இமையத்தின் செல்லாத பணம் – டெய்ஸி பிரிஸ்பேன்

செல்லாத பணம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

எழுத்தாளர் இமையம் அவர்களின் “செல்லாத பணம்” படித்தேன். வேலைகளை முடித்து இரவில் தான் படிக்க நேரம் கிடைக்கும். அப்படி இரண்டு இரவுகளிலாக படித்து முடித்தேன். இரண்டு நாளும் நானும் மருத்துவமனை வளாகத்திலேயே இருந்தேன். எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டுத்தான் நாவலையே படித்தேன். கதை முழுவதுமாக தெரிந்து இருந்தாலும்கூட ஒரு பதைபதைப்புடன்தான் படிக்க முடிந்தது. அம்மாம்பெரிய, ரவகூட போன்ற ஓரிரண்டு வார்த்தைகள்தான் பழைய கதைகளில் உள்ள இமையம் ஸ்பெஷல் வார்த்தைகள். மற்றபடி அப்படியே வேறுமொழி. இத்துடன் மயிலன் g சின்னப்பன் அவர்களின் “ஆகுதி” கதையும் நினைவில் வந்தது.

என்னுடைய மாமியார் வீட்டில் நாங்கள் நான்கு மருமகள்கள். காலை பதினோரு மணியளவில் நாலு கேரியர் சாப்பாடு கட்டி படிக்கட்டில் வைத்து விடுவோம். சாப்பாடு எடுக்க ஆரோக்கியம்மா என்றொரு அம்மா வருவார்கள். ஒரே மகன். கணவனை இளம் வயதிலேயே இழந்து சாப்பாடு கூடை தூக்கி பிள்ளையை வளர்த்தவங்க. பங்கரைக் கிழவி மாரி தலை ஒரு வேஷமும் புடவை ஒரு வேஷமும், எந்த நேரமும் வெத்தலை பாக்குப் போட்டுக்கொண்டு வரும். மகனும் நல்ல பையன். ஆனால் எப்படியோ குடிப் பழக்கம் வந்துவிட்டது. திருமணம் முடித்தால் திருந்தி விடுவான் என்று கல்யாணம் செய்து வைத்தது. நாங்கள் பெண்களாய் கல்யாணத்திற்குப் போயிருந்தோம்.

அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து சாப்பாடு எடுக்க வரும்போது அழகாய் எண்ணெய் வைத்து சீவி, வலை போட்டு கொண்டை போட்டு அயர்ன் பண்ணின புடவை நல்ல இறக்கமாய் கட்டி அழகாய் வந்தது. எங்கள் மாமனார் வெளியில் உட்கார்ந்து இருந்தவர் ஆரோக்கியம்மா ஒரு bag மாத்திரம் மாட்டி இருந்தால் ஆபீஸ் போகுற மாறி இருப்ப என்று கிண்டல் செய்தார். வெட்கிய சிரிப்புடன் என் மருமக வேலை. இனிமேல் இப்படித்தான் வெளிய போகணும் என்று அவளே எண்ணெய் வச்சு கொண்டை போட்டு விட்டாள் என்று மகிழ்ச்சியாக சொன்னாங்க. அப்புறம் எப்போதும் மருமக புராணம்தான். கட்டு செட்டா குடும்பம் நடத்தி ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனாலும் அவனின் குடிபழக்கத்தை அவளால் மாற்ற முடியல. அவன் அளவுக்கு மீறி குடித்துவிட்டு வரும்போது அவனை பயப்படுத்த நெருப்பு வச்சிக்கப் போவதாக மிரட்டி வருவாள். பிறகு கொஞ்ச நாள் குடிக்காம இருப்பான். மறுபடியும் கொஞ்ச கொஞ்சமாய் ஆரம்பிப்பான். ஒருநாள் இரவு இப்படி மிரட்டும்போது உண்மைலேயே நெருப்புப் பிடித்து எரிந்து ரேவதியைப் போல இரண்டு மூன்று நாட்கள் நொந்து அலறி இறந்துபோனாள். அதற்குபிறகு அந்தக் குடும்பம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. ஆனால் குழந்தையை மாத்திரம் அந்தப் பெண்ணின் பெற்றோர் எடுத்துக் கொண்டு போய்ட்டாங்க. அந்தப் பெண்ணை என்னால் மறக்கவே முடியாது.

“செல்லாத பணம்” ரேவதி. அவளுடைய படிப்பிற்கும் சூழ்நிலைக்கும் ரவி மாதிரி ஒரு பையனை சைட் அடிக்கக் கூட முடியாது. ஆனால் அவனை கல்யாணம் பண்ணி ஆறு வருஷங்கள் எல்லாப் பாடும் பட்டு போய் சேர்ந்தாள்.. ஏன் அம்மா, அப்பா, அண்ணன் பேச்சை மீறி எல்லாருடைய சாபத்தையும் வாங்கி இவனை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்று கடைசி வரைக்கும் அவளுக்கே தெரியல. கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல வேலைக்குப் போய் பொருளாதார ரீதியாய் முன்னுக்கு வந்து விடலாம், அப்பா அம்மா அப்ப ஏத்துக்குவாங்க என்றுதான் அவள் தன் தோழியும் அண்ணியும் ஆன அருண்மொழியிடம் சொல்கிறாள். ஆனால் அவளால் வீட்டை விட்டே போக முடியவில்லை.

கதையிலேயே நிறைய இப்படி பண்ணியிருக்கலாம் என்று வருகிறது. அண்ணனும், அப்பாவும் ரவியை கூப்பிட்டு கண்டிச்சிருக்கலாம், போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாம். நிறைய பணம் கொடுத்திருக்கலாம். என்னும் என்னென்னவோ. ஒருவேளை மாறியிருக்குமோ அதுவும் தெரியாது. ஆனால் வண்டிக்கு கட்ட வேண்டிய தவணைப் பணத்தை அம்மாட்டப் போய் வாங்கிட்டு வந்ததும் அதில் இருந்து பணம் எடுத்துட்டுப் போய் குடிச்சிட்டு வரவனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவன் முன்னேறப் போறதில்லை. தான் இளவரசியாய் வாழ்ந்த வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரியைப் போல் வெளியே இரந்து நிற்கிறாள். ஒருவேளை பெற்றோர் பார்த்துத் திருமணம் முடித்திருந்தால் அவள் வருகையே அவர்களுக்கு ஒரு கொண்டாட்டமான நிகழ்வாய் இருந்திருக்கும். அப்பா இதை வாங்கிட்டு வாங்க, அம்மா இதை செஞ்சுக் கொடுங்க என்று கால் மேல் கால் போட்டுக்கொண்டு அரட்டி உருட்டி இருப்பாள்.

ஆனால் அவளுடைய குழந்தைகள்தான் கடைசியில் பாவம். இரண்டு பெண் குழந்தைகள். எங்குமே அவர்கள் வரவில்லை. ரேவதி தன் அம்மா வீட்டிற்குக் கூட அழைத்துக் கொண்டு போனதில்லை. கடைசியில் ரேவதியின் பெற்றோரும் பொறுப்பேற்றுக் கொள்வது போல் வரவில்லை. குடிகார அப்பனிடமும், வாய் திறக்காத தாத்தாவிடமும், எங்க என்ன பேசுவது என்று தெரியாமல் வம்பிழுத்துக் கொண்டு இருக்கும் அப்பாயிடமும், முதிர் கன்னியான அத்தையிடமும் வளருங்களா என்றும் தெரியவில்லை. கேஸ் விசாரிக்க வந்த போலீஸ் ஒருவன்தான் முழு கதையிலும் அந்தக் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுகிறான். ஏனென்றால் அவனும் நெருப்பு வைத்துக் கொண்ட தாயின் மகன். ரேவதி ரவியைப் பார்த்த உடனே அவளுடைய மரணத்தின் கருவியை அவளே தேர்ந்தெடுத்து விட்டாள். வேற யாரையும் எனக்குப் பார்தீங்கனா நெருப்பு வைத்துக்கொள்வேன் என்றுதான் தாயிடம் மிரட்டி திருமணம் செய்து கொள்கிறாள். அந்த நெருப்பு ஆறு வருடங்கள் காத்திருந்து அவளைக் கொண்டு போனது.

ரவி அருண்மொழியிடம் கொடுக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட். நான் சல்லிப்பயதான். ஆனால் நீங்க பெரிய மனுஷத்தனமாய் நடந்துக்கலையே. உங்க பணம்தான் அவளை எரிச்சது என்று. ஏன் இந்தப் பெண்கள் இவனை மாதிரி ஒரு ஆளை தேர்ந்தேடுக்குதுங்க. விதிதான். வேறென்ன சொல்வது. எப்படி வேணாலும் நடத்திருக்கலாம். ஆனால் ஒன்றே ஒன்றுதான் நடந்தது. “ஆகுதி”.

டெய்ஸி பிரிஸ்பேன்

இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்

முந்தைய கட்டுரைதலித்துக்கள், கேரள கம்யூனிசம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவயதடைதலும் வயதாவதும் -ஒரு கடிதம்