கருணாகரன் கட்டுரைகள்- விதைகள் நிறைந்த கூடை

கருணாகரன்

அன்பின் திசைகள் வாங்க

இலங்கையில் ஒரு கொடிய உள்நாட்டுப்போர் நடந்து முடிந்திருந்தாலும் அதைப்பற்றிய பதிவுகள் மிகக்குறைவு என்றே சொல்லவேண்டும். புனைவாகவும் கட்டுரையாகவும். பலகாரணங்கள் அதற்குண்டு. இதைப்போன்ற ஒரு நிகழ்வு ஐரோப்பாவில் நடந்திருந்தால் அனுபவப்பதிவுகள் குவிந்திருக்கும். அவற்றிலிருந்து பேரிலக்கியங்கள் எழுந்திருக்கும். இங்கே அது நிகழாமல் போனமைக்கு முதன்மைக்காரணம் எழுதும்பயிற்சியை நம் கல்விமுறை அளிக்கவில்லை என்பதே. பெரும்பாலானவர்களுக்கு நேரடியான தட்டையான ‘காம்போசிஷன்’ எழுத வருகிறதே ஒழிய விவரிப்பும் சித்தரிப்பும் இயலவில்லை.

இந்தியாவில் உருவான மாபெரும் வரலாற்று நிகழ்வுகள் பதிவாகாமலே போய்விட்டதைப்பற்றி ராய் மாக்ஸாம் போன்ற அயல்நாட்டு எழுத்தாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். இரு பெரும் பஞ்சங்களைப்பற்றிய பதிவுகள் அனேகமகா இல்லை. அதற்கு முன்புநடந்த போர்கள் பெரும்பாலும் அயல்நாட்டவரின் ஒற்றைவரிக்குறிப்புகள் வழியாகவே நமக்குத்தெரிகின்றன. இரு உலகப்போர்களில் ஈடுபட்ட தமிழர்களில் நினைவுக்குறிப்புகளை பெரும்பாலும் எவரும் எழுதவில்லை. பர்மா, மலாயாவிலிருந்து புலம்பெயர்ந்த நீண்ட பெரும்பயணங்களை தமிழர் நடத்தியிருந்தாலும் வெ.சாமிநாத சர்மாவின் பர்மா நடைவழிக்குறிப்புகள் மட்டுமே கிடைக்கிறது.

இந்தியச் சுதந்திரப்போர் பற்றியேகூட தலைவர்களின் அனுபவப்பதிவுகள் உள்ளன. அவையே மிகக்குறைவுதான். கோவை அய்யாமுத்து. க.சந்தானம், தி.சே.சௌ.ராஜன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை, திருவிக, சுத்தானந்த பாரதியார் போன்றவர்களின் தன்வரலாறுகள் குறிப்பிடத்தக்கவை. அதன்பின்னர் நடந்த முதல் தேர்தல், மொழிவழிமாநிலப்பிரிவினைப்போர், இந்தி எதிர்ப்புப்போராட்டம் ஆகியவை பற்றிக்கூட விரிவான தன்வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. எழுதப்பட்ட குறிப்புகள்கூட மிக அடிப்படையான செய்திகளை மிகச்சுருக்கமான மொழியில் சொல்பவை.

நமக்குத்தேவை பருவட்டான செய்திகள் அல்ல. இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டு மீண்ட ஒருவரின் குறிப்பு இப்படி இருக்கிறது . ‘எகிப்தில் பஸ்ராவில் எங்கள் படை நின்றிருந்தது. எட்டு நாட்கள் குண்டுவீச்சு நிகழ்ந்தது. நாங்கள் உயிர்தப்பி அங்கிருந்து கெய்ரோவுக்கு சென்றோம். அங்கிருந்து….’ இதனால் எப்பயனும் இல்லை. எழுதுபவருக்கு நினைவுமீள உதவும். என்ன நடந்தது என்று எழுத ஒரு கூர்நோக்கும், நினைவுத்திறனும், மொழிப்பயிற்சியும் தேவை. எழுத்தில் நுண்செய்திகளுக்கே முதன்மை இடம். பஸ்ராவில் அந்த முகாம் எப்படி இருந்தது? முட்கம்பி போடப்பட்டிருந்தா? காவல்மாடங்கள் எப்படி இருந்தன? எந்தெந்த ஊர் வீரர்கள் அங்கே இருந்தனர். என்ன உணவு அளிக்கப்பட்டது. தாக்குதல் எப்படி நடைபெற்றது? அப்போதிருந்த உணர்வுகள் என்னென்ன?

அவற்றை எழுத வெறும் நினைவுப்பதிவு மட்டும் போதாது. கிட்டத்தட்ட ஒரு கனவுபோல முன்புநிகழ்ந்தவற்றை மீட்டு எடுக்கவேண்டும். அதற்குக் கற்பனைவேண்டும். நிகழாதவற்றை எழுதுவது மட்டுமல்ல, நிகழ்ந்தவற்றை மீண்டும் எழுதுவதும் கற்பனையால்தான் இயலும். அக்கற்பனை இல்லாத தன்வரலாறுகள் வெறும் செய்திகளகாவே எஞ்சும்- அவற்றுக்கு வரலாற்றாய்வுக்கன்றி வேறெதற்கும் பயனில்லை. அக்கற்பனை பொய் அல்ல, உண்மையை தொகுத்துக்கொள்ளும் பொதுச்சரடு. நுண்செய்திகளால் பருவட்டான செய்திகளை செறிவாக்கும் உத்தி

அக்கற்பனை உண்மையை சற்றே உருமாற்றுகிறது என்பது உண்மை. நினைவுகளை கற்பனையால் தொகுக்கையில் நிகழ்ந்தவற்றிலேயே சிலவற்றுக்கு உணர்வுசார்ந்த முக்கியத்துவம் மிகுகிறது. சில விஷயங்கள் நம் நினைவில் குறியீடாகப் பதிந்துவிடுகின்றன.அவற்றை மையப்படுத்தி நாம் அந்நிகழ்வை தொகுப்போம். அத்தொகுப்பில் சில செய்திகள் சற்று மாறுபடலாம், சில செய்திகள் விடுபடலாம். அப்படி நிகழ்வது நல்லது. அதன்விளைவாக அந்நிகழ்வில் எழுதுபவன் உணர்ந்த அக உண்மை துலங்கியிருப்பதைக் காணலாம்.

வெறுமே தகவல்களுக்காக படிப்பவர்களுக்கு அவற்றிலுள்ள செய்திகள் ’நம்பகத்தன்மை அற்றவை’ என்று தோன்றும். ஆனால் அத்தகைய தகவல்பதிவுகள் ஒருபோதும் காட்டாத உணர்வுகளை, நுண்வாழ்க்கைச் சித்தரிப்பை அத்தகைய எழுத்தே நமக்கு அளிக்கிறது. அத்தகைய எழுத்துக்கே இலக்கியத்தில் இடம் உள்ளது. எங்கே பொய் பிழையாக ஆகிறதென்றால் தன்னை மையப்படுத்தும்பொருட்டோ தன் அரசியலின்பொருட்டோ வேண்டுமென்றே நிகழ்வுகளை திரிக்கும்போதுதான். அதை வாசகன் எளிதில் அடையாளம் காணமுடியும்.

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளில் கருணாகரனின் குறிப்புகளுக்கு ஓர் இடமுண்டு. அவை போராட்ட காலம் முழுக்க களத்திலிருந்த ஒருவரின் நினைவுப்பதிவுகள். அத்துடன் தன்முனைப்போ கொள்கைத்திரிப்போ இல்லாதவை.அன்பின் திசைகள் என்ற பேரில் தொகுக்கப்பட்டுள்ள நினைவுக்குறிப்புகள் வெவ்வேறு இதழ்களில் வெளியானவை. இவை ஈழத்து மக்கள் தங்கள் நினைவுகளை தங்களுக்குள் பேசிப்பரிமாறிக்கொண்ட நிகழ்வின் பதிவுகள் என்று சொல்லலாம்.ஒருவகையான அவசரக்குறிப்புகளாகவே இவை உள்ளன

போர்க்கால நிகழ்ச்சிகள் விரைந்த சொற்களாகச் சொல்லப்படுகின்றன. குண்டுகள் தொடர்ச்சியாக விழ அலைபாயும் மக்களை பதறிக்குலையும் எறும்புப்புற்று என காணமுடிகிறது– தூரமும் காலமும் அளித்த தொலைவிலிருந்துகொண்டு. இன்று ஈழப்போராட்டம் தமிழகத்தில் சிலருடைய கற்பனைச்சாகசமாகவும் இனப்பற்றாகவும் இலங்கையில் சிலரின் சிலவகை வெறிகளாகவும் மட்டுமே எஞ்சியிருக்கும் இக்காலகட்டத்தில் இந்நூல் சித்தரிக்கும் மானுட அழிவும் துயரமும் போர் என்றால் உண்மையில் என்ன என்பதைக் காட்டுகிறது.

தன் குழந்தையின் கை குண்டுவீச்சில் துண்டாகிப்போக அந்த கையை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலையும் தமயந்தி டீச்சரின் கதை ஒரு சிறுகதைக்குரிய சித்தரிப்பு. கையிழந்து மகன் பிழைத்துக்கொண்டான். ஆனால் அதன்பின் டீச்சரின் துயர் ஆழமானதாக ஆகிறது, கையில்லாமல் இவன் என்ன செய்வான், செத்திருந்திருக்கலாமே என அக்கணத்தில் அவள் எண்ணினாள். அவ்வாறு எண்ணியதை நினைத்து நினைத்து மீண்டும் கண்ணீர்விடுகிறாள்.

பன்னிரு தோழர்களில் ஒருவன் எஞ்சி கதைசொல்லும் அனுபவக்குறிப்பில் ஒரு முள் நடுங்கி நடுங்கி வெவ்வேறு இளைஞர்களின் வாழ்க்கையை ஓரிரு வரிகளில் சொல்கிறது. இயக்கத்தில் சேர்கிறார்கள், தப்பி ஓடி வெளிநாடுகளில் அடைக்கலமாகி அனைத்தையும் மறந்து வேறொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். அரேபியா சென்று செல்வம் சேர்த்து ஊருக்குவந்து தொழில்செய்து அனைத்தையும் இழக்கிறார்கள். ஒரு முழு வாழ்க்கைச்சித்தரிப்பே ஒரு கட்டுரையில் வந்துசெல்கிறது

அதில் ஆர்வமூட்டும் ஒரு கதை. வசந்தன் ஊரில் ஒரு தாழ்ந்தசாதிப் பெண்ணை காதலித்து உறவில் இருக்கிறான். ஆனால் திருமணப்பேச்சை எடுத்தால் அவன் வீட்டார் ஒத்துக்கொள்ளவில்லை. “என்னடா செய்யப்போகிறாய்?”என்றால் “பாப்பம்” என்கிறான். இந்த “பாப்பம்” என்பது ஈழத்தமிழரின் அடிப்படையான சொல்லாட்சியும் மனநிலையும் என அ.முத்துலிங்கம் அவருடைய கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார்.

அவள் தமையன் இயக்கத்தில் இருக்கிறான். அவள் அவனிடம் புகார் சொல்ல அவர்கள் கூப்பிட்டு விசாரிக்கிறார்கள். அவன் அதையே சாக்காகச் சொல்லி அவளை கைவிடுகிறான். தன்னை அவமதித்ததாக குமுறுகிறான். குடும்பம் அவனை இந்தியாவுக்கு அனுப்ப அவளும் இந்தியாவுக்கு அவனை தேடிச்சென்று கண்டுபிடிக்கிறாள். அங்கே அவனுடன் சிலகாலம் வாழ்கிறாள். அவன் அங்கிருந்து லெபனான் செல்கிறான். அவள் விடாமல் லெபனானுக்கு துரத்திச் செல்கிறாள். அங்கும் சிலநாட்கள் வாழ்கிறார்கள். அவன் அங்கிருந்து ஜெர்மனிக்குச் சென்றுவிடுகிறான். அவள் பணமிழந்து வேறுவழியில்லாமல் கண்ணீருடன் இலங்கை திரும்புகிறாள்.

அவள் அவனிடம் எதிர்பார்த்தது என்ன? இப்படி துரத்திச்சென்று எதை அடைய நினைத்தாள்? விடாப்பிடியாக துரத்திவரும் பெண்ணை அவன் எப்படி பார்த்தான்? அவளால் பிடிபட்டதும் உடனே எப்படி அவன் அவளுடன் குடும்பம் நடத்தினான்? அப்போது அன்பான கணவனாக இருந்தானா, சண்டைபோட்டானா? ஆழமான கேள்விகள். ஒரு சிறந்த புனைவுக்கான களம்.

நுணுக்கமான வாழ்க்கைச்சித்திரங்கள் வந்தபடியே இருக்கின்றன இக்குறிப்புகளில். கடும் உழைப்பாளியான பவுணின் மகன் ஈழப்போராளிக்குழுவில் சேர்ந்து இரு கைகளையும் இழந்து நந்திக்கடல்பகுதியில் பிடிபட்டு கம்பிவலை முகாம்களில் இருந்து தந்தையிடம் மீள்கிறான். தன் இடத்தைவிட்டு உள்ளூர் அகதியாக அலைந்து திருந்து இழந்து மீண்டு மகனை அடைகிறான் பவுண்.

அவனுடைய மீட்புக்காக அளிக்கப்படும் நிதிகளைப் பெற ஒரு வங்கிக்கணக்கு திறக்கிறார்கள். அதன்பொருட்டு வங்கிக்குச் செல்லும் அவனிடம் படிவத்தில் கையொப்பமோ ரேகையோ வைக்கும்படிச் சொல்கிறார்கள். பவுண் அழுவது அப்போதுதான். கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவதற்கு நிகரான இந்நிலை ஈழப்போரின் இயல்பை குறியீடாகக் காட்டுவதாகவும் தோன்றியது

சிறுகட்டுரைகளிலேயே ஒரு நாவலை காணமுடிகிறது. மாலைநான்கு மணிக்கே யானைகள் வந்து சாலையில் நின்றிருக்கும் சிற்றூரான மாங்குளம் சுற்றிலும் இருந்த காடுகளால் வேட்டைக்கு உகந்தது. வேட்டையிறைச்சி தின்னாதவர்களே இல்லை. அங்கே ராணுவ முகாம் அமைகிறது. புலிகள் தாக்குகிறார்கள். ராணுவம் திருப்பி தாக்குகிறது. மாங்குளத்தை புலிகள் பிடிக்கிறார்கள். ராணுவம் திரும்ப பிடிக்கிறது. ஆனால் மாங்குளத்தின் காடு அழிந்தே போகிறது. யானைகளே இல்லை. மாங்குளம் நகரமாகிவிட்டது. காடு நினைவில் எஞ்சுகிறது.ஃபாதர் ஜேம்ஸ் பத்திநாதர் சொல்கிறார் “எல்லாப்பாடுகளையும் சுமப்போம்”

சிறுசிறு சித்திரங்கள் வழியாக அன்றைய அல்லல்களை, அதிலிருந்து மீண்டபின் எழும் சலிப்பை பதிவுசெய்யும் இச்சிறுநூல் முளைக்காத விதைகளாலனது. இதன் கட்டுரைகளில் சில தொடர்பற்ற செய்திக்குறிப்புகள். போர் மற்றும் மீட்பு சார்ந்த நினைவுக்குறிப்புகளாக மட்டும் தொகுத்திருந்தால் இதற்கு ஒருமை உருவாகியிருக்கும்

மீளும் நட்பு

நட்புகள்

‘யாரும் திரும்பவில்லை’

அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா

முந்தைய கட்டுரைநெல்லையில்…
அடுத்த கட்டுரைபிரயாகை -சுரேஷ் பிரதீப்