ஜெ
முகநூலில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.
ஒருமுறை ஜெயமொகன் சபர்மதி பயணம் பற்றிய ஒரு கட்டுரையில் நேரடி அனுபவம் இன்றி கூகுள் துணையோடு எழுதியதால் அந்த பயணத்தின் பாதையில் பூகோள ரீதியாக பெரும்பிழை இருந்ததாக ஒரு எழுத்தாளர் நண்பர் டெல்லியில் என்னை சந்தித்தபோது வருத்தப்பட்டார். அதுவும் இப்போது தேவை இல்லாமல் நினைவுக்கு வருகிறது.
பின்குறிப்பு- ஜெயமோகன் மீது எத்தவகையான வன்மமும் எனக்கு கிடையாது. அவர் எழுத்துக்களை தொடர்ந்து படிக்கிறவன் நான்
உங்கள் பயணங்கள் எல்லாமே முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டவை என எனக்குத்தெரியும். ஆனாலும் முகநூலில் என்ன நிகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன்
குமார் மகாலிங்கம்
***
அன்புள்ள குமார்
எவன் இதை எழுதியிருப்பான் என தெரியவில்லை, அறிந்துகொள்ளவும் ஆர்வமில்லை. நான் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்றது 1981ல். அதைப்பற்றி ஒரு வரிகூட எழுதியதுமில்லை. இந்த ஆசாமி சொல்லும் வம்பு வேறு ஒரு எழுத்தாளருடன் சம்பந்தப்பட்டது. நாஞ்சில்நாடன் அதை எங்கோ எழுதியிருந்தார். அதை எங்கோ தோராயமாகத் தெரிந்துகொண்டு என்மேல் கொண்டுவைக்கிறான். இதை எவரும் மறுக்கப்போவதில்லை. ஆறுமாதம் கழித்து இதை வேறு ஒருவன் மேற்கோள் காட்டுவான். அது நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். இந்தக்காலகட்டத்தின் பெரும்சிக்கல் இது.
இதைப்போன்ற கீழ்மை நிறைந்த வம்புகளை எப்போதுமே சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம், இதை அன்றி எதையுமே அறியாத ஒரு கூட்டம், எப்போதும் உள்ளது. இந்தக் கீழ்மகனின் இக்குறிப்பிட்ட வம்பை நான் ஆதாரபூர்வமாக மறுத்துவிட முடியும். ஆனால் இவன் என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால், அதன்பின் நான் தனிப்பட்டமுறையில் சொன்னதாக கீழ்மைநிறைந்த வம்புகளை இதேபோல இணையத்தில் எடுத்துவிட்டிருந்தால், என்ன செய்யமுடியும்? மறுப்பதற்கு ஆதாரமா தேடிப்போகமுடியும்?
இப்படி ஆளுமைகளைச் சிறுமைசெய்வதன் வழியாக ஒர் அடையாளத்தை ஈட்டிக்கொள்ள முயல்கிறார்கள். இந்த கூற்றிலேயே ஒரு எழுத்தாளர் நண்பர் டெல்லியில் என்னை சந்தித்தபோது என்ற வரியைக் கவனியுங்கள். இது மட்டுமே இவனுக்கு முக்கியமானது. இதை எழுதத்தான் இந்த வம்பு. ஒரு சில எழுத்தாளர்களுடன் முகம்தெரியுமளவுக்கு ஒரு பழக்கம் இருக்கும், அவ்வளவுதான். இவன் என் எழுத்தையோ வேறு எவருடைய எழுத்தையுமோ வாசிக்கக்கூடியவனாக இருக்க வாய்ப்பில்லை. இவனுக்கும் இலக்கியத்திற்கும் தொடர்பே இருக்காது.
ஒவ்வொருநாளும் எவரேனும் எதையேனும் இப்படிச் சுட்டிக்காட்டி விளக்கம் கோருகிறார்கள். உண்மையில் இங்கே எழுத்தாளர்களுக்கு இந்தக் கீழ்மக்கள் மிகப்பெரிய தொல்லை.புகைப்படம் எடுப்பது, பொது இடங்களில் தெரிந்தவர்களாக பழகுவது என ஒரு முன்னடையாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.அதன்பின் அதையே சான்றாக்கி வம்புகளைப் பரப்புவார்கள். முன்பெல்லாம் அது வாய்ப்பேச்சிலேயே போய்விடும். இப்போது முகநூல் அதற்கான ஊடகம். எதையும் எழுதலாம், எழுதப்படுபவர் மேல் வாசிப்பவர்களுக்கு வெறுப்போ பொறாமையோ இருந்தால் கூசாமல் அதைப் பரப்புவார்கள்.
இந்த எச்சரிக்கையுணர்ச்சியால் உண்மையான வாசகர்களை நம்மிடமிருந்து அகற்றிவிடவும் கூடாது. கடுமையானவர்களாக, நண்பர்களிடமிருந்து அன்னியமானவர்களாக ஆகிவிடக்கூடாது. ஆகவே இவர்களைமுழுமையாகத் தவிர்க்க முடியாது. தெரிந்துகொண்டபின் அகற்றிக்கொள்ளலாம், அவ்வளவுதான் சாத்தியம்.
அடிப்படைநெறி என ஏதேனும் கொண்டவர்கள் முதலில் இந்தக் கீழ்மக்களின் சொல்லில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளவேண்டும். எதன்பொருட்டென்றாலும் எச்சூழலில் என்றாலும் இத்தகைய இழிந்தோருடன் தொடர்புகொள்வதென்பது நம்மையும் இழிவுநோக்கியே கொண்டுசெல்லும்
ஜெ
Hi ,