அறபு சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. சௌதி அரேபியா பரப்பளவில், மக்கள் தொகை அடிப்படையில், செல்வ செழிப்பில், இஸ்லாமிய மதம் தீர்க்கதரிசி முஹம்மது நபி பிறந்த நாடு என்கிற வகையில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட நாடு. இலக்கியத்திலும் அதற்கு தனித்த இடமொன்றுள்ளது, ஆனால் அங்கிருந்து ஒரேயொரு சிறுகதைகூட கார்த்திகைப் பாண்டியனுக்கு (ஆங்கிலத்தில்) கிடைக்கவில்லை என்பது வியப்பானது.

பொதுவாக அறபு வாழ்க்கை என்பதே பயணங்கள் செல்லும் வழக்கங்களை பல ஆயிரமாண்டுகளாக ஒழுகி வருபவை, திடீரென்று எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பின் அது செய்த குறுக்கீடு என்பது நகரங்களுக்குள் அவர்களை அடைத்து வைத்தது என்றே கருதுகிறேன். அறபு சிறுகதைகளின் போக்கை அறிந்துக்கொள்ள 1980-க்கு முன் / பின் என ஒரு பிரிகோட்டை வகுத்து வாசிக்கப்பட வேண்டும். அரசியல், பண்பாடு, வரலாறு, பொருளாதரம், அறம் என அத்தனை கூறுகளையும் ஊடறுத்து செல்லக் கூடிய அந்நியமாதல் இந்தச் சிறுகதைத்தொகுப்பில் தெளிவாக உணர முடிகிறது. 

1930-79 வரை வெறும் ஐம்பது நாவல்களே அறபியில் எழுதப்பட்டன என்றும், அதன் பிறகு 1980 – க்குப் பிறகான இந்த நாற்பது ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகாரித்து  500 (அறபு) நாவல்கள் வந்திருப்பதாக ஒரு கணக்கு உள்ளது. இங்குள்ள கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் சில பேராசிரியர்கள் அறபு இலக்கியத்தை படிப்பதும், அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பேராசிரியர் அ.ஜாகிர் ஹுசைன், கே.எம்.. ஜுபைர், JNU-வில் பணிபுரிந்து (ஓய்வுபெற்ற) பஷீர் ஜமாலி, தாய்லாந்து பல்கலைக் கழக (இலங்கையர்) இர்ஃபான் போன்றவர்கள் அறபுதமிழ் மொழியாக்கங்களில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் (இரண்டாவது மொழியான) ஆங்கிலத்தில் படித்துவிட்டு தமிழில் கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்த்தார் என்பது எவ்வளவு மகத்தானது. வெறுமனே போகிற போக்கில் நேரம் போகாமல் மொழிபெயர்க்கவில்லை, சிறுகதைகள் என்பது பக்க அளவைக் கொண்டு எண்ணப்படுபவை அல்ல. இவற்றில் சில ஒன்று மற்றொன்றுடன் ஒப்பிடும்போது ஒன்றுபோல் இல்லை.

பேராசிரியர், கல்வியாளர், சினிமா / காட்சியூடகவியலாளர், இதழியலாளர், களச் செயல்பாட்டாளர் என சமூக அசைவியக்கத்தின் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் எழுதிய சிறுகதைகள். வெவ்வேறு நிலப்பரப்பில் மக்கள் பேசும் மொழியில், எழுதும் வார்த்தைகளில் வித்தியாசமாக இருக்கும். அதுவே அதன் தனித்தன்மையும், இயல்பும் ஆகும். மயங்க வைக்கும் சொற்சேர்க்கை இந்த சிறுகதைகளில் மின்னல் வெட்டைப் போல் பளிச்சிட்டு மறைகின்ற அழகுக்காகவே இவற்றை படித்துப் பார்க்கலாம்.

பழமையும், புதுமையும் கொண்ட அறபு இலக்கியம் இன்றைய நவீன மொழியிலும் எழுதப்பட்டு வருகிறது. கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்த்த சிறுகதைகளின் தேர்வு எந்த அடிப்படையில் இருக்கிறது என்று ஆர்வமாக பின் தொடர்ந்து வந்தேன். எனக்குப் பிடித்த வேறு சில அறபுகள்  எழுதிய சிறுகதையை கார்த்திக் மொழிபெயர்த்து விடுவார் என கடைசி சில மாதங்களாக நினைத்துவந்தேன், துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை, அதேபோல் தவ்ஃபீக் அல்ஹக்கீம் (1898 – 1987) ஏன் விடுபட்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை. நோபல் பரிசு பெற்ற ஈரானியரான Shirin Ebadi (பிறப்பு 1947…) –யின் ஒரு நாவலை (ஆங்கிலத்தில்) படித்திருக்கிறேன், சிறுகதைகளும் எழுதி இருக்கின்றார் என்றே நினைக்கிறேன்.  ஈரானிய சிறுகதைகள் ஒன்றுகூட இல்லை, Youssef al-Sharouni போன்றவர்கள் என பெரிய பட்டியல் உள்ளது, அவர்கள் எழுதியவற்றை பிற்காலங்களில் யாரேனும் மொழிபெயர்க்கக் கூடும். 

அறபுகள் என்றாலே முஸ்லிம்கள் என்கிற மனப்பான்மை நிலமையில், அறபு கிறிஸ்தவர் (அதுவுமொரு பெண்) எழுதிய சிறுகதையும் இதில் உள்ளது. அறபு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க முக்கியமான எழுத்தாளர்களை இந்த தொகுப்பில் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு கதாசிரியர்களின் தெரிவில் கார்த்திகைப் பாண்டியனின் உழைப்பு இருக்கிறது.  அறபு கதாசிரியர்களின் எத்தனையோ சிற்கதைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்ததில் பெரிய ஆய்வு உள்ளது. இந்த சிறுகதைகள் நேரிடையானவை, எளியவை, புதியவை. பாலைநிலத்தின் சூட்டால் தகிப்பவை. மொழிபெயர்ப்ப்பு என்கிற அளவில் இதில் பிரதியின்பத்தை வாசகர்களால் உணர முடிகிறது,   

இந்தச் சிறுகதைகள் நிகழும் பாலைவனப் பெருவெளியில் கழித்த என் பதினான்கு ஆண்டுகளின் நினைவுகளை – flash back-ல் பார்ப்பதைப் போல் உள்ளது.  இச்சிறுகதைகளின் வழியாக அவற்றை மீட்டெடுக்க கார்த்திகைப் பாண்டியன் தனிப்பட்ட முறையில் எனக்கு உதவியுள்ளதால் என் நெஞ்சார்ந்த நன்றிகளை அவருக்கு உரித்தாக்குகிறேன்.

கொள்ளு நதீம்ஆம்பூர்

முந்தைய கட்டுரைசில பதிப்பகங்கள்
அடுத்த கட்டுரைஎண்பெருங்குன்றம்