தனித்தவர்களின் பெருவழி

அன்புள்ள அப்பா,

தினமும் உங்களுடன் நான் உரையாடி வருகிறேன்,உங்கள் கைப்பிடித்தே நடந்து வருகிறேன்.

வெண்முரசு தினமும் படித்து வருகிறேன், சிலசமயம் நளதமயந்தியை சிலசமயம் பீமனின் காதலை சிலசமயம் துரியோதனனின் அவன் தம்பியரின் கர்ணன் மீதான அன்பினை, சிலசமயம் தர்மனின் ஊசலாட்டத்தை, எப்போதும் அர்ஜுனனின் வீரத்தை மெய்தேடலை பயனத்தை, இளைய யாதவரின் புன்னகையை அவரின் அருகமைவை நோக்கை உணர்ந்துகொண்டே இருக்கிறேன்.

வெண்முரசை படித்து முடித்துவிட்டேன், திரும்ப திரும்ப படித்துகொண்டே இருக்கிறேன். அதிலிருந்து எவ்வளவு புரிந்துகொண்டேன் என்று தெரியவில்லை,புரிந்துகொள்வதற்கான முயற்சியில் இருக்கிறேன்.

இந்து மதம் சார்ந்து உங்களிடம் கேட்கபட்ட கேள்விகள் அதற்கான பதில்களை படிக்க நேர்ந்தது,அதிலிருந்து எனக்குள் எழும்பிய கேள்விகள் இவை

இந்துத்துவர்கள் இந்துக்கள் வித்தியாசத்தை,பாஜக வை எதிர்ப்பதற்காக இந்து மதத்தை எதிர்க்கும் அற்பத்தை பல தளங்களில் ஏற்கனவே பேசிவிட்டீர்கள்.ஆனாலும்,இந்து என்று உணரும் நான் என்னை இந்துத்துவவாதிகளிடம் இருந்து எப்படி வேறுபடுத்தி மற்றவர்களுக்கு காட்டுவது என்ற தெளிவை என்னால் அடையவே முடியவில்லை.

நான் ஒரு இந்து, ஒரு பெரிய தொடர்ச்சியின் அங்கம்.ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தபோது,அக்கோயிலின் தெய்வத்தைவிட என்னை பெரிதும் கவர்ந்தது கோயில்தான்,அங்கு நிற்கும்போது என்னை ஒருபெரிய சங்கிலியின் கன்னியாக என்னிலிருந்தும் நீளும் கன்னிகளையும் உணர்ந்து வியந்தபடியே இருந்தேன்.இந்து என்ற உணர்வும் அதனடிப்படைதான்,பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பேராலமரத்தில் வந்தனையும் ஒரு பறவையாக என்னை உணரும்போது எனக்கு ஏற்படும் புலாங்கிதம் வார்த்தைகளால் சொல்லபட முடியாதவை

ஆனால்,இங்கிருக்கும் அரசியல் சூழலில் நான் இந்து என்று சொல்லும்போது சங்கியாகிறேன். நீங்கள் உங்களை இந்துவாக முன்வைக்கும்போதெல்லாம்,நீங்கள் ஒரு பாஜக காரர் என்றே அடையாளபடுத்த படுகிறீர்கள், உங்களால் அந்த எதிர்ப்பை சமாளிக்க முடிகிறது அதற்கு பதில்கூறி அவர்கள் வாய் அடக்க முடிகிறது. நாங்கள் என்ன செய்வது? எவ்வாறு எங்கள் செயல்களில் நாங்கள் இந்து மட்டுமே, இந்துத்துவவாதிகள் அல்ல என்று நிலைநிறுத்துவது?பதில்களால் அல்ல செயல்களால் நான் எவ்வாறு ஒரு இந்து மட்டுமே என ஆகிறேன்?

எதிர்ப்புக்கு அஞ்சி ஒருபோதும் நான் இந்து அல்ல என்றோ, இந்து என்ற மதமே இல்லை என்றோ, அல்லது கடவுளே இல்லை என்றோ நான் ஒருபோதும் நினைத்ததோ பேசியதோ இல்லை. ஆனால் அதை சொல்லிவிட்டால் நான் நல்லவன் என்றும் சாதியத்திற்கு எதிரானவன் என்றும் சுலபமாக என்னை காட்டிகொள்ள முடிகிறது,என்னை போன்றோர் பலர் செய்வது அதுவே.

ஆனால்,ஒருபோதும் என்னால் நான் ஒரு இந்து ஆனால் இந்துத்துவவாதியல்ல என்று காட்டிகொள்ளவே முடியவில்லையே,அதை எங்ஙனம் செய்வது?அல்லது அப்படி காட்டிகொள்ள நினைப்பதே தேவையில்லையோ?அறிவுதளத்தில் யோசித்தால் அப்படிதான் நினைக்கதோன்றுகிறது.வாழ்க்கை சூழலில் அதை செயல்படுத்த முடியவில்லை.

எப்போதும்போல மனதுக்குள் இருக்கும் கேள்வி வார்த்தையில் பொருள்பெற்றதா என்ற சந்தேகத்துடன்,இந்த முறையாவது தயக்கமின்றி எழுதியதை உங்களுக்கு அனுப்பிவிடுவேன் என்ற நம்பிக்கையுடனும்..

இராஜேஷ்

அன்புள்ள இராஜேஷ்,

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் விதி கடைந்தெடுக்கும் சாராம்சம் ஒன்று உண்டோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு காலகட்டத்தில் மொத்த உலகமும் போர்களால் கலகங்களால் பஞ்சங்களால் அலைக்கழிந்து அதன் விளைவாக ஜனநாயகத்தை, மானுட சமத்துவத்தை, தனிமனித உரிமையைக் கண்டடைந்தது. அதைப்போல இந்தக்காலகட்டம் உலகம் முழுக்க பலவாறாக மோதி அலைக்கழிந்து அடிப்படைவாதம் நோக்கி, எதிர்மறை மனநிலைகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறதா?

ஏனெனில் உலக அரசியலே அதைத்தான் காட்டுகிறது. ஒருதேசத்தில் அல்ல, ஏறத்தாழ உலகம்  முழுக்கவே எதிர்நிலை  தேக்கநிலை சிந்தனைகளுக்கு செல்வாக்கு உருவாகிறது. இது சீரான, தெளிவான ஒரு போக்காக நமக்குத்தெரியாது. சீரானதும் தெளிவானதுமான போக்கு என்று இதை வரையறை செய்யவும், தர்க்கபூர்வமாக அடுக்கிக்காட்டவும் கூடியவர்கள் அரசியல் விமர்சகர்கள். என்னைப்போல் இலக்கியவாதிகளுக்கு அதில் பெரிதாக தெரிந்துகொள்வதற்கு எதுவுமில்லை. ஆகவே அக்கறையுமில்லை.

நான் பார்த்தவரை, இது மிகச்சிக்கலான ஒரு செயல்முறையாக இருக்கிறது. எறும்பு இறந்த புழுவைத்தூக்கி செல்வதை பார்த்திருப்பீர்கள். நூறு எறும்புகள் கூடி பெரிய புழு ஒன்றை குறிப்பிட்ட திசை நோக்கி இழுத்துக்கொண்டு செல்வதை கண்டு அவற்றின் ஒற்றுமையை எண்ணி நாம் வியந்திருப்போம். ஒரு ரேசர் ப்ளேடை  வைத்து அந்தப்புழுவைக் குறுக்காக வெட்டினால் அதன் இரு துண்டுகளும் இருபக்கமாக இழுபடுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஒவ்வொரு எறும்பும் தனக்குரிய திசையில்தான் அந்தப் புழுவை இழுக்கிறது என்ற உண்மை திகைப்பூட்டும். ஆனால் ஒட்டுமொத்த விசையாக ஒரு குறிப்பிட்ட திசைநோக்கி அந்தப்புழுக்கள் சென்று கொண்டிருக்கும். எறும்புகள் ஒவ்வொன்றும் பின்னோக்கித்தான் இழுக்கின்றன. அதன் விளைவாக அந்தப்புழு சற்று மேலெழுகிறது. அதன் உராய்வு இல்லாமலாகிறது. அதன் முகப்பைப் பிடித்து இழுக்க்கும் எறும்பின் விசை கூடுதலாக இருப்பதனால் அத்திசை நோக்கி அப்புழு நகர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது.

வரலாறும் அப்படித்தான் இயங்குகிறதோ? இங்கு ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் கருத்துக்கள் மேல் தங்கள் விசையைச் செலுத்துகிறார்கள். முற்போக்கு, அடிப்படைவாதம் இரண்டுமே அப்படித்தான். மொழி, இன, மத, வெறிகள் மற்றும் அரசியல் வெறிகள் அனைத்துமே. விளைவாக நாம் இன்று காணும் ஒரு திசை நோக்கி வரலாறு செல்கிறது. அது தேக்க நிலையின், எதிர்உளநிலையின் அரசியல்.

இங்கு இன்று ஒரு மதவெறி அதிகாரம் நிலைகொள்கிறது என்றால் அதை மதவெறியர்கள் மட்டும் உருவாக்கவில்லை. அவர்கள் நேரடியாக தங்கள் மதவெறியை, அடிப்படைவாத தர்க்கமுறையை முன்வைக்கிறார்கள். அவர்களை மிகத் தீவிரமாக எதிர்க்கும் தரப்புகள் -குறிப்பாக இடதுசாரிகள் மற்றும் மதவெறுப்பாளர்கள் மறைமுகமாகத் தங்கள் விசையை அதற்கு ஆதரவாக அளிக்கிறார்கள்.இரு சாராரும் இரு திசைகளில் இழுப்பதுபோலத் தோன்றும், ஆனால் அவர்கள் இருசாராரும் இணைந்து வரலாற்றை ஒரு திசைநோக்கி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று இன்றைய வலதுசாரி -மதவாத- தேக்கநிலை அரசியல்மேல் கடும் எதிர்ப்புடன் செயல்படும் ஒருவர் அந்த உக்கிர மனநிலையை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு, அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் நடுநிலையாளர்களை எதிர்த்து வசைபாடி, அனைவரையும் அதே மதவாத அரசியலை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறார். எனில் அவர் எவருக்காக பணியாற்றுகிறார்?. ஒட்டுமொத்த வரலாற்றில் அவருடைய விசை எதன்பொருட்டு செலுத்தப்படுகிறது?

இன்று இந்துத்துவ அரசியலின் மிகப்பெரிய ஆதரவு விசைகள் என்று நான் நினைப்பது இங்குள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகளும்; அவற்றை இந்துத்துவ அரசியலுக்கு மாற்றாக முன்னிறுத்தும் நிலைபாட்டை எடுக்கும் இடதுசாரிகளும்தான். ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் மேடைக்குச் சென்று இந்துக்கடவுள்களை வசை பாடிவிட்டு வரும் ஒரு முற்போக்காளர் அந்த உரை வழியாக சில ஆயிரம் பேரை இந்துத்துவ அரசியல் நோக்கித் தள்ளிவிடுகிறார். அல்லாஹு அக்பர் என்று பொதுவெளியில் கூச்சலிடுவதை முற்போக்கு என வாதிடும் ஓர் இடதுசாரி உண்மையில் அதன் மறுபக்கக் கூச்சல்களை நியாயப்படுத்திவிடுகிறார்.

ஆனால் அவர் வேண்டுமென்றே செய்யவில்லை. இக்காலகட்டத்தின் உணர்வு அவரில் அவ்வாறு செயல்படுகிறது. இக்காலகட்டத்தின் பொதுவான  விதி அதுவென்றால் அவர் அவ்வாறு செய்வதற்கான வரலாற்றின் ஆணை அவருக்குள் இருக்கிறது. அவருடன் விவாதிக்கவே முடியாது. காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்களுடனான எந்த விவாதமும் பயனற்றதே.

இந்த அரசியல் விவாதச் சூழல் நடுநிலை அரசியல், மிதவாத அரசியல், தாராளவாத அரசியல் ஆகியவற்றுக்கு முற்றிலும் இடமில்லாததாக ஆக்குகிறது. இருதுருவங்கள் இறுகியபடியே வருகின்றன. ஒருபக்கம் நீ இந்து என்றால் இந்துத்துவ அரசியலின் தரப்பாகவே இருந்தாகவேண்டும் என்று இந்துத்துவ அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். அவர்களை எதிர்க்கும் மறுதரப்போ அதையே திரும்ப சொல்கிறது, நீ இந்து என்றால் நீ இந்துத்துவ அரசியலின் ஆதரவாளராகத்தான் இருக்க முடியும் இருக்க வேண்டும் என்று.

அதாவது இவர்கள் இந்துக்களிடம் சொல்வது இதுதான்– பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறுள்ள ஒரு மதத்தை, ஒவ்வொரு கணமும் வாழ்க்கையில் எல்லாத் தருணத்தையும் தீர்மானிக்கக்கூடிய அதன் ஆசாரங்களை, தொன்மையான அதன் நம்பிக்கைகளை, அதில் அமர்ந்து வாழ்ந்த முன்னோர்களின் நினைவுகளை, பல்லாயிரம் ஞானியர் உருவாக்கிய மெய்மரபுகளையும் அதன் விளைவாக எழுந்த கலாச்சார அடையாளங்கள் அனைத்தையும், அதன் வெற்றிகளாக  அறியப்படும் இலக்கியங்களையும் கலையையும் முற்றாக நிராகரித்துவிட்டு மட்டுமே ஒருவன் இன்று முற்போக்காக இருக்கமுடியும். இன்று முற்போக்காளன் என்றால் அவன் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை எந்த விமர்சனமும் இன்றி ஏற்கவேண்டும், கிறிஸ்தவ அடிப்படைவாதத்தின் அனைத்து திட்டங்களுடன் ஒத்துழைக்கவேண்டும், இல்லையேல் அவன் இந்துத்துவனாகத்தான் இருக்கமுடியும்– இதுதான் சாமானிய இந்துக்களை நோக்கி முற்போக்காளர்களால் சொல்லப்படுகிறது.

இந்துமதம் அழியவேண்டும், இந்து மதத்தை அழிப்போம் என்று கூவும் ஒருவர் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகப்பேசினால் அது எளிய இந்து மதநம்பிக்கையாளர்களுக்கு எப்படி பொருள்படும்? இவர்களின் அதிகார அரசியலின் பொருட்டு, இவர்கள் கக்கும் காழ்ப்புகளின் பொருட்டு, இவர்கள் முன்வைக்கும் திரிபுபட்ட வரலாற்றுச் சித்திரத்தின் பொருட்டு எத்தனைபேர் தங்கள் மரபை முற்றாகக் கைவிடுவார்கள்? கைவிட மனமில்லாதவர்கள் எங்கு செல்வார்கள்? இதை நம் முற்போக்காளர் யோசிக்க மாட்டார்களா? மாட்டார்கள். இக்காலகட்டம் அவர்களை அப்படி யோசிக்க வைக்காது.

இன்றைய துருவப்படுத்தல்கள் நடுவே ஓர் இந்து செய்வற்கு என்ன உள்ளது என்ற கேள்வி வெவ்வேறு மொழிகளில் என்னிடம் கேட்கப்படுகிறது. அவர்களிடம் கூறுவதற்கு ஒன்றே என்னிடம் உள்ளது. இது துருவப்படுத்தலின் காலம். இன்று ஏதேனும் ஒரு துருவத்தைச் சார்ந்தே இருந்தாகமுடியும் என்பது இவர்களால் நம்மிடம் சொல்லப்படுகிறது. ஆனால் நாம் எந்த நிலைபாடை எடுக்க வேண்டும் என்பதை இவர்கள் சொல்லக்கூடாது ஒருவனுடைய ஆன்மிகம் அழகியல் இரண்டையுமே அரசியல்வாதிகள் முடிவு செய்வதைப்போல கீழ்மையும் வீழ்ச்சியும் வேறொன்றில்லை. அரசியல் மானுட வாழ்க்கையின் மிகச்சிறிய பங்குதான். மானுட ஆழம் மேலும் பல்லாயிரம் மடங்கு விசைகொண்ட உணர்வுகளாலும் , உள்ளுணர்வுகளாலும் ஆனது. அரசியலுக்காக அவற்றை இழந்தோமெனில் நாம் நம்மை அகத்தே அழித்துக்கொள்கிறோம்.

எந்த தெய்வத்தை நான் வணங்கவேண்டும், எந்த மெய்மரபை நான் தொடரவேண்டும், எவ்வண்ணம் இங்கே என் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய அனுபவமும் நான் கற்ற கல்வியும், என் முன்னோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலும்தான் முடிவு செய்யவேண்டுமே ஒழிய ; இன்றைய அரசியலை வழிநடத்தும் வெவ்வேறு அதிகாரக்குழுக்கள் முடிவு செய்யக்கூடாது. ஆகவே ’நீ இந்து ஆகவே நீ இப்பக்கம் வா’ என்று என்னிடம் சொல்லும் குரலை நான் நிராகரிப்பது போலவே  ‘இந்துவெனில் நீ அந்தப்பக்கம்தான் செல்வாய், அதை மறுத்துவிட்டெனில் மட்டும் இங்கே வா’ என்று சொல்லும் குரலையும் முழுமையாக நிராகரிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று இதன் நடுவே ஒரு கலாச்சார, சமூக இடத்தையும் நான் எனக்கென உருவாக்கிக்கொள்ள வேண்டும். நான் என் நம்பிக்கையால் இந்து. என் மரபால் இந்து. ஆகவே என்னுடைய அரசியலை அதன்பொருட்டு ஒருவர் விலைகொடுத்து வாங்கிவிட்டார் என்று எண்ணவேண்டியதில்லை. இந்து என்பது என் அரசியல் அடையாளம் அல்ல. நான் நம்புவது நீண்டகால இந்தியப் பாரம்பரியத்தை தானே ஒழிய, அதை அரசியலாக மறுசமையல் செய்த இன்றைய அமைப்புகளை அல்ல. அதை எதிர்க்கிறேன் என்று எண்ணி நான் என் மரபை கைவிட்டுவிட்டு எங்கும் செல்லவும் போவதுமில்லை. ஆகவே அரசியலில் எனது இடம் நடுநிலை.

திரும்பத் திரும்ப நம்மிடம் ஒன்று சொல்லப்படுகிறது – நடுநிலை என்பது போலித்தனம், நடுநிலை என்று ஒன்று இல்லை, நீ நடுநிலை என்றால் என் எதிரியின் தரப்பு. இது ஒரு முற்போக்குத்தரப்பாக இங்கே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தரப்பை உருவாக்கியவர்கள் ஃபாசிஸ்டுகள். இதைப் பேசிப்பேசி நிலை நிறுத்தியவர்கள் ஃபாசிஸ்டுகள். ஃபாசிஸத்தின் உச்ச முழக்கமே இதுதான். ஃபாசிஸத்தின் உச்ச முழக்கத்தை முற்போக்குத் தரப்பினர் கூவிக்கொண்டிருப்பது போல வேதனையூட்டும் வேடிக்கை வேறில்லை. அந்தக் கூச்சலை எந்தச் சொல்லும் மாறாமல் இங்கே வலதுசாரிகளும் இடதுசாரிகளும் போடுகிறார்கள் என்பதைக்காணுங்கள். இருவருக்கும் எதிரி என்பவன் நடுநிலையாளனே.

அவர்கள் நடுவே நின்றுகொண்டு  ‘இல்லை எனது மனசாட்சிப்படியும், எனது மெய்யியல் மரபின்படியும் நான் நடுநிலையாளன். எனக்கு ஒர் அரசு தேவை எனில் அதை என் மதத்தைக் கொண்டோ பாரம்பரியத்தைக்கொண்டோ முடிவு செய்யமாட்டேன். அந்த அரசு எனக்கு என்ன பொருளியல் உறுதிப்பாட்டை வழங்கும், என் குழந்தைகளுக்கு எத்தகைய சமூகத்தை உருவாக்கி அளிக்கும், இன்றுவரை மானுடம் உருவாக்கித்தந்த உயர் ஜனநாயக விழுமியங்களை அது எவ்வாறு மதிக்கும் என்ற மூன்று கேள்விகளின் அடிப்படையில் மட்டுமே நான் அவற்றை முடிவு செய்வேன்’ என்று நான் கூறவேண்டும்.

இதை எவ்வாறு கூறுவது என்ற தயக்கத்தை நாம் அடையவேண்டியதில்லை. நமக்குத் தெளிவிருந்தால் ஒவ்வொரு முறையும் உறுதியாக ஆணித்தரமாக நம்மால் அதைச் சொல்ல முடியும். அவ்வாறு சொல்லிப் பயனில்லை என்னுமிடத்தில் அமைதியாக இருப்பதும் நம்மால் இயலும். நம்முடைய ஆன்மபலம் தான் நம்மைத் தீர்மானிக்க வேண்டுமே ஒழிய, நம்மைச் சூழ்ந்திருக்கும் சில்லறை மனிதர்கள் அவர்களின் அரசியல் அதிகாரத்தேவைக்கேற்ப உருவாக்கும் கோஷங்களுடன் நாம் ஒருபோதும் இணைந்துகொள்ளக்கூடாது. அது நமது ஆன்மீகச் சாவு என்றே பொருள்படும்.

நாம் நம் அகவாழ்வை இன்றைய அரசியல்கூச்சல்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறோம். நம்மைவிட அறிவிலும் நுண்ணுணர்விலும் மிகக்கீழ்நிலையில் இருப்பவர்கள் நம்மை வகுத்துவிட அனுமதிக்கலாகாது. அவர்கள் பெருங்கூட்டமாக இருந்து பெருங்கூச்சல் எழுப்புகிறார்கள் என்பதனால் அவர்களின் ஆற்றல் பெரிது. ஆனால் தன்னந்தனித்துச் செல்லும் ஆற்றல்கொண்டவனுக்கே அறிவியக்கச் செயல்பாடும் அழகியலும் ஆன்மிகமும் கைவரும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇரா.மீனாட்சி, அடைதலும் இழத்தலும்
அடுத்த கட்டுரைPonniyin Selvan Game