‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 59

tigயுதிஷ்டிரரின் அரசவை இருக்கும் படைமுன்னணி நோக்கி அரவானும் ஸ்வேதனும் சென்றனர். அரவான் புரவியில் ஏற மறுத்துவிட்டான். “என்னை கண்டாலே புரவிகள் மிரளும்…” என்றான். “ஏன்?” என்றான் ஸ்வேதன். “புரவிகள் நாகங்களை அஞ்சுகின்றன.” அவன் அருகே சென்றதும் புரவி விழிகளை உருட்டி மெய்ப்புகொண்டு மெல்ல கனைத்தபடி பின்னடி வைத்தது. மூக்கை விடைத்து வாய்திறந்து தலையை ஆட்டியது. “நீ எப்படி வருவாய்?” என்றான் ஸ்வேதன். அரவான் “நான் புரவியைவிட விரைவாக நடப்பேன். நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நான் உடன் வருகிறேன்” என்றான்.

படைகள் நடுவே செல்லும் வழியிலெல்லாம் அரவான் சொல்நிலைக்காது பேசிக்கொண்டே வந்தான். “இத்தனை பெரிய படை இங்கிருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. உண்மை, இதைவிடப் பெரிய படை அங்கிருப்பது. ஆனால் அதை முதலில் பார்த்தபோது படையை மதிப்பிட எனக்கு தெரியவில்லை. தொலைவிலிருந்து பார்த்தபோது பெரிய நீர்நிலையொன்றை பார்ப்பதுபோல் தோன்றியது. ஆம், அதன் ஓசையும் அலைகளும் தெய்வங்கள் விளையாடும்பொருட்டு அமைக்கப்பட்ட விந்தையான ஒரு நீர்நிலை என்றே எனக்கு தோன்றச் செய்தன. அருகணையுந்தோறும் அதை ஊனுடல்களால் ஆன பெருங்காடென்று எண்ணத்தலைப்பட்டேன். மேலும் அருகணைந்தபோது அது மானுடரால் ஆன ஒரு சுவர் என்றும் உள்ளே நுழைந்த பின்னர் மானுட உடல்களை அடுக்கிக் கட்டப்பட்ட வீடுகளின் நிரை என்றும் தோன்றியது.”

“அதன் பேருரு என் சித்தம் கடந்த ஒன்றாக இருந்தமையால் அதை நோக்காமல் சிறுகாட்சிகளில் விழியூன்றத் தொடங்கினேன். படைக்கலங்கள் ஒவ்வொன்றும் விந்தையானவையாக இருந்தன. நீண்ட மூங்கில்களின் முனையில் சேவலின் பின்தூவல்போல் அலகு வளைந்த ஓர் கருவியை கண்டேன். அது என்ன என்று கேட்டேன். அதன் பேர் வளரி என்றும் சுழற்றி புரவிகளின் குதிகால் தசையை அதனால் அறுத்துவிட முடியுமென்றும் அதன்பின் அப்புரவி ஒருபக்கமாக சரிந்து அதன் மேலிருப்பவரை கீழே தள்ளி தானும் விழுந்துவிடும் என்றும் சொன்னார்கள். அக்கணமே பிறிதொரு வளரியால் அப்படை வீரனின் கழுத்தை அறுத்துவிட முடியும். எறிந்தபின் திரும்பி வரும் வளைகத்தியை பார்த்தேன். கூர்முனைகொண்ட விந்தையான சகடங்கள். காற்றில் மிதந்து பறக்கும் தகடுகள். அம்பு முனைகளிலேயே எத்தனை வேறுபாடுகள்! நாகவால் என கூரியவை, நாகபடம் என அகன்றவை. நாக உடல் என மின்னுபவை. நாகமென வளைந்தவை.”

“மனிதர்கள் மனிதர்களை எப்படியெல்லாம் கொல்கிறார்கள்! விலங்குகளின் கொம்புகளை, பற்களை, நகங்களை, கொடுக்குகளை, செதில்வாலை படைக்கலங்களென உருவாக்கியிருக்கிறார்கள். படைக்கலங்களில் மிகக் கூரியது நாகப்பல். அது மட்டும் அவர்களிடமில்லை” என்றான் அரவான். “அம்பு முனைகள் அனைத்துமே பறவைகளின் அலகுகளில் இருந்து பெற்ற வடிவங்கள் என்றார் கௌரவர். அக்கணமே என் நோக்கு திசைமாறியது. வாள்கள் அனைத்தும் புல்லிதழ்களின் வடிவங்களே என்றும் வேல்களெல்லாம் நாணல்களே என்றும் உணர்ந்துகொண்டபோது நான் பிறிதொரு காட்டிலிருக்கும் உணர்வை அடைந்தேன். புல் முதிர்ந்து கதிர்கொள்வதுபோல் மானுடர்கள் படைக்கலம் கொள்கிறார்கள்.”

“அங்கிருக்கும் அத்தனை விலங்குகளும் படை பயின்றவை என்பது எனக்களித்த வியப்பு இன்னும் தொடர்கிறது. நான் கண்ட விலங்குகள் அனைத்தும் மானுடர் அறியா பிறிதொரு உலகில் வாழ்பவை. அவற்றின் மொழியும் உள்ளமும் முற்றிலும் வேறு. இங்கு யானைகள் மானுடனுடன் உரையாடின. புரவிகளும் ஆணையிட்டன, ஆணைகளுக்கு பணிந்தன. மேலே பறக்கும் கொடிகளை யானைகள் அறிந்திருக்கின்றன என்று அறிந்த கணம் திகைத்து அசையாமல் நின்றுவிட்டேன். அவை பறையோசையைக் கேட்டு புரிந்துகொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. கொடிகளை அவை விந்தையான மலர்கள் என்றோ வானில் பறக்கும் பறவைகள் என்றோ அல்லவா எண்ணவேண்டும்? இந்த யானைகளும் புரவிகளும் காட்டையே அறிந்ததில்லை என்று எண்ணுகின்றேன். காட்டில் அவை பூசலிடுவதுண்டு. இப்படி பெருந்திரளென அணிவகுத்து போருக்குச் செல்வதில்லை. போரென்பதே மானுடர் உருவாக்கிக்கொண்ட ஒன்று என்று அதன்பிறகு எண்ணினேன்.”

“எங்கள் காடுகளில் நாகர்களுக்குள் பூசல் நிகழ்வதுண்டு. ஒருவருக்கொருவர் இருவருக்கிருவர் என்பதே அங்குள்ள நெறி. எந்நிலையிலும் நூற்றுவருக்கு மேல் போரில் ஈடுபடுவதில்லை. வென்றவர்கள் தோற்றவர்களின் காலடியில் தங்கள் படைக்கலங்களை வைத்து மும்முறை தலையை நிலந்தொட வணங்க வேண்டும். அதன் பிறகு இருவரும் தோள்தழுவி ஒற்றைக்கோப்பையில் மதுவருந்தி மகிழ்வார்கள். இங்கு போருக்குப் பின் உணவுண்பதுண்டா என்று கேட்டேன். போர் முற்றிலும் முடிந்த பிறகு செறுகளத்தில் பேரூட்டு நிகழுமென்றும் அதற்கு உண்டாட்டு என்று பெயரென்றும் சொன்னார்கள். போர் எப்போது முடியுமென்று கேட்டேன். ஏதேனும் ஒரு தரப்பு பெரும்பகுதி கொன்றொழிக்கப்பட்டு எஞ்சியவர்கள் இங்கிருந்து தப்பியோடிய பின்பு என்றார்கள். எதிர்தரப்பின் அரசர்கள் கொல்லப்படவேண்டும், அல்லது சிறைபிடிக்கப்படவேண்டும் என்றனர்.”

“இங்கு வரும் வரை நான் அதை எண்ணியும் பார்த்திருக்கவில்லை. அப்படியென்றால் இங்கு படைகொண்டு நின்றிருக்கும் இரு தரப்பினரில் எவரேனும் ஒருவர் இன்னும் சில நாட்களில் கொல்லப்படப் போகிறார், அல்லது கொண்ட அனைத்தையும் இழந்து இழிவுகொண்டு கண்காணாமல் தப்பியோடப் போகிறார். ஒன்று நானறிந்தேன், எந்நிலையிலும் கௌரவ மூத்தவர் அடிபணியமாட்டார். எந்தை பணிவதைப்பற்றி எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. அவ்வண்ணமெனில் இன்னும் சில நாட்களில் இங்கு இருவரில் ஒருவரின் இறப்பு நிகழும்” என்றான். “ஆம்” என்றான் ஸ்வேதன். “அதை நாம் பார்க்காமலிருக்க ஒரே வழி முன்னரே நாம் இறப்பதே.” அரவான் அதிலிருந்த நகையாடலை உணராமல் தலையசைத்தான்.

ஸ்வேதன் “நீ எப்படி எங்கள் மொழியை இத்தனை நன்றாக பேசுகிறாய்?” என்றான். அவன் திகைத்து “ஆம், இது மானுட மொழி அல்லவா?” என்றபின் “என் அன்னை எனக்கு கற்பித்தார். இது என் தந்தையின் மொழி என்று சொன்னார். என்றாவது நான் என் தந்தையிடம் இந்த மொழியில் பேசவேண்டும் என்றார்.” ஸ்வேதன் “எழுதவும் படிக்கவும் உன்னால் முடியுமா?” என்று கேட்டான். “இல்லை, என் அன்னை சில எழுத்துக்களை கற்பித்தார். அவை மணலில் நண்டுகள் போலவும் இலைகளில் எறும்புகள் போலவும் இருந்தன. நான் எழுதும்போது அவை ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றாக உருக்கொண்டன. அன்னை என்னிடம் எழுத்துக்கள் உருமாறலாகாது என்றார். அன்னையே நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் வளர்ந்து உருமாறியும் அழிந்துகொண்டும்தான் இருக்கின்றன என்றேன். அழியாதவையே எழுத்துக்கள் என்றார். அழியாமல் நின்றிருக்கும் நண்டுகளையும் எறும்புகளையும் என்னால் எண்ணிப்பார்க்கவே இயலவில்லை. பலமுறை முயன்றபின் அன்னை உன்னால் எப்போதும் எழுத்துக்களை கற்றுக்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை என்றார்.”

ஸ்வேதன் “ஆனால் உங்கள் நாகர் குடியில் நூற்றுக்கணக்கான குழூஉக்குறி குறிப்புகள் உண்டல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அவையனைத்தும் மாறிக்கொண்டே இருப்பவை. எழுதுபவனுக்கும் பெறுபவனுக்கும் நடுவே அவை வலையிலாடும் சிலந்திபோல இருமுனையும் தொட்டு ஆடிக்கொண்டிருக்கும்” என்றான். ஸ்வேதன் புன்னகைத்தான். “மாறாதனவற்றால் ஆனது மானுட உலகு. எங்கள் இல்லங்கள் மழைதோறும் உருமாறும். எங்கள் காடு நாள்தோறும் வளர்ந்துகொண்டிருக்கும். எங்கள் தெய்வங்கள் நெளிந்தபடியே இருப்பவை” என்றான் அரவான்.

அந்தியில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறிய குடிலை சென்றடைந்தனர். அங்கு தங்கள் பொருட்களை வைத்துக்கொண்டு ஓய்வெடுத்தனர். அந்தி இறங்கத் தொடங்கியிருந்தது. தொலைவிலெங்கோ முதல் முரசு முழங்கியது. அதை கேட்டு ஒன்று தொட்டு பிறிதென படையின் அனைத்து முரசுகளும் முழங்கின. “முகில்களில் இடியொலிப்பதுபோல!” என்று அரவான் சொன்னான். “அல்லது களிறுகள் உரையாடிக்கொள்வதுபோல” என்றான். “ஒவ்வொன்றையும் பிறிதொன்றுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டுமா என்ன?” என்று ஸ்வேதன் கேட்டான். “ஆம், ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டுத்தானே இரண்டையும் புரிந்துகொள்ளமுடியும்?” என்றான் அரவான்.  ஸ்வேதன் சிரித்து “மெய்தான், நாங்களும் அதைத்தான் செய்கிறோம். ஆனால் எங்கள் மொழியில் அந்த ஒப்புமைகள் முன்னரே மூதாதையரால் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. அவற்றை இளமையிலேயே கற்று திருப்பிச் சொல்வதை செய்து கொண்டிருக்கிறோம். நீ ஒவ்வொரு கணமும் புதிதாக நீயே உருவாக்கிக்கொள்கிறாய்” என்றான்.

படைகள் பின்னாலிருந்து விரைவழிந்தன. ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் நடுவே உள்ள இடைவெளி பலமடங்காக பெருக அவை ஆங்காங்கே நிலைகொண்டன. அரவான் “விந்தைதான்! ஒரு பெரும் படைப்பிரிவை உலர்ந்த அரக்கை இழுத்து நீட்ட முடிவதுபோல் நீளம்கொள்ளச்செய்ய முடிகிறது” என்றான். பின்னர் திரும்பிப் பார்த்து “வற்றிய நதியில் நீர்க்குட்டைகள் போல்” என்றான். ஸ்வேதன் “உன்னுடன் ஒருநாள் இருந்தால் இப்புடவியில் பார்க்கும் அனைத்தையும் பிறிதொன்றுடன் ஒப்பிட்டுக்கொண்டிருப்பேன்” என்றான். “மெய்யாகவே இப்புடவியிலுள்ள அனைத்தும் பிறவற்றுடன் ஏதேனும் ஒருவகையில் ஒப்பிடத்தக்கவையே” என்று அரவான் சொன்னான்.

ஸ்வேதன் மீண்டும் நகைத்து “ஒவ்வொரு சொற்றொடரிலும் வியக்க வைக்கிறாய்” என்றான். “உன் மொழியே விந்தையாக உள்ளது. நான் மலைமைந்தர்கள் எவருடனும் இத்தனை நெருக்கமாக இருந்ததிலை.” அரவான் “நீங்கள் மலைமக்களலல்லவா?” என்று கேட்டான். ஸ்வேதன் “யார் சொன்னது?” என்று கேட்டான். “நான் வரும்போது என்னுடன் வந்த படைத்தலைவன் உங்களைப்பற்றி சொன்னான். நீங்கள் குலாடகுடி எனும் மலைக்குடியை சார்ந்தவர்கள் என்றான்” என்றான் அரவான். “நாங்கள் மலைக்குடியாக இருந்த காலம் பலநூறாண்டுகளுக்கு முன்பு” என்றான் ஸ்வேதன். “அப்படியென்றால் உங்களை ஏன் இன்னமும் மலைக்குடியென்று சொல்கிறார்கள்?” என்றான் அரவான். “வாழ்வால் உள்ளத்தால் நாங்கள் மலைக்குடியல்லாமலாகி நெடுங்காலமாகிறது. ஆனால் பாரதவர்ஷத்தின் அவைகளில் மலைக்குடியல்லாமல் ஆவதற்கு இன்னும் சில நூறாண்டுகளாகும்” என்றான் ஸ்வேதன். “ஏன்?” என்று அரவான் கேட்டான். “அதை புரிந்துகொண்டால் பாரதவர்ஷத்தின் அரசியலையே புரிந்துகொண்டதைப்போல” என்றான் ஸ்வேதன்.

அனைத்து படைப்பிரிவினரும் நிரைவகுத்து வெவ்வேறு சரடுகளாக பிரிந்தனர். “நீர்க்கலம் அனைத்து துளைகளூடாக பீறிடுவதுபோல” என்று அரவான் சொன்னான். ஸ்வேதன் தலையில் கைவைத்து “உண்மையில் இதை எப்படி நீ ஒப்புமை செய்யப்போகிறாய் என்றுதான் நான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். “அவர்கள் கலைகிறார்கள். இரவுக்குள் தங்கள் உடற்கடன்களை முடித்து உணவுண்டு படுப்பார்கள்” என்றான் அரவான். “கலைவது என்றால் கல்விழுந்த எறும்புக்கூடுபோல என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்படி நிரையெனவும் கலையமுடியும் என்பது விந்தை.” ஸ்வேதன் “அவ்வாறு கலைந்தால் இப்பெரும்படை மீண்டும் ஒருங்கிணைவதெப்படி? ஒவ்வொருவரும் இத்திரளில் வழி தவறிவிடுவார்கள்” என்றான். அரவான் “எறும்புகள் வழி தவறுவதில்லை. மிகச் சில கணங்களிலேயே அவை மீண்டும் நிரை வகுத்துவிடும்” என்றான். “எறும்புகளை நோக்கித்தான் மிகப் பெரும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எறும்புகளின் முழுமையை எந்தப் படையும் இன்றுவரை அடைந்ததில்லை” என்று ஸ்வேதன் சொன்னான்.

குடிலுக்குள் தங்கள் பொதிகளை வைத்து அவிழ்த்து உள்ளிருந்து மாற்றாடையை எடுத்துக்கொண்டனர். ஸ்வேதன் வெளியே சென்று நின்று தன் பழைய மரவுரி ஆடையை அவிழ்த்து பலமுறை உதறி அதைக்கொண்டு தன் உடலை துடைத்துக்கொண்டான். பின்னர் அதை குடிலின் வெளியே மூங்கில் கழிகளில் தொங்கவிட்டான். அரவான் “என்னிடம் ஒரு மாற்றுத்தோலாடையே உள்ளது” என்றான். “நீ இப்படைப்பிரிவில் சேருவதாக இருந்தால் பொதுவண்ணத்தில் உனக்கு ஆடையை அளிப்பார்கள். எனக்கும் ஆடை வண்ணங்கள் இன்னும் அளிக்கப்படவில்லை” என்றான் ஸ்வேதன். “நாம் எப்போது அரசரை சந்திப்போம்?” என்று அரவான் கேட்டான். “நாளை காலை” என்று ஸ்வேதன் சொன்னான்.

படையின் ஓசை கேட்கும்தோறும் மாறிவந்தது. முதலில் மெல்ல கலைவோசை எழுந்தது. அது பெருகி முழக்கமென்றாயிற்று. அதில் வெவ்வேறு அலைகளை கேட்க முடிந்தது பின்னர் சீரான ஒழுக்காக மாறி அமையத்தொடங்கியது. சற்று நேரத்தில் சீவிடுகளின் முழக்கம்போல் அமைதியென தோன்றச்செய்யும் கார்வையென்றாகியது. விழிமூடி அமர்ந்தாலே அப்படைகள் என்ன செய்கின்றன என்று சொல்ல முடியுமென்று ஸ்வேதன் எண்ணினான். படைவீரர்கள் கலைந்து தங்கள் நண்பர்களையும் அணுக்கர்களையும் சந்தித்து நட்புச் சொல்லாடினர். பின்னர் ஆடைகளைக் களைந்து புழுதி போக உதறி காற்றில் ஆறவிட்டு மாற்றாடைகளை அணிந்துகொண்டனர். பெரும்பாலும் இடை மட்டும் மறைக்கும் சிற்றாடை அது. படைகளின் விளிம்பு வட்டம் முழுக்க புகைபோடப்பட்டு கொசுக்கள் அண்டாமல் செய்யப்பட்டன. அப்புகையில் போடப்பட்ட வேப்பந்தழைகளின் மணம் காற்றில் தைலம்போல முறுகி நின்றது. பின்னர் அவர்கள் ஒருவரோடொருவர் உரையாடியபடி சிறு குழுக்களாக ஆங்காங்கே அமைந்தனர்.

உணவு வண்டிகள் படைநடுவே அமைந்த சாலைகளினூடாக ஒற்றைக்காளைகளால் இழுத்துக் கொண்டுவரப்பட்டன. படைவீரர்கள் பதின்மருக்கு ஒருவர் என்ற கணக்கில் பெரிய கொப்பரைகளுடனும் தாலங்களுடனும் சென்று நின்று வாங்கிக்கொண்டனர். அவற்றை சிறிய வட்டங்களாகக் கூடி நடுவே வைத்து இலைத்தொன்னைகளில் அள்ளி பரிமாறிக்கொண்டு உண்ணத்தொடங்கினர். உணவு அப்படைகளில் பரவி எங்கும் சென்று நிறைந்தபடியே வருவதை அவன் ஒலியில் இருந்து உளவிழிக் காட்சியாக மாற்றிக்கொண்டான். ஒரு பெருங்கலம் நீர் நிறைந்து விளிம்பை அடைந்து அமைதிகொள்வதுபோல. உணவு பரிமாறி முடித்ததும் படையின் ஓசை மிகவும் குறைந்தது. தொலைவிலிருந்து மதுக்குடங்கள் வருவதை உணரமுடிந்தது. இலைகளை உலைத்தபடி பெருங்காற்றொன்று அணுகுவதுபோல அவர்களைச் சூழ்ந்து ஓசை சுழன்று கடந்து சென்றது.

ஏவலன் ஒருவன் அவர்களுக்கு உணவை கொண்டுவந்து வைத்தான். உலர்ந்த ஊனிட்டு காய்கறிகள் உடன் சேர்த்து வேகவைக்கப்பட்ட ஊன்சோறு. குடுவைகளில் கள். அரவான் “நான் இதிலுள்ள ஊனை மட்டுமே உண்ணவிரும்புகிறேன்” என்றான். ஸ்வேதன் திரும்பி ஏவலர்களிடம் “இவர் ஊன்மட்டுமே உண்பவர். ஊன்சோற்றிலிருந்து ஊன்துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து தாலத்தில் கொண்டு வா” என்றான். அரவான் மதுவை தொடவில்லை. “உங்கள் குடியில் மது அருந்துவதில்லையா?” என்றான் ஸ்வேதன். “நாங்கள் அருந்தும் மது வேறுவகையானது. அது உரகத்தின் நஞ்சிலிருந்து எடுக்கப்படுவது. சில சொட்டுகளை நாக்கின் அடியில் விட்டு வாய்மூடி அமர்ந்திருப்போம். சற்று நேரத்தில் குருதியெங்கும் அனல் பரவ, காதுகள் கொதிக்க, களிமயக்கு ஏறத்தொடங்கும். எங்களுடைய மது நஞ்சுதான். மானுடர் அவற்றிலொரு துளி அருந்தினாலே உடற்தசைகள் நீலம் கொள்ளும். வலிப்பு வந்து உயிர்துறப்பார்கள். அந்நஞ்சுக்குப் பழகியவர்களுக்கு பிற மது அனைத்தும் நீர் மட்டுமே” என்றான் அரவான்.

ஸ்வேதன் அப்புளித்த மதுவை சிறிது சிறிதாக அருந்தி ஊன் சோற்றை உண்டான். “நான் இன்று காலை உணவுண்டது. உச்சிப்பொழுதுக்குரிய உணவை அங்கிருந்து கிளம்புகையில் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டேன்” என்றான். அரவானுக்கு கொண்டுவந்து வைக்கப்பட்ட ஊன் துண்டுகளை அவன் விரைந்து உண்டான். கைகளை இருமுறை உதறி துடைத்தபின் எழுந்து நின்று இடையில் கைவைத்து தொலைதூரம் வரை பரந்திருந்த பந்தங்களின் ஒளிப்புள்ளிப்பெருக்கை பார்த்தான். “விண்மீன்கள்போல, அல்லவா?” என்று ஸ்வேதன் கேட்டான். அவன் திரும்பி “அல்ல, அவை என்னவென்று எனக்கு சொல்லத்தெரியவில்லை” என்றான். பின்னர் “ஆம், வாழைக்காட்டில் மின்மினிகள்போல” என்றான். பின்னர் “இருண்ட நாகத்தின் செதில்மினுப்புப் புள்ளிகள்” என்றான்.

மிக விரைவிலேயே படைவீரர்கள் துயிலத்தொடங்கினர். ஸ்வேதன் “அனைவரும் களைத்திருப்பார்கள். மேலும் அவர்களுக்கு பேசவும் ஒன்றுமிருக்காது” என்றான். அரவான் திரும்பிப்பார்த்து “ஏன், படைகள் நடந்து கொண்டிருக்கையில் பேச இயலாதே? அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளவேண்டுமென்றால் இப்போது மட்டும்தானே?” என்றான். “மெய்தான். படை நகரத் தொடங்குகையில் முதலிரு நாட்கள் அணிவகுப்பு கலைக்கப்பட்ட மறுகணமே பேசத்தொடங்குவார்கள். ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒவ்வொன்று இருக்கும். அணுகிக்கேட்டால் விந்தையானவற்றை எல்லாம் அறியமுடியும். இப்படைப் பிரிவை எப்படி வழிநடத்தவேண்டுமென்றும், இப்போரை எவ்வாறு நடத்தி முடிக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு படைவீரனுக்கும் முழுமையான திட்டங்களிருக்கும். அவற்றை உளக்கொந்தளிப்புடன் உரத்த குரலில் மாறி மாறி சொல்லிக்கொள்வார்கள். மறுப்பார்கள், எள்ளி நகையாடுவார்கள். நுணுக்கமாக விளக்குவார்கள். ஓரிரு நாட்களில் சொல்லடங்கிவிடும். ஏனெனில் ஒரு முழுப்பகலும் அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். அன்று மாலை சொல்வதற்கென நிகழ்வுகள் ஏதுமிருக்காது.”

“அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் நிகழ்வனவற்றை சொல்லலாமே?” என்றான் அரவான். ”உள்ளங்களுக்குள் ஒன்றும் நிகழ்வதில்லை. உள்ளம் என்பது தனிமையில் நிகழும் ஒன்று. இப்பெரும்படையின் ஒரு துளியாக ஆகுகையில் முதலில் உள்ளமென்பது இல்லாமலாகிறது. மீண்டும் மீண்டும் ஓரிரு சொற்றொடர்களே உள்ளமென்று நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பழைய பாடலொன்றில் படைவீரர்களின் உள்ளம் குதிரை குளம்படி தாளத்தில் ஓடும் நான்கு சொற்களாலானது என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் முற்றாகவே இப்பெரும்படை சொல்லவிந்துவிட்டிருக்கும். அந்தியில் படைக்கலைவை அறிவிக்கையில்கூட ஓசையின்றி பிரிவார்கள். வட்டங்களாக அமர்ந்திருக்கையில் கையசைவுகளால் பேசிக்கொள்வார்கள். அனைத்து விழிகளும் ஒன்றேபோல மாறிவிட்டிருக்கும். சொல்லின்மை உருவாக்கும் விந்தையானதோர் ஒளி மட்டுமே எஞ்சியிருக்கும்” என்று ஸ்வேதன் சொன்னான்.

மிக விரைவிலேயே முழுப்படையும் துயில்கொள்ளத் தொடங்கியது. காவல்மாடங்களின்மேல் எரிந்த பந்தங்கள் அங்கே நின்றிருந்த படைவீரர்களை வானில் மிதக்கும் கந்தர்வர்கள்போல் காட்டின. புரவியிலேறிய இரவுக்காவலர்கள் மெல்லிய சீர்நடையில் நடுவே சென்ற பாதையினூடாக கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அரவான் “நாங்கள் திறந்த வெளியில் உறங்குவதில்லை. எப்போதும் மரப்பொந்துகளுக்குள்ளோ புற்றுகளுக்குள்ளோ உடல் ஒடுக்கி துயில்வது எங்கள் வழக்கம்” என்றான். “திறந்த வெளியில் துயில்பவை அரவுகளே இல்லையோ?” என்று ஸ்வேதன் கேட்டான். “மரக்கிளையில் உறங்குவது மலைப்பாம்பு ஒன்றுதான். ஆனால் அது தன்னை மரத்தோடு பிணைத்துக்கொண்டு மரமென்று மாறிவிட்டிருக்கும். தன்னை வெளிக்காட்டித் துயிலும் அரவொன்று இல்லை” என்றான் அரவான். “நீ இக்குடிலுக்குள் சென்று துயிலலாம்” என்றான் ஸ்வேதன். “நான் பெரும்பாலும் திறந்த வெளியிலேயே துயில்பவன், இங்கிருக்கும் இந்தக் காற்றுக்கு பழகியவன்.”

ஸ்வேதன் பாயை உதறி பெரிய கூழாங்கற்களை காலால் தட்டி அகற்றி நிலத்தில் விரித்தான். கைகளை தலைக்கு வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான். குதிரைக்குளம்படிகள் அணுகிவரும் ஓசையைக்கேட்டு கையூன்றி எழுந்து பார்த்தான். மெல்லிய நடையில் அணுகிவந்த புரவியிலிருந்து சுருதகீர்த்தி இறங்கி “அரவுக்குடியினன் இங்குதான் இருக்கிறானா?” என்றான். ஸ்வேதன் “ஆம்” என்றான். சுருதகீர்த்தி இறங்கிவர உள்ளிருந்து அரவான் வெளிவந்து “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். சுருதகீர்த்தி “நான் உன்னிடம் ஓர் ஆணையை கூறிவிட்டுச் செல்லவே வந்தேன். எந்தை கூறியது சரியென்று என் குடிலுக்குச் சென்றபோது உணர்ந்தேன். அங்கு உடன்பிறந்தவர் இருந்தனர். மூத்தவர் பிரதிவிந்தியன் இவ்வாணையை பிறப்பித்தார். அதை உன்னிடம் கூறவேண்டியது என் கடமை” என்றான்.

“தந்தையின் ஆணையை மீற உனக்கு உரிமை இல்லை. இவ்விரவிலேயே கிளம்பி மீண்டும் உனது காடுகளுக்கு செல்! உன் அன்னையிடம் சொல், தந்தை உன்னை தன் மைந்தனென ஏற்று இப்படைகளுக்குள் பணியாற்ற ஒப்புதல் அளிக்கவில்லை என்று” என்றான். “நான் என் சொற்களை முன்னரே கூறிவிட்டேன், மூத்தவரே” என்றான் அரவான். “மூத்தவரை எதிர்த்துப் பேசுகிறாயா? இது பாண்டவ மைந்தர்களில் மூத்தவராகிய பிரதிவிந்தியனின் ஆணை. இன்று வரை எங்களில் எவரும் மறுத்தொரு சொல் உரைத்ததில்லை” என்றான் சுருதகீர்த்தி. “நான் என் அன்னையின் பொருட்டு மறுத்துரைக்க கடன்பட்டிருக்கிறேன். என் அன்னை அளித்த ஆணை மாறாதது. அதை கடக்க எனக்கு உரிமையில்லை” என்றான் அரவான்.

சுருதகீர்த்தி “அறிவிலி, உன் குடிக்குரிய அறிவின்மையை காட்டுகிறாய். இங்கு வந்து படையில் சேருவதென்றால் என்னவென்று தெரியுமா? தந்தை ஏன் அத்தனை துயரடைந்தாரென்று புரிகிறதா உனக்கு?” என்றான். “புரிகிறது” என்று அரவான் சொன்னான். சுருதகீர்த்தி என்ன சொல்வதென்றறியாமல் தடுமாறி பின் “தந்தை நீ வாழவேண்டுமென்று விரும்புகிறார். எங்களில் தந்தையின் முழுதுருவும் அழகும் அமைந்தவன் நீ. இப்புவியில் அவர் வடிவாக நீ வாழவேண்டும். நம் தந்தை உன் குடிக்கு கனிந்து அளித்த பெருங்கொடை நீ. எண்ணுக, இப்போர் முடிந்தால் இங்குள்ள அத்தனை அரசர்களும் ஆற்றல் குன்றியிருப்பார்கள்! அன்று உன் குடிக்கு நீ படைத்தலைமை ஏற்றால் நீங்கள் நெடுங்காலத்துக்குமுன் கொண்டிருந்து பின் இழந்த அனைத்தையும் மீட்க முடியும். உன் குடிக்கு நீ தலைவனாவாய். இந்நிலத்தில் வெல்லமுடியாத பேரரசனும் ஆவாய். உன் கொடிவழிகள் இங்கு சிறப்புற்று வாழும். தந்தை உனக்களித்த ஆணை அது. சற்றுமுன் தமையனும் அதையே சொன்னார்” என்றான்.

குரல் கனிய “அவை ஆணையல்ல, உளம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றாவது உனக்கு புரிகிறதா?” என்றான் சுருதகீர்த்தி. “ஆம், மூத்தவரே. பிற அனைத்தையும்விட எனக்கு புரிந்தது அதுவே. ஆனால் எந்தையும் தமையனும் தெய்வங்களும்கூட என் அன்னையின் ஆணையிலிருந்து என்னை விலக்க இயலாது. இங்கு படைமுகம் நின்று தந்தையின் பொருட்டு போரிடவே வந்தேன். தன் பிறவிப் பெருங்கடமை ஒன்றை ஆற்ற தந்தை வில்லெடுத்து களம் நிற்கையில் வேறொன்று கருதி காட்டில் தயங்கி இருந்தேன் என்னும் இழிசொல் எனக்கு வரலாகாது. என் குடிக்கு அது பெருமையல்ல” என்றான் அரவான்.

சுருதகீர்த்தி தளர்ந்து திரும்பி ஸ்வேதனிடம் “எவ்வகையிலேனும் இந்த அறிவிலிக்கு இதை புரிய வைக்கமுடியுமா உங்களால்?” என்றான். “அவர்கள் வேறுவகை குடிகள், இளவரசே. பெரும்பாலும் இறுதி முடிவெடுத்த பின்னரே செயலை தொடங்குகிறார்கள்” என்று ஸ்வேதன் சொன்னான். சுருதகீர்த்தி பற்களைக் கடித்து கழுத்துத்தசைகள் இறுக “எந்தைக்கு நிமித்திகர் உரைத்த சொல்லை எண்ணி அவர் அஞ்சிக்கொண்டிருக்கிறார். அவர் மைந்தரில் எவரும் வாழமாட்டார்கள்… தெரிகிறதா? இதற்கு மேலும் சொல்லவேண்டுமா உனக்கு?” என்றான். அரவான் “ஆம், எங்கள் நிமித்திகரும் என்னைப்பற்றி அதையே உரைத்தனர்” என்றான். சுருதகீர்த்தி அரவானை சில கணங்கள் நோக்கிய பின் “இதன்பொருட்டு உன் குடி துயருறும்” என்றபின் திரும்பிச் சென்றான்.

தன் புரவியை அணுகி அதன் சேணத்தில் கால்வைத்தேறி அமர்ந்து திரும்பி அரவானைப் பார்த்து “நீ தந்தைக்கு பெருந்துயரொன்றை அளிக்கிறாய். இப்போது தன் அறையில் அவர் துயிலின்றி இருப்பார்” என்றான். அரவான் “என் ஊழ் அது என்றால் மாற்று பிறிதில்லை” என்றான். சுருதகீர்த்தி புரவியைத் தட்டி பெருநடையில் இருளுக்குள் சென்றான். ஒருக்களித்து தரையில் கையூன்றி வானை நோக்கிக்கொண்டிருந்த  அரவான் அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் அக்கணமே மறந்தவன்போல விண்மீன்களை பார்த்தான். பின்னர் சிறுகுடிலுக்குள் ஓசையிலாது நுழைந்து மறைந்தான். பாம்பென அவன் நெளிந்து உட்செல்வதாக ஒருகணம் தோன்ற ஸ்வேதன் புன்னகை புரிந்தான்.

முந்தைய கட்டுரைகம்போடியாவில் இருந்து…
அடுத்த கட்டுரைநூலகம்- கடிதங்கள்