அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா?

ramdas10

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

பப்பா ராம்தாஸ் (Papa Ramdas) ‌‌குறித்து நீங்கள் அறிந்திருக்கக்கூடும். கேரளாவில் காசர்கோடில் உள்ள காஞ்ஞாங்காடை(kanhangad) சேர்ந்தவர். ஆன்மிக நாட்டம் கொண்டு நாடு முழுவதும் சுற்றித் திரிந்தார். அவருடைய அனுபவங்களின் தொகுப்பாக அவர் எழுதிய நூல் தான் in quest of god. இது தமிழிலும் இலவச தரவிறக்கமாக கிடைக்கிறது.

மிக எளிய மனம் கொண்டவர். நான் முன்பு தயானந்தரின் கீதை விளக்கத்தை முன்பு வாசித்தப் போது அனைத்தையும் ‘ஈஸ்வர பிரசாத’மாகவே ஏற்றுக் கொள்ளுதல் தான் கர்ம யோகத்தின் மையச் செய்தி என்றார். அது அப்போது எனக்கு புரியவில்லை. மிகவும் குழம்பினேன். இன்பம் துன்பம் சுகம் துக்கம் லாபம் நஷ்டம் எல்லா விதமான நிலைகளிலும் இது இறைவன் செயல் என்று இருக்க முடியுமா? மிக எளிமையான சிக்கலற்ற மனம் கொண்டவர்களுக்கே அது சாத்தியம் என ராம்தாசின் அனுபவ குறிப்புகளை வாசிக்கும் போது அறிந்து கொண்டேன்.

அனைத்தும் ராம் தான், ராம் அனைத்தையும் கவனித்து கொள்கிறான் பார்த்துக் கொள்கிறார் என நம்புகிறார். ராம்தாஸ் அவன் கையில் ஒரு கருவிதான். இந்த மைய கருத்தே நூல் முழுவதும் இடம் பெறுகிறது. அவர் அலைந்து திரியும் நாடோடியாக(பரிவராஜகர்) நாடு முழுவதும் ரயிலிலும் கால் நடையாகவும் பிற சாது சாமியார்களுடனும் தனியாகவும் சுற்றித் திரிவதே கதையை மிகவும் சுவாரசியமாக கொண்டு செல்கிறது.  இத்தகைய எளிமையான மனநிலைகளையும் நிபந்தனையற்ற நம்பிக்கையையும் சிரத்தையையும் கடந்து நாம் எவ்வளவு தூரம் வந்து விட்டோம் ஒரு நூற்றாண்டில் என்பது சற்றே வருத்தத்தையும் வியப்பையும் தருகிறது.

பக்தி பூர்வமாக வாசிப்பவர்களுக்கு இதுவே போதுமானது. ஆனால் மேலதிக  அறிவைக்கொண்டு சற்றே பகுத்தாய்ந்தால் சில பலவற்றோடு உடன்படமுடியவில்லை. ஒரு ஹிப்பி தமிழ் தாய் வாழ்த்துக்கோ நாட்டுப் பண் பாடப்படும் போதோ எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்றால் அது முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடியதே என்று நீங்கள் சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்த வரிகள் தான் நினைவுக்கு வந்தன.(நினைவிலிருந்து சொல்கிறேன் நீங்கள் எழுதியது இதே வார்த்தைகள் அல்ல என்றே நினைக்கிறேன்). பயணச்சீட்டு எடுக்காமல் நினைத்த ரயிலில் ஏறுவது பரிசோதகர் வந்து வழியிலேயே இறக்கி விட்டாலும் அவமதிப்பாக பேசினாலும் நடந்து கொண்டாலும் கூட அதை ராமின் செயல் என்றே எடுத்துக் கொள்வது… ஒரு நோக்கில் இத்தகைய துறவிகளில் போலிகள் மலிந்து போனதே நம் நாட்டில் வறுமை தாண்டவமாட காரணம் என்பார் ஓஷோ.

ஆனால் ராம்தாசை பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு பிறகு காசர்கோடு திரும்பும் அவர் 1931ல் அங்கே ஒரு ஆசிரமம் அமைக்கிறார். யாரையும் மறுக்காத வணிக நோக்கமற்ற ஆசிரமமாகவே இன்று வரை அது இருந்து வருகிறது. ஒரு முறை போக வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் அகண்ட ராம நாம பஜனை எனக்கு ஒத்து வருமா என தெரியவில்லை…

கதையில் நெருடலாக இருந்தது மனைவி மகளை விட்டு அவர் சந்நியாசம் பெற்றது நவீன சிந்தனைகளால் பாழ்பட்ட  என் மனம் அவர்களை குறித்தே நினைத்துக் கொண்டிருந்தது… ரொம்ப crazy ஆன புத்தகங்களையே தேடிப் பிடித்து வாசித்து வருகிறேன்…. இப்படி ஒரு கடிதம் எழுதி உங்கள் நேரத்தை விரயமாக்கியதற்காக மன்னிக்கவும். இத்துடன் அந்த நூலின் தமிழ் பிடிஎஃப்பும் இணைத்துள்ளேன்

சிவக்குமார்

சென்னை

wandering-monk-1840-padre-art

அன்புள்ள சிவக்குமார்,

காஞ்ஞாங்காட்டில் இரண்டு முக்கியமான ஆன்மிக மையங்கள் உள்ளன. ஒன்று, நித்யானந்தர் மடம். அவரே பாறையைக்குடைந்து உருவாக்கிய குகைகள் கொண்டது. நித்யானந்தர் பின்னர் மும்பையில் சமாதியடைந்தார். இன்னொன்று ராமதாஸின் மடம். அங்கே இன்றும் இரண்டுவேளை ராமஜபம் நிகழ்கிறது. நான் சிலமுறை சென்றுள்ளேன். காஞ்ஞாங்காட்டில் உள்ள அறியப்படாத ஒரு ஆன்மிகநிலையத்தில் சிலநாட்கள் இருந்து யோகம் பயின்றுள்ளேன்.

விஷ்ணுபுரத்தில்  பிங்கலனிடம் ஆசிரியர் கேட்பார். “வாழ்வும் அழிவும் நன்மையும் தீமையும் எல்லாம் விஷ்ணுவே என்றால் மிச்சமின்றி உன் உள்ளம் அதை ஏற்குமா?” அவன் “ஏற்காது, ஆனால்…” என ஆரம்பிப்பான்.  “அவ்வளவுதான், உன் பாதை பக்தியால் ஆனது அல்ல. அது ஞானத்தின் பாதை. அவ்வழியில் எத்தனை இடர் இருந்தாலும் உன்னுடையது அதுதான். கிளம்பு” என கிளப்பிவிட்டுவிடுவார். அவன் ஞானத்தின் பாதையில் தத்தளித்து அஞ்சி மீண்டும் பக்திக்கே வருவான். ஆனால் ஞானத்தின் துளி எஞ்சும்வரை திரும்பி வரவே முடியாது என உணர்வான்

அதையே உங்களுக்கும் சொல்வேன். அனைத்தும் ராமனே என்று ராமதாஸ் கொள்வது அவருடைய முழுமையான பக்தியால். அது ஓர் உளநிலை. அறிவின் ஒரு துளி அதற்குத் தடையாக எழும் என்றாலும் கூட அது உங்கள் வழி அல்ல. ஒன்று நம்பிக்கையின் வழி. இன்னொன்று வினவுவதன் வழி. இரண்டும் வேறு வேறு. ஆனால் இரண்டும் மெய்நாடி முன்னகர்ந்தால் சென்றுசேர்வது ஒரே இடத்தைத்தான்.

அறிவைக்கொண்டு பக்தியை மதிப்பிட முடியாது. ஏனென்றால் அறிவுக்கு அறிவால் மதிப்பிடமுடியாதை எதுவும் மடமை என்றே தோன்றும். அதேபோலத்தான் பக்தர்களுக்கு அறிவார்ந்த அனைத்தும் வெற்று ஆணவமாகவும் அலைக்கழிப்பாகவும் தோன்றும். இரு மரபிலும் மறுதரப்பை மறுதலிக்கும் போக்கைக் காணலாம். இரண்டையும் ஏற்று ஒரு சமநிலையை உருவக்குவது கீதை.

ராமதாஸ் போல அலையும் பலர் இங்குள்ளனர். நானும் சிறுகாலம் அவ்வாறு அலைந்தவன். அவர்கள் என்றும் இங்கிருப்பார்கள். அவர்களே இந்தியாவின் மெய்நாட்டத்தின் ஆதாரம். அவர்களால்தான் இந்தியா தன் எல்லைகளை தானே கடக்கிறது. அவர்களால்தான் இந்தியா ஆன்மிகமாக நிலைகொள்கிறது.அவர்கள் இல்லாமலாகும்போது இந்தியா ஆன்மிகமாக அழியும். வெறும் நிலமாக, வெறும் அரசியல்களமாக, வெற்று நுகர்வுவெளியாக ஆகும்.

ஓஷோ இந்தியாவின் பெருமரபு மீது சில வினாக்களை முன்வைத்தவர், கலைத்து நோக்கியவர். அதன்பொருட்டு அவர் எல்லாவகையான மீறல்களையும் செய்தார். அவற்றில் முக்கியமானது அறமீறல், தர்க்கமீறல். மரபால் உறைந்துவிட்ட ஓர் உள்ளம் தன்னை நெகிழ்த்திக்கொள்ள ஓஷோ உதவியானவர். அதுவே அவருடைய எல்லை. அவரை முதன்மை வழிகாட்டியாக, சிந்தனையாளராகக் கொள்பவர் முழுமையான இருளையே சென்றடைவார்.

ஓஷோவின் கூற்றுக்களில் மிகப்பெரும்பாலான தருணங்களில் அடிப்படை நியாயமோ அல்லது குறைந்தபட்ச தர்க்க ஒழுங்கோ, எளிய வரலாற்றுப்புரிந்தலோ இருப்பதில்லை. அவரைப் பின்பற்றுபவர்கள் அவரை பக்தியுடன் அணுகுகிறார்கள். அவர் பக்திக்கு எதிரானவர். அவரை அறிவுடன் அணுகினால் அவரைக்கொண்டு நம்மை உடைத்துக்கொண்டு முன்னகர்வோம். அம்முன்னகர்வில் முதலில் அவரைத்தான் படி என மிதித்து கடந்து மேலே செல்வோம். அவரைப்போன்ற ஒருவருக்கும் இந்து மெய்ஞான மரபில் இடமுள்ளது என்பதே இதன் விரிவு

ஓஷோவின் கூற்றையே எடுத்துக்கொள்வோம். இந்தியாவெங்கும் அலையும் துறவிகள் ஒட்டுமொத்தமாக எத்தனைபேர் இருப்பார்கள்? ஐந்துலட்சம்? அவர்கள் உழைக்காமையால் இந்தியா வறுமை அடைந்ததா என்ன? எஞ்சியவர்கள் எல்லாம் இங்கே உழைத்துக்கொண்டிருந்ததனால் பயனில்லையா என்ன?

இந்தியா இந்து மதம் முன்வைத்த கர்மக்கொள்கையால் சோம்பேறிகளின் நிலமாக ஆகியது  என ஒரு அயோக்கியக்கூட்டம் மேலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த வீணர்கள் எவரும் உழைப்பவர்கள் அல்ல. ஒட்டுண்ணிகள். இந்தியாவின் அடித்தளத்தின் கோடானுகோடி மக்கள் இரவுபகலென இல்லாமல் உழைத்துக் கொண்டிருப்பது இவர்களின் கண்களுக்குப் படுவதில்லை.அவர்களின் உழைப்பை உண்டு அவர்களைச் சோம்பேறிகள் எனச் சொல்லும் இவ்விழிமகன்களை காறி உமிழ்வதே அறிவுடையோர் செயலாக இருக்கமுடியும்.

இந்தியாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்றுப்பூர்வமானவை. கிமு ஆறாம் நூற்றண்டு வாக்கில் இந்தப்பெருநிலம் தன் பல்லாயிரம் இனக்குழுக்களை, அவர்களின் நம்பிக்கை சார்ந்த முரண்பாடுகளை, ஆசாரவேறுபாடுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு ஒற்றைப்பெரும் சமூகமாக எழுந்தது. இங்கே பேரரசுகள் உருவாயின. தொழிலும் வணிகமும் பெருகியது. அறிவியலும் கலைகளும் பெருகி உலகுக்கே முன்மாதிரியாயின. மாபெரும் தத்துவக்கொள்கைகள் பிறந்து உலகமெங்கும் சென்றன.

ஏறத்தாழ ஆயிரத்தைநூறு ஆண்டுக்காலம் இப்பண்பாடு உச்சத்திலேயே இருந்தது. உலக வரலாற்றில் அவ்வாறு இத்தனை நீண்டகாலம் உச்சத்தில் இருந்த நாகரீகங்கள் மிகமிக அரிது. அதன் வீழ்ச்சி பத்தாம்நூற்றாண்டில் மேற்கத்தியப் பாலைவனப் படையெடுப்புகளால் தொடங்கியது. ஆனால் அவ்வாறு படைஎடுத்துக் கைப்பற்றப்பட்ட நாடுகளாகிய ஈராக், எகிப்து, ஈரான் என அனைத்தும் தன் தொன்மையின் தொடர்ச்சியை முற்றாக இழந்தன. பண்பாட்டு அறுபடலுக்கு உள்ளாயின. இந்தியா இன்றும் தன் தொன்மையான அனைத்துப் பண்பாட்டுக்கூறுகளையும் தக்கவைத்தபடி நீடிக்கிறது. இதுவும் உலகில் வேறெங்கும் நிகழாதது.

இந்தியாவின் பண்பாட்டுத்தொடக்கம் முதலே ராமதாஸ் போன்ற பல்லாயிரம் துறவிகள் இந்நாடு முழுக்க அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். அவர்களைப்பற்றி அனைத்து தொல்நூல்களும் சொல்கின்றன.  இந்தியாவின் மாபெரும் வெற்றிக்காலகட்டத்திலும் அவர்கள் இந்நாடெங்கும் பெருகியிருந்தனர். அரசர்களும் கிழார்களும் குடிகளும் அவர்களைப் பேணினர். பேரரசர்களும் அந்தப் பிச்சைக்காரர்களின் அடிபணிந்தனர். இந்நாடு அவர்களுக்குரியதாகவே என்றும் இருந்தது. சமணமும் பௌத்தமும் அந்த நிலைகொள்ளாதவர்களால்தான் நிலைநின்றன. பிக்‌ஷு [ பிச்சைக்காரன்] என்பது பௌத்தத்தின் உச்சகட்ட மெய்நிலை.

என்ன சொல்கிறார் ஓஷோ? அவர் என்ன கல்லுடைத்தாரா? மண் சுமந்தாரா? சிம்மாசனத்தில் அமர்ந்து அவர் சொன்னவற்றை, அல்லது அவர் சொன்னவற்றை விட பலமடங்கு கூர்மையும் அழகும் மெய்மையும் கொண்டவற்றைச் சொன்னவர்கள் , சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இந்த அலையும் துறவிகள். அவர்களுக்கு பதிலுக்கு இந்த நாடு அளித்தது ஒருநாளைக்கு இரண்டுபிடி சோறு மட்டுமே.

அவர்களின் சொற்களை கொஞ்சம் உருமாற்றிச் சொல்லி ரோல்ஸ்ராய்ஸ்களை வாங்கி குவித்த ஓஷோ அதைச் சொல்லலாம். ஏனென்றால் அவர் ஒரு கிறுக்கர், அதை ஏற்றுச்சொல்பவன்தான் அறிவிலி. ஓஷோ அவருடைய அனைத்து மெய்நாட்டத்துடனும் வடிகட்டிய முட்டாள் போலவும் பச்சை அயோக்கியனைப் போலவும்தான் பெரும்பாலும் பேசியிருக்கிறார் என்பதே உண்மை

இன்னொன்று, இந்த அலையும் துறவிகள் இந்தியாவுக்கு மட்டும் உரியவர்கள் அல்ல. இவர்கள் இல்லாத நாடே உலகில் இல்லை. கிறித்தவ மரபில் பெரும்பாலான புனிதர்கள் இத்தகையவர்களே. எப்போதும் பல்லாயிரம் வேரற்ற துறவிகள் [medicants] அம்மரபில் இருந்துள்ளனர். கிறித்தவம் உலகை வென்றமைக்குக் காரணம் அவர்களே. தொன்மயான பாரசீகப் பண்பாட்டில் தோன்றி இஸ்லாமிற்குள்ளும் அவர்கள் சூஃபிகளாக நீடிக்கிறார்கள். சீன தாவோ மரபில், ஜப்பானிய ஜென் மரபில் அவர்கள்தான் மையமான உயிரோட்டம்.

‘நானும் மா த்ஸே துங்கும் சேர்ந்து பிச்சை எடுத்தோம்’ என ஒரு நூல் உள்ளது. மாவோவும்அந்நூலாசிரியரும் கல்லூரி மாணவர்களாக இருக்கையில் அலையும் துறவிகளாக சீனா முழுக்க பயணம் செய்தனர். அதன் மலையாள மொழியாக்கத்தை நான் வாசித்திருக்கிறேன், மிக இளமையில். அப்பயணமே சீனா பற்றிய புரிதலை மாவோவுக்கு உருவாக்கியது. கிளம்பும்போது ‘எவரும் பிச்சை போடாவிட்டால்?’ என்று மாவோ கேட்கிறார். ‘பிச்சைக்காரன் பட்டினியால் செத்ததை பார்த்திருக்கிறீர்களா?” என இவர் கேட்கிறார். அந்தப்பண்பாடே சீனாவின் சாராம்சமான ஆன்மிகத்தை நிலைநிறுத்தியது. சீனாவின் பிச்சைக்காரர் மரபைப்பற்றி ஒரு நல்ல நூல் உண்டு. இளமையில் வாசித்தது. இணையத்தில் கண்டடைந்தேன். [Street Criers: A Cultural History of Chinese Beggars By Hanchao Lu]

இந்தியாவின் மாபெரும் ஞானிகள் அனைவரும் பிச்சை எடுத்து இந்தியாவைச் சுற்றி வந்தவர்களே. சங்கரர் முதல் விவேகானந்தர் வரை. நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் அவ்வாறு அலைந்திருக்கிறார்கள். விபூதி பூஷண் பந்த்யோபாத்யாய, வைக்கம் முகமது பஷீர், சிவராம காரந்த் என பேரிலக்கியவாதிகள் அவ்வாறு அலைந்திருக்கிறார்கள். நாம் இத்தனைச் சின்ன எழுத்தாளர்களாக இருப்பது நம்மால் அப்படி அலைய முடியவில்லை, நமக்கு இந்திய தரிசனம் இல்லை என்பதனாலாக இருக்கலாம்.

இன்னொன்றையும் இங்கே சொல்லியாகவேண்டும். இந்தியா இடர்கொண்டு இருந்த காலகட்டங்களில் எல்லாம் இந்த அலையும் துறவிகள் இந்தியாவை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். மறைந்த ஞானங்களை பாதுகாத்திருக்கிறார்கள். நம் சூழலில் எழுதப்பட்ட தன் வரலாறுகளில் அடிக்கடி வரும் கதைகள் இவை. பெரும்பாலான மருத்துவநூல்கள் ஏதேனும் துறவியால்தான் மருத்துவக் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும். அழிந்துபட்ட கோயில்கள் துறவிகளால் சுட்டிக் காட்டப்பட்டு மிண்டும் எழுப்பப் பட்டிருக்கும்.

இந்தியாவின் பஞ்சங்களில் இத்துறவிகள் கஞ்சிமடங்களை உருவாக்கி பெரும் பங்களிப்பாற்றிய கதைகள் உண்டு.கொள்ளை நோய்களில் சேவை செய்து உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியும் இருக்கிறார்கள். அப்படிப் போராடிய ஒரு துறவியர்குழுவின் உண்மைக்கதையே பங்கிம் சந்திரரால் ஆனந்தமடம் என்னும் நாவலாக எழுதப்பட்டது. வந்தே மாதரம் என்னும் அமரகீதம் அதில் உள்ளதுதான்.

அந்த மனநிலை உலகியலில் நின்று புரிந்துகொள்ளக்கூடியதோ, உலகியலில் வைத்து மதிப்பிடக்கூடியதோ அல்ல. ஓர் எளிய குடும்பஸ்தனால் அத்தகைய அதீதமனநிலைகளை அணுகக்கூட முடியாது. ஓஷோ அமர்ந்தவர் . எல்லா நிலையிலும் அவர் ஓரு ‘குடும்பஸ்தன்’. அவரால் துறவிகளைப் புரிந்துகொள்ளமுடியாது. புரிந்துகொள்ளமுடியாதவற்றின் முன் சற்றேனும் அடக்கமிருப்பது புரிந்துகொள்வதற்கான முதற்படி.

விட்டுச்செல்லுவதைப்பற்றிச் சொன்னீர்கள். தோன்றிய அக்கணமே செல்பவர்களே துறவியாக முடியும். கணக்கிட்டுநோக்க ஆரம்பிப்பவர்கள் கடைசிவரை கணக்கிட்டுக்கொண்டே இருப்பார்கள். உலகியல் கணக்குகளுக்கு முடிவே இல்லை. இது துறவுக்கு மட்டும் அல்ல உப்புபுளி விஷயங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்துக்கும் பொருந்தும்.

ஜெ

***

http://the-wanderling.com/ramdas.html

முந்தைய கட்டுரைஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4