புயலிலே ஒரு தோணி வாசிப்பு- அனங்கன்

ப.சிங்காரம் தமிழ்விக்கி

2015ல் நான் சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக எக்மோர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் தீவிர இலக்கியம் அப்போது தான் அறிமுகமாகி இருந்தது. கையில் புத்தகம் எடுத்து வரவில்லை. அதனால் புத்தகம் எதாவது வாங்கலாம் என்று  ரயில் நிலையத்திலிருந்த புத்தகக்கடைக்கு சென்றேன். வாரமலர்களும் பத்திரிக்கைகளும் தொங்கிகொண்டும் வரிசையாக அடுக்கப்பட்டும் வைக்கப்பட்டிருந்தன. அதில் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் வரும் கப்பலின் புகைப்படத்துடன் பாக்கேட் நாவல் ஒன்று இருந்தது. அது “புயலிலே ஒரு தோணி” நாவல். சாணித்தாளில் 50 ரூபாய் விலைப் போட்டிருந்தது. அந்த நாவலை கவனிக்க வைத்தது அதன் முகப்பட்டையில் நாவலின் தலைப்பை விட பெரிய மஞ்சள் எழுத்துக்களில் எழுதியிருந்த அறிவிப்பினால். ‘ இந்த நாவலை பொழுது போக்குவதற்காகவோ, அலட்சியமாகவோ வாசிப்பதாக இருந்தால் வாங்க வேண்டாம், தயவு செய்து வேறு புத்தகம் வாங்கிக்கொள்ளவும். இது தீவிர வாசிப்புக்காக எழுதப்பட்ட நவீன நாவல்’ என்று இருந்தது . நான் வேறொரு மாத நாவலை வாங்கிக்கொண்டு திருச்சி போய் சேர்ந்தேன்.

இப்போது பல மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடைப்பெறுகிறது. அங்கு சென்று வருபவர்கள் ஒன்று கவனித்திருக்கலாம். அனேகமாக அனைத்து முக்கிய பதிப்பகங்களும் ப.சிங்காரம் நாவல்களை பதிப்பித்திருக்கும். பெரியப் பதிப்பகம் முதல் சாணித்தாள் மாத நாவல் வரை அனைவரும் பதிப்பித்திருக்கும் இந்த நாவல்களை ப.சிங்காரம் எழுதி பதிப்பிக்க பத்து வருடம் போராடி இருக்கிறார். நாவல்கள் வெளியாகியும் இங்கே அவை எந்த தீவிர, இடது, வணிக எழுத்துலகங்களையும் சென்றடையவில்லை. நாவல்களை பிரசுரிக்க அவர் அலைந்த அலைச்சலில் தனக்கு பதிப்பிக்கும் எண்ணமே போய்விட்டது என்று முன்னுரையில் கூறுகிறார். முதல் நாவலான ‘கடலுக்கு அப்பால்’ நாவலை 1956ல் எழுதினார். பிரசுரிக்க நிறைய பதிப்பகங்களை நாடி இருக்கிறார், யாரும் பிரசுரிக்காததால் வெறுமே வைத்திருக்கிறார். பின் அவருடைய நண்பர் நா.பாலசுப்பிரமணியம் வற்புறுத்தி நாராயண சாமி ஐயர் நாவல் போட்டியில் தேர்வாகி பிரசுரமாகியது. புயலிலே ஒரு தோணி 1963ல் எழுதப்பட்டது, 1972ல் பிரசுரமானது.

பிரசுரமாக தாமதமானதோ நாவல் கவனிக்கப்படாமல் போனதோ எது அவர் மேற்கொண்டு எழுத தடையாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய நாவல்கள் தமிழ்ச் சூழலில் கொஞ்சமும் கவனத்தை பெறவில்லை அவர் இருந்த காலத்தில். அதற்காக புறம்தள்ளப்பட்டு விட்டது, கவனிக்காமல் கைவிடப்பட்டது போன்ற வெற்று குற்றச்சாட்டுகளையும் வைக்க தேவை இல்லை. இந்த நாவல் வெளியாகிய போது தமிழ்ச் சூழலில் இந்த நாவல்களை புரிந்து உள்வாங்கிகொள்ளும் சூழலோ பயிற்சியோ இல்லாமல் இருந்தது என்பது தான் உண்மை. அதற்கு சில காரணங்களை சொல்லலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து பெரும் லட்சியத்தோடு முன்னெடுக்கப்பெற்று பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் தேங்கி நின்றுகொண்டிருந்தது. பொருளாதாரம் அவ்வளவு நன்றாக இல்லாத சமயம். இந்திய சீன எல்லைப்போரில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது. இயல்பாகவே எதிர் மனநிலைக்குச் செல்ல கூடியவாறு தான் இங்கே சூழல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் தான் இங்கு தமிழ் தீவிர இலக்கிய சிறுகுழுவில் நவீனத்துவம் அறிமுகமாகியது. தமிழிலக்கியத்தின் நவீனத்துவ முகங்களான அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் 1960க்குள் எழுத வருகிறார்கள். இவர்களின் பின் இயல்பாகவே தமிழ் தீவிர இலக்கிய சிற்றிதழ்ச் சூழல் செல்கிறது. நவீனத்துவத்தின் குணநலங்களை நம் முன்னோடிகள் நிறைய எழுதியிருக்கிறார்கள். தனிமனித வாழ்க்கையை மையமாகக்கொண்ட நவீனத்துவ  இலக்கிய சூழலில், கிழக்காசியாவை சுற்றிக்காண்பிக்கும்  ப.சிங்காரம் நாவல்கள், நாவல்களாக எடுத்துக்கொள்ளப்படாமல் போனது இயல்பானதே. அதே சமயம் சிற்றிதழ் சூழலில் அதிகம்  வணிக எழுத்தில் இடம்பெறும் சாகசம், வீரம், காதல் போன்ற ‘சிறிய’ விஷயங்களில் மேல் கடும் எதிர்ப்பு மனநிலையில் இருந்ததால் பா.சிங்காரம் நாவல்கள் வெற்று உணர்ச்சிகளைப் பேசுபவையாக தெரிந்தது.

அப்போது இன்னொரு தரப்பாக இருந்த மார்க்சிய எழுத்துக்குள்ளும் ப.சிங்காரம் நாவல்கள் அடங்காது. இவ்வளவு போர் நடந்தும் புரட்சியைப் பற்றி பேசாததாக இருக்கிறது நாவல். பெட்டியடிப் பையன்களின் நாவலில் அங்கே முதலாளித்துவத்தை எதிர்த்து  பேசப்படாமல் போனாலும் சரி, அவர்களை புகழ்ந்து வேறு வருகிறது. அதனால் அவர்களும் பெரிதாக ப.சிங்காரத்தை கவனிக்கவில்லை என்பது மிகச்சாதாரண விஷயம்.

இன்னொரு சிக்கலும் அப்போது இந்த நாவலை வாசித்தவர்கள் சந்தித்திருக்கலாம். இந்த நாவல் போரை  மையாகக் கொண்டு எழுதப்படவில்லை என்றாலும் இது இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடக்கிறது. நாவலில் இப்போது வரலாறாக  மாறிவிட்ட பெயர்கள் வந்து செல்கிறது. ப.சிங்காரமே இரண்டு மூன்று அத்தியாயங்களில் இரண்டாம் உலகப்போரில் நடந்து கொண்டிருந்தவற்றை விரிவாக சொல்லுகிறார். அந்த ‘வரலாற்று உணர்வு’ இந்த நாவல்களை அப்போது வாசித்தவர்களுக்கு கொஞ்சம் தடையாக இருந்திருக்கலாம்.  இரண்டாம் உலகயுத்த காலக்கட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்தது. புத்தகங்கள், ஆவணத் திரைப்படங்கள், உலக சினிமாக்கள் வழியாக இப்போது நம்மால் அந்த காலக்கட்டத்தை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் நாவலில் மெளண்ட் பேட்டன் பினாங் துறைமுகத்தை கைப்பற்ற வருவது  ஆகிய காட்சிகளை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் கூட இருந்திருக்கலாம்.

1990க்குப் பின் தமிழ் இலக்கியச் சூழலில் எழுத வந்த அடுத்த தலைமுறை எழுத்தாளர்களால்  பின்நவீனத்துவம் பேசப்பட்டது. தனிமனித வாழ்க்கையை பேசுபவை மட்டும் இலக்கியம் அல்ல, வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் பேசுபவையே நல்ல இலக்கியமாக முடியும் என்று அனைத்து தரப்புக்குள்ளேயும் விவாதங்கள் நடக்க ஆரம்பித்தன. டால்ஸ்டாய் மீண்டும் பேசப்பட்டார். தமிழில் நாவல்களே எழுதப்படவில்லை என்று தமிழ் இலக்கியத்தில் பெரும் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார் ஜெயமோகன். அதன் தொடர்ச்சியாக நாவல் கோட்பாடு, நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் என்று இலக்கிய  திறனாய்வு நூல்கள் ஜெயமோகனால் எழுதப்பட்டன. பிற இந்திய மொழி பெரு நாவல்கள் முன்வைக்கப்பட்டு வாசிக்கப்பட்டன.

1987ல் சி.மோகன் புதுயுகம் பிறக்கிறது இதழில் எழுதிய நாவல்கள் பற்றிய கட்டுரையில் தமிழின் தலைசிறந்த நாவல்களில் மிகச்சிறந்த மூன்றில் ஒன்றாக புயலிலே ஒரு தோணியை குறிப்பிட்டார். (ஜே.ஜே.சில குறிப்புகள், மோகமுள் பிற இரண்டு) அது சிற்றிதழ்ச்சூழலில் பெரிய விவாதத்தை உருவாக்கியது. 1998 ல் ப.சிங்காரம் நாவல்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழினியால் வெளியிடப்பட்டபோது ஜெயமோகன் ப.சிங்காரத்தை வாசிப்பது எப்படி என நீண்ட ஆய்வுமுன்னுரை ஒன்றை எழுதினார். ப.சிங்காரம் பற்றி எழுதப்பட்ட முதல் விரிவான இலக்கிய விமர்ச்ன கட்டுரை அது.

2001ல் ஜெயமோகன் எழுதிய ‘தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு’ என்று நாவல் சிபாரிசு பட்டியல் வெளியிட்டார். அதில்  முதலில் 1997ல் வெளியாகிய விஷ்ணுபுரம், 1999 வெளியாகிய பின்தொடரும் நிழலின் குரல் ஆகிய நாவல்களுக்கு அடுத்து “புயலிலே ஒரு தோணி” மூன்றாம் இடத்தில் இருந்தது.  அப்போது இயல்பாகவே 1995க்கு முன் எழுதிய நாவல்களிலேயே அது தர அடிப்படையில் முதல் இடத்தில் வந்துவிடுகிறது. பின்னால் எழுத வந்த எழுத்தாளர்கள் ப.சிங்காரம் நாவல்களை பற்றி எழுதிப் பேசினார்கள். ப.சிங்காரம் நாவல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட பின் அனைத்து பதிப்பகங்களும் பதிப்பிக்க ஆரம்பித்தன. மேலும் இந்த நாவல்கள் மேல் வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

*****

ப.சிங்காரம் அளவிற்கு உலகை பார்த்து அறிந்து அனுபவம் அடைந்த எழுத்தாளர்கள் சிலர் தான் இருப்பார்கள். அ.முத்துலிங்கம் நினைவிற்கு வருகிறார். உலகப் போர் கிழக்காசியாவில் நடந்து கொண்டிருந்த போது ப.சிங்காரம் அங்கே ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். சரக்குக் கப்பல்களில் ஜப்பான் அரசின் அனுமதிப் பெற்று வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பெண்ணை மணந்துகொண்டார். மனைவி பிரசவத்தில் குழந்தையுடன் இறந்து விடுகிறார். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் மலேசியா, இந்தோனேசியாவில்  அனைத்து போகங்களும் திரண்டோடும் வாழ்க்கையை வாழ்ந்தவர் ப.சிங்காரம். உலக யுத்தம் முடிந்தவுடன் இந்தியாவிற்கு திரும்பி வந்து தனிமையில் வாழ்ந்து மரணம் அடைந்தார். அனைத்து போகங்களையும் பார்த்து அனுபவித்த ப.சிங்காரம் கடைசி வரைக்கும் தனிமையிலிருந்து மரணம் அடைந்ததைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

அவர் வாழ்க்கையை சொல்லும் போதே ஒருவித சாகசம் வந்துவிடும். அவருடைய கதை நாயகர்கள் பாண்டியன் , செல்லையா, மாணிக்கம் ஆகியவர்களும் அவரைப் போலவே சாகசத்தை விரும்பி செய்பவர்கள், பெண்ணை மயக்குபவர்கள், வீரர்கள், தனியர்கள். சாகசம் செய்வதற்காகவே சாகசம் செய்பவர்கள் அவர்களுடைய மனதில் பொய் புரட்சியும் லட்சியமும் இருக்கவில்லை. கோட்பாடுகளுக்காக போராடுகின்றேன் என்று மக்களைக் கொன்று குவிக்கவில்லை. சின் பெங் ஒரு உதாரணம். அவர்கள் அராஜகவாதிகளும்  அல்ல, அவர்கள் எதற்கும் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் மாறாக இந்திய தேசத்தை விரும்புகிறார்கள். தேசப் பற்று உடையவர்களாக இருக்கிறார்கள். நேதாஜியின் மேல் பெருமதிப்பு கொண்டிருக்கிறார். தமிழ் பற்று இருந்தாலும் அதன் மேல் பொய் தற்பெருமைகளை ஏற்றி வருவதில் கடும் வெறுப்படைகிறார்கள். தமிழை விமர்சனமும் பகடியும் செய்து விளையாடுகிறார்கள்.

அதே சமயம் ப.சிங்காரத்தின் நாவல்களை வெறும் சாகச  பொழுதுபோக்கு நாவலாக மட்டும் வாசித்தால்  ஜேம்ஸ் பாண்ட் படத்தை அங்கங்கே கிழித்து ஒட்டி வைத்திருப்பது போலவே இருக்கும். கதையும் புரியாமல் வந்து போகும் பெண்கள் முழுவதுமாகக் காட்டப்படாமலும், சாகசங்களில் ஆரம்பித்து அப்படியே நடுவில் விட்டு வேறெங்கோ சென்றுவிடுவதும் நடக்கும். அதை வாசித்து குழம்பிப்போய் எரிச்சல் நிலைக்கு  தான் ஆளாவார்கள்.

நான் ப.சிங்காரம் நாவல்களை காவியங்களுடன் பொருத்திப் பார்த்து வாசிக்கிறேன். காவியங்களின் லட்சணங்களில் ஒன்று மிகையாக்கி பெரிது படுத்திக் கூறுவது. அதேசமயம் ‘மிகை’ என்பது காவியத்தை, அதற்கு வெளியிலிருந்து அதை பார்த்து சொல்வதே தவிர காவியங்களுக்குள் அது ஒருபோதும் மிகையாக இருக்காது. ஒரு குணத்தை மிகையாக கூறி அதை நிலைநாட்டுவது காவியத்தின் அம்சம்.  அப்படித்தான் காவியங்கள் தங்களுக்கான விழுமியங்களை உண்டாக்கி எழுப்பி சமூகத்திற்கு அளிக்கிறது. அந்த  குணம் அல்லது விழுமியம் சமூகத்திற்கு சென்று கூட்டு நினைவிலியில் தங்கி காலந்தோறும் தொடர்ந்து வருகிறது. நம்முடைய லட்சிய விழுமியங்களாக வைத்திருக்கும் கற்பு, வீரம், தியாகம், கருணை என்று அனைத்துமே காவியங்களுக்கு சென்று பெரிய விழுமியங்களாகி மீண்டும் நமக்கே திரும்பி வந்திருப்பவையே.

காவியங்கள் வாய்மொழியில் சொல்லப்படுவதால்  மிகைத்தன்மையோடு வெளிப்படலாம். கம்பராமாயணத்தில் சீதையின் சுயம்வரத்தில் வைப்பதற்காக சிவதனுசை 60 ஆயிரம் யானை பலம் கொண்ட வீரர்கள் எடுத்து வருகிறார்கள், ஆனால் ராமன் கோதை  என எடுத்து இற்றது கேட்க உடைத்தெரிகிறான் இதை காவியத்திற்கு வெளியில் வாசித்தால் முட்டாள்தனமாகவோ சிரிப்புப்போ கூட வரலாம் ஆனால் இது காவியத்தில் ராமனின் வீரத்திற்கு இமைப்பதற்குள் செய்து முடிக்ககூடிய சிறு செயல்.

உதாரணமாக ஒருவர் சிறுசாகசத்துடன் கலப்புத்திருமனம் செய்கிறார்  என்று வைத்துக்கொள்ளுவோம். அது காவியத்திற்கு சென்றால் பெரிதுபடுத்திக் காட்டப்படும். . இப்படி ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியையும் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஒன்று சேர்த்து திரட்டி ஒன்றாகச் சேர்ந்து காவியமாக ஆகிறது. அவை காவியங்களில் நிகழ்ந்து சாரமாகி நமக்கு வருகிறது. உலகில் உள்ள நல்ல குணங்களும் வீரமும், அறமும் சேர்ந்தால் ராமனாகிறது. தியாகம், அன்பு, கருணையின் உரு சீதை.

***

இந்த விழுமியங்களை வைத்துகொண்டு நாம் ப.சிங்காரம் நாவல்களைப் புரிந்துகொள்ளலாம். வீரத்திற்கும் சாகசத்திற்கு ‘புயலிலே ஒரு தோணி’, காதலுக்கும், தியாகத்துக்கும் ‘கடலுக்கு அப்பால்’ நாவலையும் போட்டுப்பார்க்கலாம். இந்த இரண்டு நாவல்களுமே ஒரே காலகட்டத்தில் நடப்பவை. புயலிலே ஒரு தோணி இரண்டாம் உலகயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம், கடலுக்கு அப்பால் நடந்து முடிந்த காலத்தில் நடக்கிறது.

ப.சிங்காரம் இந்த நாவல்கள் போர் காலக்கட்டத்தில் நடக்கிறபடியால் போரைச் சுற்றி கதையைக் காட்டுகிறார். ஆனால் போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று போரைக்காட்டி அல்ல, மாறாக அதன் விளைவுகளின் மூலம் சின்ன தருணங்களின் மூலம் காட்டுகிறார். உதாரணமாக வயிரமுத்துப்பிள்ளை தண்ணீர்மலையான் கோயிலுக்குச் சென்று வந்து கதவைத் தட்டுகிறார். கதவை மரகதம் திறக்கிறாள் அதற்கு அவர் காலம்கெட்ட சமயத்தில் நீ ஏன் வந்து திறக்கிறாய் என்று கோபித்து சத்தம் போடுகிறார். ஏனென்றால் போர் காரணமாக பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிட்டது, வேறெங்கோ வீட்டுக்கதவைத் திறந்த பெங்காளிப் பெண் பாதிக்கப் பட்டிருக்கிறாள். இப்படித்தான் அவர் போரைச் சொல்லுகிறார். உண்மையில் ப.சிங்காரத்திற்கு எதையும் சொல்லும் எண்ணம் துளிக்கூட இல்லை. கிழக்காசியாவில் வசிக்கும் செட்டித்தெரு மனிதர்கள், அவர்கள் வாழ்க்கை மதுரைக் கார் ஏஜண்டுக்கள் என்று அவர் எதையும் முழுவதாகச் சொல்லுவதில்லை. மாறாக கிழக்காசியாவையும் அங்கே வாழும் தமிழ், சீன, மலேய, ஜப்பான் மக்களை அப்படியே காட்டிக்கொண்டு செல்கிறார். வாசகர்களால் எதை பார்க்க முடிகிறதோ பார்த்துக்கொள்ளலாம்.

அவருடைய நாயகன் பாண்டியன் கடலில் செல்லும் தொங்கான் போல அலைந்து திரியும் பண்புகொண்டவன். பாண்டியன் தான் புயலிலே ஒரு தோணி நாவலை வாசித்து புரிந்துக்கொள்ள ஒரே சாத்தியம். அவன் வாழ்க்கையோடு நாவல் ஆரம்பித்து, விரிந்து பரவி, கரைச்சேர்கிறது.

பாண்டியன் ப.சிங்காரத்தின் காவியம் தோய்ந்த மனம்கொண்டு படைக்கப் பெற்ற நாயகன். நாவல் முழுக்க அனைவரும் அலைந்து திரிந்து நிலைத்து வாழ வழி தேடிக் கொண்டிருக்கும் போது பாண்டியன் அதன் மறு திசையில் சாவை நோக்கி, வீர மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். அதுவும் அவன் லட்சியமாக எல்லாம் இல்லை, வாழ்க்கை போகிறபோக்கில் அவன் எதிர் கொள்ள வேண்டியதை எதிர் கொண்டு சென்று கொண்டே இருக்கிறான். ஜப்பான் படை மெடான் நகரத்தில் நுழையும் போது அவனுடைய பயணம் ஆரம்பிக்கிறது.

ஜப்பான் படை மெடானை கைப்பற்றுவது பிரமாண்ட சித்தரிப்புடன் காட்டப்படுகிறது. பெண்கள் நடுத்தெருவில் கற்பழிக்கப்படுவதை பார்க்கிறான். மெடானில் தலைமை இல்லாமல் நகரத்தில் நடக்கும் கலவரத்தை கசப்புடன் பார்த்துக்கொண்டு செல்கிறான். அவனுக்கு ஏற்படும் கசப்பு ஒட்டுமொத்த மானிடத்தின் மேலேயே தவிர ஜப்பானியர்கள் மேலோ அல்லது தனிப்பட்ட மனிதர்கள் இடமோ இல்லை அது மனிதர்களின் ஆதி மிருகத்தை பார்த்து. மனிதன் எத்தனை பெரிய நாகரீகத்தை சென்று அடைந்தாலும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் மிருகம்தானா என்ற கசப்பு. அந்தக் கசப்புடன் தான் அவன் நாவல் முழுக்க சென்று கொண்டிருக்கிறான் அந்த கசப்புடன் தான் தன்னை சுய விமர்சனம் செய்கிறான் தமிழ் பண்பாட்டை விமர்சிக்கிறான். தன்னை கசந்து “நான் மந்தையிலிருந்து விலகிக் பிரிந்த ஓடுகாலி, பிரிந்ததால் வெறுப்புக்கும் பிரிய நேர்ந்தால் தன் வெறுப்புக்கும் உண்டானவன்” என்று சொல்கிறான். இந்த கசப்பு வெளியிடும் போது பட்டினத்தாரையும் தாயுமானவரையுமே நினைத்துக்கொள்கிறான்.

புயலிலே ஒரு தோணி நாவல் முழுக்க கசப்பும், சுயஎள்ளலும் நிரம்பி இருக்கிறது. இந்த கசப்பும், சுயஎள்ளலுக்கும் தமிழ் சித்தர் மரபில் தான் வேர் இருப்பதாக ஜெயமோகன் கூறுகிறார். (காண்க : ப.சிங்காரம்- வரலாற்று அபத்தத்தின் தரிசனம்)

இப்படி கசப்பு மனநிலையுடன் பாண்டியன் இருந்தாலும் அவன் மனம் சாகசத் தன்மை கொண்டது தான். அவனால் பெண்களை தவிர்க்க முடியாது. அவனுடைய வாழ்வில் அத்தனை கண்ட பின்பும் இந்திய தேசிய ராணுவத்தின் மேலும் நேதாஜி மேலும் அவனால் உண்மையான அன்புடன்  இருக்க முடிகிறது. அதனால் தான் துரோகியான சுந்தரத்தை தேடி சென்று கொல்கிறான்.

ப.சிங்காரம் பாண்டியன் வழியாக காட்டுவது வாழ்க்கையின் அபத்தத்தை அதன் ஊகிக்க முடியாத தன்மையை. வயிரமுத்துப்பிள்ளை இந்த ஜப்பான்கார குள்ளன்கள் எங்கே வெள்ளைக்காரனை எதிர்க்கப்போகிறார்கள் என்று நினைக்கிறார். ஜப்பான் கிழக்காசியாவை கைப்பற்றுகிறது. அவர்கள் தங்களுடைய கப்பல் படையைக்கொண்டு அமேரிக்க ராணுவத்தை அழித்து போரை வெல்ல நினைக்கிறார்கள். அவர்களுடைய சங்கேத மொழியை ஒற்றறிருந்த அமெரிக்க ராணுவம் ஜப்பான் கடற்படையை அழிக்கிறது. இந்தியர்கள், இந்தியாவை படைகொண்டு தாக்கி வென்று சுதந்திரம் அடைய நினைக்கிறார்கள். நேதாஜி இறந்தவுடன் காற்று போல கனவு பறந்துவிடுகிறது.  ஐ.என்.ஏ தலைமையில்லாமல் உடைந்து ஒன்றும் இல்லாமல் ஆகிறது.

இப்படி காலம் தன் போக்கில் சென்றுகொண்டிருப்பதை பாண்டியனுடைய சாகசத்தோடு  இணைத்துக் காட்டுகிறார். பாண்டியனுக்கு எதற்கு இதைச்செய்கிறோம் என்று தெரியாது அவன் போக்கில் குறுக்கிடும் வேலைகளை செய்து கொண்டே செல்கிறான்.  ஜப்பான் படை மெடானுக்குள் நுழைந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தவுடன் அங்கே இருக்க பிடிக்காமல்,  அந்த வாழ்க்கை பிடிக்காமல் பினாங்கு சென்று எந்த  வகையிலாவது தமிழ் மக்களோடு சேர்ந்து தமிழ் இந்திய விடுதலைக்காக  போராடுகிறேன் என்று பினாங்கு செல்பவன் அங்கே மாணிக்கம் செல்லையாவுடன் கேளிக்கையில் திளைக்கிறான். அந்த நிலைமை தானாகவே மாறி இந்திய ராணுவம் ஆரம்பிக்கவே அங்கு சென்று சேர்ந்துகொள்கிறான். இப்படியே தன் போக்கில் சென்றுகொண்டிருக்கிறான்.

ப.சிங்காரம் தன் அபாரமான மொழித் திறமையால் எந்தவித திணிப்பும் இன்றி இயல்பாக பாண்டியன் வழியாக காலத்தை, வாழ்க்கையின் பெரும் விரிவை காட்டிசெல்கிறார். ஒரு வேளை பாண்டியன் இந்த கொந்தளிப்பான அவனுடைய நான்கு வருடத்தையும் கடந்து இந்தியா வந்திருந்தால் ப.சிங்காரம் போலவே தனிமையில் தன் முழுவாழ்க்கையும் வாழ்ந்திருக்கலாம் அதற்குண்டான சாத்தியங்களையும் காலம் தன்னுள் வைத்துள்ளது.

ப.சிங்காரத்தின் இன்னொரு நாயகனான செல்லையா பாண்டியனின் நீட்சிதான். பாண்டியன் வாழ்ந்த அதே புழுக்கமான கொண்டுவிற்கும் வாழ்க்கையை வாழும் செல்லையா வாழ்க்கையின் சாகசத்தின் வாயிலான ஐ.என்.ஏ.வில் சென்று சேர்ந்து பினாங் திரும்புகிறான். போர்ப்பயிற்சி,  ஜப்பான் ராணுவத்துடன் போர் என்று உச்ச தருணங்கள் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, பெட்டியடிப் பையனாக வட்டி செலவு கணக்கு எழுத முடியாமல் தவிக்கிறான். அவனுக்கு மிச்சம் இருக்கும் ஒரே சாகசம் மரகதம். அவளும்  அவன் வாழ்க்கையில் இல்லாமல் போன பின் மெல்ல வெள்ளம் வடிந்து ஆறு சமமாவது போல அமைதி அடைகிறான்.

கொந்தளிப்பும் வீரமும் சாகசமும் நிறைந்த வாழ்க்கையை மட்டும் ப.சிங்காரம் காட்டுவதில்லை. வயிரமுத்துப்பிள்ளையையும், ஆவ்வன்னாவையும் முக்கியப்படுத்துகிறார். அவருடைய நாயகர்களான பாண்டியன், செல்லையா, மாணிக்கம் போன்றவர்களுக்கு நேர்  எதிரான வாழ்க்கையை வாழ்ந்து அதையே கடைசி வரை நம்பிக்கையுடன் வாழும் மனிதர்களையும் அவர் படைத்திருக்கிறார்.

காமாட்சி அம்மாளும் மரகதமும் கூட வாழ்க்கையை நம்பிக்கையுடனேயே எதிர்கொள்கிறார்கள். இருவருமே அவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் நம்பிக்கைத் வைத்துள்ளனர். காமாட்சி அம்மாள் வடிவேலுடன் ஐந்து பிள்ளைகள் இழந்தவள் ஆனாலும் வாழ்க்கையில் பிடிப்புடனே இருக்கிறார்கள். மரகதமும் அவள் அம்மாவைப் போன்றவளே. செல்லையாவை காதலித்து அவனை மணம் செய்துகொள்ள முடியாமல் போனாலும் அதை கடந்து தன்னுடைய வாழ்க்கையில் நிச்சயம் மணம் புரிந்து கொண்டு தன் வாழ்க்கையை அதில் பொருத்திக்கொள்வாள். இது அவளுடைய மூத்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து அங்கிருந்து அவள் பெற்றுக்கொண்டது.

வயிரமுத்துப்பிள்ளையும் தன் மூத்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் தடம் புரளாமல் வாழக் கற்றவர். செல்லையாவை விட வாழ்க்கையில் அதிகம் நெருக்கடிகளை சந்தித்திருப்பார். அந்த வாழ்க்கையில் முட்டி மோதி மேலெழுந்து வந்தவர். அதனாலேயே தன் வாழ்க்கையின்  அனுபவத்தைகொண்டே மரகதத்தை செல்லையாவிற்கு மணம் முடித்துவைப்பது நலம் தராது என்று நினைக்கிறார்.  அவருடைய வாழ்க்கை என்பது தன் மனைவி, மகள் மட்டும் அல்ல. அவர் உழைப்பில் மேலெழுந்த அவருடைய தொழிலும் தொழில் சார்ந்த மக்களும் சேர்ந்து தான். அவர் கடைசி வரை செல்லையாவிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கவே நினைக்கிறார். மற்றவர்களைவிட செல்லையாவை நன்கு அறிந்துகொண்டும் இருக்கிறார். அவனுடைய ‘டுப்பு டுப்பு’ மனம் இனிமேல் பெட்டியில் உட்கார்ந்துகொண்டு வட்டிகணக்கு எழுதிக்கொண்டு இருக்காது என்று செல்லையா ஊர் திரும்புவதற்கு முன்னேயே கணித்து வைத்திருக்கிறார். அதையும் அவனிடம் சொல்லி புரியவைக்க முயற்சி செய்கிறார்.

வயிரமுத்துப்பிள்ளையைப் போலவே ஆவன்னாவும் வாழ்க்கையில் மாறாத படிநிலைகளில் நின்று ஏறிவந்தவர். அவருடைய மனம் தன்னுடைய முதலாளிக்கு விசுவாசமும், குடும்பத்தில் பற்றும் கொண்டிருக்கிறது. அவரும் பாண்டியன் ஏறிச்சென்ற அதே தொங்கானில் தான் பினாங்கு செல்கிறார். வாழ்க்கையின் முழுமையை காட்டவே ஆவன்னா பாண்டியன் ஆகிய இருவருடைய முன் வாழ்க்கையை சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். மனைவி குடும்பத்தின் மேல் பற்று இல்லாமல் ஆகிவிட்ட மாணிக்கம் போன்றவர்கள் இருக்கும் அதே செட்டித் தெருவில் தான் வயிரமுத்துப்பிள்ளையும் ஆவன்னாவும் வாழ்கிறார்கள்.

ப.சிங்காரத்தின் இரு நாவல்களை ஒன்றாகக்கொண்டால், புயலிலே ஒரு தோணி கொந்தளிப்பான காலகட்டத்தில் பல ஊர்களில் பாண்டியனின் சாகசங்கள் வழியாக செல்லும். கடலுக்கு அப்பால் அதற்கு நேர்மாறாக தோணி கரையில் வந்து சேரும் இடத்திலிருந்து ஆரம்பிக்கும். பெருமழைக்காலம் முடிந்து ஆறு சலனமில்லாமல் செல்லுவது போல கூர்மையாக தாவல்கள் அற்ற நேர்கோட்டில் சொல்லப்பட்ட நாவல். பாண்டியனின் சாகசமும் வீரமும் செல்லையாவில் வடிந்து அமைதியாகிறது. பாண்டியனின் வீரத்தை சாகசத்தை காட்டிய சிங்காரம் செல்லையாவின் கையறு நிலையையையும் தத்தளிப்பையும் சொல்கிறார். நிலையற்ற வாழ்க்கையை மாணிக்கம் வழியாக காட்டியவர் வயிரமுத்துவின் பிடிவாதமான வாழ்க்கையையும் காட்டுகிறார். இந்த நாவல்கள் ஒன்றை ஒன்று நிரப்பி முழுவாழ்க்கையின் தரிசனத்தை காட்டுபவை. வீரம், சாகசம், கொந்தளிப்பு, அமைதி நிலையற்றவாழ்வு நிலையான வாழ்வு என வாழ்க்கையின் இரண்டு பக்கங்களையும் சமமாகக் காட்டுவதால் தான் ப.சிங்காரம் பெரும் எழுத்தாளர்கள் வரிசையில் நிற்கிறார். அவருடைய படைப்பு மேலும் வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இப்போது தமிழ் இலக்கிய சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. நவீனத்துவத்தை மீறிய வரலாற்று தரினசங்கள் கொண்ட பெரும் நாவல்கள் நிறைய வந்திருக்கிறது.  உரைநடையில் காவியம்(வெண்முரசு) எழுதப்பட்டிருக்கிறது. வணிக எழுத்து, என்று வெகுமக்கள் எழுத்து என்றும் சொல்லப்பட்ட பொழுதுபோக்கு எழுத்து இப்போது இல்லவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகவும் குறைந்துவிட்டிருக்கிறது. இந்த சூழலில் ப.சிங்காரம் நாவல்கள் தீவிர இலக்கியத்திலும், பொழுதுபோக்கு இலக்கியத்திலும் வீரம், சாகசம், காதல் ஆகிய விழுமியங்களை மிகைத்தன்மையில்லாமல்  வாழ்க்கையின் சமன்பாடுகளை கூரிய சுயவிமர்சனத்துடனும் பகடியுடனும் அணுகிய முன்னோடி ஆக்கம்.

அனங்கன்

(27-3-2022  நற்றுணை இலக்கிய கலந்துரையாடலில் ப.சிங்காரம் நாவல்கள் குறித்து பேசியது)

முந்தைய கட்டுரைபனி உருகுவதில்லை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகங்கைப்போர் -கடிதங்கள்